உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்லுவதை எளிதாக்கும் சென்னை ’Flabfit'

ஒலா, ஊபர் போன்று உடற்பயிற்சி நிலையங்களை ஒருங்கிணைக்கும் ஸ்டார்ட்-அப்! 

1

புத்தாண்டு தினத்திலோ அல்லது திடீரென்று ஒரு நாள், நம்மில் பல பேர் உடற்பயிற்சி நிலையத்தில் சேர வேண்டும், இனி ரெகுலராக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என சபதம் ஏற்போம். பெரும்பாலும் அது பாதியிலேயே நின்று போகும் அல்லது சபதமாகவே நிலைத்திடும். 

இந்த குறையை போக்க சென்னையைச சேர்ந்த ஃப்ளாப்ஃபிட் Flabfit உதவுகிறது. இதன் நிறுவனர்கள் மோஹித் ஜெயின், தருண் மற்றும் இயக்குநர் ஸ்ரீபிரகாஷ் தங்களின் தொழில்முனை நிறுவனத்தை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

தொடக்கம்

பட்டப் படிப்பு முடித்ததும் தன் குடும்பத் தொழிலான ஸ்டீல் வியாபரத்தில் இணைந்தார் மோஹித். அதில் அவ்வளவாக நாட்டம் இல்லாததால், விரைவில் சலிப்பு ஏற்பட்டது. சலிப்பிலிருந்து விடுபட அவர் தேர்ந்தெடுத்தது உடற்பயிற்சி. அவர் உறவினர் தருண் உடன் இணைந்து உடற்பயிற்சி மேற்கொண்டனர்,

"உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் நானும் தருணும் இதன் பலனை உணர்ந்தோம். இருவரும் குடும்பத் தொழிலில் இருந்து விடுபட்டு புதுசாக இந்தத் துறையில் ஏதேனும் செய்ய முற்பட்டோம்" என்று தொழில்முனை எண்ணம் தொடங்கியது குறித்து மோஹித் கூறினார். ஆறு மாத உழைப்பிற்கு பிறகு, 2017 ஜனவரி மாதம் முழு மூச்சில் இறங்கினர்.

"தினமும் கண்ணாடி முன் உங்களை ஃபிட்டாக, உடல் நலத்துடன் சுறுசுறுப்பாக காணும் பொழுது, இதுவே தன்னம்பிக்கையும் உத்வேகத்தையும் அளிக்கும். இந்த பலனை அனைவரும் தொடர்சியாக பெற வேண்டும் என்ற எண்ணமே ஃப்ளாப்ஃபிட் உருவாகக் காரணமாக அமைந்தது."
 நிறுவனர்கள் தருண் மற்றும் மோஹித் உடன் ஸ்ரீபிரகாஷ்  (நடுவில்)
 நிறுவனர்கள் தருண் மற்றும் மோஹித் உடன் ஸ்ரீபிரகாஷ்  (நடுவில்)

ஃப்ளாப்ஃபிட்டின் பயன்

"நாம் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் சந்தா அளித்து சேர்ந்தால் நாம் அங்கே  செல்லா விட்டாலும், முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாவிட்டாலும் பணம் வீணாகத்தான் போகும். இது வேலைக்குச் செல்லும் பலருக்கு தற்போதுள்ள பெரிய சவால். இதுவே உங்கள் வசதிக்கேற்ப எந்த உடற்பயிற்சி நிலையத்திலும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம் என்ற வாய்ப்பிருந்தால், பலரால் தவறாமல் இடைவெளியின்றி வெவ்வேறு நிலையங்களில் பயிற்சி மேற்கொள்ள முடியும். இதுவே ஃப்ளாப்ஃபிட்டின் நோக்கம்," என்று உருவான நோக்கம் பற்றி நம்மிடம் பகிர்ந்தார் தருண்.

ஃப்ளாப்ஃபிட் வழங்கும் "ஃப்ளாப்ஃபிட் பாஸ்" கொண்டு தற்பொழுது சென்னையில் அறுபதுக்கும் மேற்பட்ட உடற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி மேற்கொள்ளலாம். பதினைந்து நாள் முதல் நாற்பத்தைந்து நாட்கள் வரை செல்லுபடியாகக்கூடிய ஆஃபர்களில் வருகிறது ஃப்ளாப்ஃபிட் பாஸ். 

"தொடங்கிய புதிதில் காலாண்டுக்கான ஃப்ளாப்ஃபிட் பாஸ் அறிமுகப்படுத்தினோம். ஆனால் இந்த ஆஃப்ரை வாங்கியவர்கள், இதை முழுமையாக பயன்படுத்தாதை உணர்ந்தோம், எங்களின் நோக்கம் தொடர்ச்சியாக முழுமையான உடற்பயிற்சி பலனை மக்கள் பெற வேண்டும் என்பதால், குறுகிய கால ஃப்ளாப்ஃபிட் பாஸ் இப்பொழுது அறிமுகப்டுதியுள்ளோம்,"

என்று ஆரம்பக்கட்ட சாவலை விளக்கினார் ஸ்ரீபிரகாஷ்.  விளம்பரத் துறையிலிருந்து வரும் ஸ்ரீ, ஃப்ளாப்ஃபிட் பிராண்ட் முயற்சியை முன்னெடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் மாநில அளவில் டெக்தலான் போட்டியில் எட்டு முறை சாம்பியன் பட்டத்தையும், இரண்டு முறை ஜூனியர் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வளர்ச்சி

ஃப்ளாப்ஃபிட் தொடங்கிய இந்த ஆறே மாதத்தில் இராண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்த அதிவேக வளர்ச்சி,  சமீபத்தில் ஏஞ்சல் நிதியையும் இவர்களுக்கு பெற்றுத்தந்துள்ளது. இந்த நிதியை இவர்கள் தொழில்நுட்பத்தில் செலவிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

தற்பொழுது கிட்டதிட்ட 75 உடற்பயிற்சி நிலையங்களுடன் ஒப்பந்தம் முடிக்கும் தருவாயில் உள்ளனர். இது தவிர மற்ற பல உடல் நல சார்ந்த பயிற்சியையும் வகுப்பையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி சிறிய அளவில் இயங்கும் நம் அக்கம்பக்கத்தில் இருக்கும் உடற்பயிற்சி நிலையங்களும் இவர்களால் மிகுந்த பயனடைவார்கள். ஒலா மற்றும் ஊபர் எப்படி கார் ஓட்டுனர்களுக்கு ஒரு தளம் மூலம் இணைக்கிறதோ, அதே போல் இந்த சென்னை ஃப்ளாப்ஃபிட் உடற்பயிற்சி நிலையங்களை ஒருங்கிணைத்து வெற்றி காணவேண்டும் என்ற இலக்கோடு நகர்ந்து கொண்டிருக்கிறது.