ஆங்கிலம் பேச தயக்கமாக உள்ளதா? உங்களுக்கு உதவ வருகிறது Knudge.me செயலி

ப்ளேஸ்டோரில் ஐந்து லட்சம் பயனர்களைக் கொண்ட இந்த செயலி வீடியோ கேம் விளையாடுவது போல ஆங்கிலம் பேசுவதை எளிமையாக்குகிறது...

233

நாம் ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும் ஆங்கிலம்தான் வெற்றிக்கான ஏணிப்படி. கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ள எத்தனையோ செயலிகள் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுக்கிறது.

இந்தப் பகுதியில் செயல்படும் பல்வேறு செயலிகளில் ஒன்று Knudge.me. ஒரு புதிய மொழியைக் கற்க விளையாட்டு செயலியில் உள்ள அம்சங்களைப் பயன்படுத்தினால் அது பலனளிக்கும் என்று இதன் நிறுவனர்கள் நம்பினர்.

தெஹராதூனைச் சேர்ந்த சுனைத் அஹ்மத், பாட்னாவைச் சேர்ந்த புஷ்ப் ராஜ் சௌரப் மற்றும் சஹரான்பூரைச் சேர்ந்த உதித் ஜெயின் மூவரும் இணைந்து சுயநிதியைக்கொண்டு Knudge.me செயலியை நிறுவினர்.

நிறுவனர்களது தனிப்பட்ட அனுபவமே இந்த செயலி உருவாகக் காரணமாக அமைந்தது. ஆங்கிலம் தெரிந்தாலும் அதில் பேசுவதில் ஒரு அசௌகரிய உணர்வு இருப்பதாகத் தெரிவித்தார் சுனைத். 

“நாங்கள் அனைவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரத்திலிருந்து வந்தவர்கள். எங்களைப் போல் பலரும் ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் உரையாடத் தயங்குவதை அறிந்தோம்,” என்றார் சுனைத்.

சுனைத் மற்றும் உதித், ஐஐஐடி அஹமாதாபாத்திலும் புஷ்ப் தப்பர் பல்கலைக்கழகத்திலும் பொறியியல் பட்டம் முடித்தனர். ஸ்டார்ட் அப் துவங்குவதற்கு முன்பு மூவரும் TinyOwl, ஃப்ளிப்கார்ட், க்ராஃப்ட்ஸ்வில்லா, வால்மார்ட் லேப்ஸ் என பல்வேறு ஸ்டார்ட் அப்களில் பணிபுரிந்துள்ளனர்.

Knudge.me செயலியை உலகளாவிய கல்வி தொழில்நுட்ப தளமாக நிலைநிறுத்தியுள்ளனர். 

”வெளிநாடுகளிலிருந்து நல்ல வரவேற்பு கிடைப்பதைப் பார்க்கமுடிகிறது,” என்றார் சுனைத். 

பாடங்களை சிறு சிறு பகுதிகளாக பிரித்துள்ளனர். இதனால் பயனர்கள் தொடர்ந்து இணைந்திருக்கமுடியும். இதிலுள்ள விளையாட்டுகள் ஆங்கில இலக்கணம், சொற்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள உதவும். ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் ஒரே மாதிரியான உச்சரிப்பில் இருக்கும். அவற்றை பிரித்தறிந்துகொள்ள இந்தப் பயிற்சி உதவும்.

கூகுள் ப்ளேஸ்டோரில் இந்தச் செயலிக்கு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பயனர்கள் உள்ளனர். 50 லட்சத்துக்கும் அதிகமான சிறு சிறு பகுதிகளாக பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்தச் செயலியில் நான்கு லட்சம் விளையாட்டுகள் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்டார்ட் அப் சமீபத்தில் ஆக்சிலர் வென்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு பகுதியாக இணைந்துள்ளது. ஃபேஸ்புக்கின் FbStart ப்ரோக்ராம் மொபைல் சார்ந்த ஆரம்பநிலை ஸ்டார்ட் அப்கள் தங்களது செயலியை உருவாக்கவும் மேம்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. கடந்த ஆண்டு Knudge.me இந்த ப்ரோக்ராமிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

நிறுவனர்கள் வெவ்வேறு ஸ்டார்ட் அப்களில் பணிபுரிந்த தங்களது அனுபவங்களுடன் ஒன்றிணைந்தது அவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது என்றார் சுனைத். 

”உங்களது பயனர்களின் அடிப்படை பிரசனைகளுக்கு தீர்வுகாண முடியவில்லையெனில் தொழில்நுட்பத்தில் அதிக புதுமைகள் இருந்தும் பலனில்லை என்பதை தெரிந்து கொண்டேன்,” என்றார்.

 தொழில்நுட்பப் பிரிவில் செயல்படவேண்டும் என்பதற்காக ஈடுபாடின்றி இதில் செயல்பட்டால் உங்களால் சிறந்த தயாரிப்பை வழங்கமுடியாது என்பதே ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்களுக்கான முக்கிய பாடம். பயனர்களின் வாழ்வில் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கமே முக்கிய அம்சமாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : தீப்தி நாயர்