5 லட்சம் முதலீட்டில் கைவினை முத்திரை நிறுவனம் தொடங்கி இன்று 15 லட்சம் வருட லாபம் ஈட்டும் பெண் தொழில்முனைவர்! 

புதுமையான முத்திரைகளை தயாரிக்கும் 'முத்ரா ஸ்டாம்ப்ஸ்’ நிறுவனம் தொடங்கிய வர்ஷிதா, தன் நிறுவன வளர்ச்சியோடு  வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை பல பெண்களுக்கும் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

0

கைவினை பொருட்கள் பல வடிவில் பல வகையில் நம் முன் இருக்கிறது. காலம் மாற அதற்கு ஏற்ப கைவினை பொருட்களில் பல புதுமைகளும் சேர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் முத்ரா (Mudra Stamps) நிறுவனம் புதுமையான அழகிய கைவினை முத்திரைகளை தயாரிக்கின்றனர். இவர்களே இந்தியாவின் முதல் கைவினை முத்திரை தயாரிப்பாளர்கள்.

நிறுவனர் வர்ஷிதா
நிறுவனர் வர்ஷிதா

இந்நிறுவனத்தின் நிறுவனர் சென்னையைச் சேர்ந்த வர்ஷிதா. பத்தாம் வகுப்புவரை படித்த வர்ஷிதாவிற்கு வடிவமைப்பில் அதிக ஆர்வம் இருந்தது. பள்ளியோடு படிப்பு நின்றாலும் வடிவமைப்பில் தனக்கு இருந்த ஆர்வத்தினால் டிஜிட்டல் மீடியா தொழில்நுட்பம் என்னும் சான்றிதல் படிப்பை முடித்துள்ளார். அதன் பின் பல நிறுவனங்களுக்கு வீட்டில் இருந்தபடி டிஜிட்டல் வடிவமைப்பு செய்துக் கொடுத்துள்ளார்.

“வடிவமைப்பில் ஆர்வம் அதிகம் இருந்தது; அதேப் போல் கைவினை பொருட்கள் மீதும் எனக்கு அதிக ஈடுபாடு. இவ்விரண்டையும் இணைத்து தொழில் தொடங்க வேண்டும் என யோசித்தேன்,” என தன் பயணத்தின் தொடக்கத்தை பகிர்கிறார் வர்ஷிதா.

முத்ராவின் புதுமை:

கைவினை பொருட்களுக்கும் முத்திரைக்கும் என்ன தொடர்பு என்று அனைவருக்கும் ஒரு சந்தேகம் எழும். இதுவே பலரின் கேள்வியாக இருந்தது என அதற்கான விளக்கத்தை தருகிறார் வர்ஷிதா.

முத்ரா முத்திரைகள்
முத்ரா முத்திரைகள்
“இங்கு ஃபோட்டோபாலிமர் முத்திரைகளை எவரும் தயாரிப்பதில்லை. இந்த முத்திரைகள் மூலம் பல வடிவமான வாழ்த்து மடல், ஸ்க்ராப்புக் என பலவற்றை நாம் வீட்டில் இருந்தே தயாரிக்கலாம்...”

வணிகத்திற்கு பயனபடுத்தப்படும் சீல் அல்லது முத்திரை போல் அல்லாமல் வாழ்த்து மடல், பத்திரிகை என நாம் வீட்டில் இருந்து தயாரிக்க பல வடிவில் முத்திரைகளை தயாரிக்கின்றனர். அச்சு அடித்தது போன்ற வடிவத்தை இம்முத்திரைகள் தருகின்றனர்.

“வீட்டில் இருந்து தொழில் செய்யும் பல கைவினையாளர்களின் வேலையை இம்முத்திரைகள் சுலபமாக்கும் இதுவே நான் இந்நிறுவனத்தை துவங்குவதற்கு முக்கியக் காரணம்” என்கிறார்.

இந்தியாவில் இது போன்ற முத்திரைகளை தயாரிப்பதில் இவர்களே முதன்மையானவர்கள். இதை தயாரிக்க இந்தியாவில் தயாரிப்பாளர்கள் இல்லாததால் வடிவமைப்பதோடு நின்றுவிடாமல் தன் சொந்த முதலீட்டில் கணவரின் உதவியோடு ஒரு உற்பத்தி ஆலையை நிறுவி இந்நிறுவனத்தை துவங்கியுள்ளார் வர்ஷிதா.

“டிஜிட்டல் வடிவமைப்பு முடிந்த பின் அதன் அச்சை உருவாக்கி அதன் பின் உற்பத்திக்கு செல்கிறது. எங்கள் முத்திரைகள் ஒட்டும் ரப்பர் தன்மையில் வடிவமைக்கப்படுகிறது.”

அயல்நாடு வரை வளர்ந்த முத்ரா:

கடந்த 2011 ஆம் ஆண்டு வர்ஷிதாவால் துவங்கிய ஒரு சிறு கைவினை தொழில், இரண்டு வருடத்திற்கு முன்பு தனி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அயல்நாடு வரை பல வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்நிறுவனம். வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் விற்பனையாளர்களையும் அயல்நாட்டில் சம்பாதித்துள்ளது.

“என்னுடன் பல கைவினையாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் இருந்தும் வடிவைமைப்பாளர்கள் பணிபுரிகிறார்கள்.”

பல இடங்களில் இருந்து வடிவமைப்புகள் வருவதால் அதிக புதுமையான முத்திர வடிவமைப்புகளை தங்களால் தர முடிகிறது என்கிறார் வர்ஷிதா. மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறும் தனித்துவமான முத்திரைகளை தயாரிக்கின்றனர்.

முத்ராவின் வளர்ச்சி:

இதுவரை எந்தவித விளம்பரமும் இல்லாமல் முகநூல் மற்றும் இணையம் மூலமே இந்நிறுவனத்தை வளர்த்து வருகிறார் வர்ஷிதா.

“எனக்கு கைவினை பொருட்கள் மீது ஆர்வம் அதிகம் என்பதால் அதை சார்ந்த சமூகத்தின் பலரின் தொடர்பினால் முத்ரா வளர்ச்சி அடைந்தது.”
முத்ரா முத்திரையால் செய்யப்பட்ட மடல்கள்
முத்ரா முத்திரையால் செய்யப்பட்ட மடல்கள்

முத்திரை தயாரிப்பில் துவங்கிய இந்நிறுவனம் தற்பொழுது வரையச்சு, அச்சு மை, கைவினை காகிதம் என பலவற்றை விற்கிறது.

“மக்களுக்கு இன்னும் இதன் பயன்பாடு தெரியாததால் தினமும் வலைப்பதிவு செய்து வருகிறோம். தொடக்கத்தில் இதன் தேவையை தெரிவிப்பதே சற்று சவாலாக இருந்தது,” என்கிறார்.

சென்னையைச் சேர்ந்த இந்த தாய் ஐந்து லட்ச முதலீட்டுடன் இதைத் துவங்கி தற்பொழுது வருடம் 15 லட்சம் வரை லாபம் ஈட்டுகிறார். அது மட்டுமின்றி இதன் மூலம் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை பல பெண்களுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

“எங்கள் முத்திரையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மடல்கள் மற்றும் பத்திரிக்கைகளை பார்க்கும்பொழுது மன திருப்தி கிடைக்கிறது. இதுவே தொழில்முனைவருக்கு உந்துதல்” என முடிக்கிறார் வர்ஷிதா.

https://www.instagram.com/mudracraftstamps/

Related Stories

Stories by Mahmoodha Nowshin