ஒரு தொழில்முனைவரின் அனுபவம்: முதல் தேடல் #FundSeeking - பாகம் 6

ஒரு தொழில்முனைவோராக என் ஸ்டார்ட்அப்பிற்கு தேவையான முதல் தேடும் பயணத்தில் நான் கற்ற பாடங்களும் அனுபவங்களும்...

2

ஒரு  ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் பயணத்தில் நிதி என்ற முதலீடு எப்போது வேண்டும் என்றாலும் வெளியில் கிடைக்கும். அதற்கு முன் நாம் மூன்று முக்கிய முதலீடுகளை செய்துகொள்ள வேண்டும்.

Desire பெரும்கனவு
Happiness மகிழ்ச்சியான மனநிலை
Gratitude நன்றி உணர்வு

1. பெரும்கனவு  (Desire) 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றயவை
தள்ளினும் தள்ளாமை நீர்த்து 

ஒரு காரியத்தில் நம்மால் எந்தளவிற்கு சாதிக்க முடியும் என்பதை எந்தளவிற்கு கற்பனை பண்ணமுடியுமோ அந்தளவு தான் தீர்மானிக்கும். ஆகவே தான் வள்ளுவர் சொல்கிறார் உன்னால் எவ்வளவு பெரிதாக நினைக்க முடியுமோ அவ்வளவு பெரிதாக கனவு காண். நடக்குமா நடக்காதா என்பதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாதே.

மனோதத்துவத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படும் சிக்மண்ட் பிராயிட் வார்த்தை இன்னும் துல்லியமானது. 

"உன்னால் ஒரு விஷயத்தை கற்பனை பண்ணி பார்க்க முடிகிறது என்றால் அதை நடத்திக் காட்டும் ஆற்றல் உன்னிடம் உள்ளதால் தான் அந்த கற்பனை உனக்குள் தோன்றியது," என்கிறார்.

எது வேண்டும் எவ்வளவு வேண்டும் என்பதில் நமக்குள் தெளிவு வேண்டும். அது தான் ஒரு தொழில்முனைவோருக்கு தேவையான அடிப்படை முதலீடு. 

2. மகிழ்ச்சியான மனநிலை (Happiness)

மகிழ்ச்சியான மனநிலை என்பது வெகு இயல்பானது. ஆனால் அதை கடினமாக கற்பனை செய்து வைத்திருக்கிறோம். அல்லது அப்படி கற்பிக்கப்பட்டிருக்கிறோம். பகுத்தறிவிற்கும் நிலையான மகிழ்ச்சி மனநிலைக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. மகிழ்ச்சியான மனநிலைக்கு தடையாக இருப்பது பயம். தெனாலி படத்தில் கமலுக்கு இருக்கும் பயங்கள் பற்றி ஒரு பெரிய லிஸ்டே போடுவார். அந்த பயத்தில் 90% இந்திய சமூகத்தில் உள்ள எல்லோருக்கும் இருக்கிறது. மதவாதம், இனவாதம், மொழிவாதம், சாதிய வாதம் எல்லாமே பயத்தினால் உருவாகியவை. பயத்தை காட்டி மக்களை பணியவைக்க உருவானவை. 

மதத்தை விட பயத்தை திணிப்பது உலகில் வேறு எதுவும் இல்லை. ஒரு சிறுகூட்டம் தான் வாழ, தான் மட்டுமே வாழ வேதங்கள், இதிகாசங்கள், அறிவியல் விதிகளுக்கு ஒவ்வாத மந்திர தந்திர கதைகளை எழுப்பி மக்களை பயமுறுத்தி இயல்பான அறிவினை முடக்கி வைத்து பயத்தை உருவாக்கினார்கள். கடவுள், வேதம், சாத்தான், பேய் பிசாசு எல்லாமே பயங்கள். இத்தனை பயம் இருக்கும் ஒருவர் நிலைத்த மகிழ்ச்சியுடன் எப்படி வாழ்வார்? 

இத்தனை பெரிய மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் உருவாகும் ஸ்டார்ட்அப்பை விட தம்மாத்துண்டு நாடான சிலியில் நிறைய ஸ்டார்ட்அப்கள் உருவாகின்றன. ஒருவருக்கு பகுத்தறிவு வந்தால் மட்டுமே பயத்தை ஒழிக்க முடியும். பயம் ஒழிந்தால் மட்டுமே நீடித்த மகிழ்ச்சி கிட்டும். அதற்கு நீங்கள் நிறைய அறிவியல், வரலாறு, மன ஊக்கம் பற்றி படிக்க வேண்டும்.

3. நன்றியுணர்வு (Gratitude)

நன்றியுணர்வு மிக மிக அவசியமான முதலீடு. இது தான் வளர்ச்சிக்கான ஏணிப்படி. நாங்கள்  ஒவ்வொரு நாளும் எங்கள் ஸ்டார்ட்அப் வேலைகளை துவக்கும் முன்பும் பிரார்த்தனை செய்வோம். எந்த கடவுளிடமோ, மதத்திடமோ இல்லை. எங்கள் பிரார்த்தனை என்பது உலகத்திற்கு நன்றி சொல்வது, ஒவ்வொரு உயிருக்கும் நன்றி சொல்வது, ஒவ்வொரு அணுவிற்கும் நன்றி சொல்வது, இந்த மாபெரும் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்வது, ஒவ்வொரு நாளிற்கும் ஒவ்வொரு நொடிக்கும் நன்றி சொல்வது, எங்கள் தொழிலில் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் முதற்கொண்டு முதலீட்டாளர்கள் வரை ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்வோம். ஒவ்வொன்றையும் வாய்விட்டு மனமார நன்றி சொல்வோம். இது எங்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையையும், மன உறுதியையும், செயலின் தூய்மையையும் அதிகரிக்க செய்கிறது. 

மேற்குலக நாடுகளில் இந்த நன்றியுணர்வு ஒவ்வொரு சிறுமட்டத்திலும் காணலாம். அதனால் அந்தநாடுகளில் மக்களின் வாழ்க்கைதரம் உயர்வாக இருக்கிறது. நன்றியுணர்வு மனதை சமநிலைபடுத்துகிறது, தெளிவாக சிந்திக்கத் தூண்டுகிறது. எவ்வளவு மோசமான பிரச்சனையையும் நிதானமாக அணுக வைக்கிறது. நான் ஒவ்வொருநாளும் இந்த நன்றியுணர்வை தான் இன்னும் கூட்ட நினைக்கிறேன். இது எங்கள் மனதை மட்டுமல்ல உடலையும் பாதுகாக்கிறது. அறிவியலும் இதைத்தான் சொல்கிறது.

இந்த மூன்று முதலீடுகள் தான் எங்கள் வெற்றியை உறுதிசெய்கிறது. விதியோ, அதிர்ஷ்டமோ அல்ல. நன்றி!

(கட்டுரையாளர்: கார்த்திகேயன். இவர் ஃபாஸ்துரா டெக்னாலஜீஸ், நிறுவனத்தின் நிறுவனர். இது விருந்தினர் கட்டுரைப் பகுதி. கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.) 

An Administrator , Bookworm, Columnist, Designer, Entrepreneur, Founder of Fastura Technologies,..

Stories by Karthikeyan Fastura