நூடுல்ஸை அடுத்து இந்திய ஜீன்ஸ்: பாபா ராம்தேவின் ’பதஞ்சலி’ நிறுவனம் அறிமுகம்!

0

தொழில்முனைவராக மாறிய யோகா குரு ராம்தேவ் பாபா’வின் ‘பதஞ்சலி குழுமம்’ அண்மை காலமாக தனது தயாரிப்புகள் மூலம் இந்திய சந்தையில் நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. நுகர்பொருள் சந்தையில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வரும் பதஞ்சலி குழுமம், சர்வதேச சந்தையில் தனது தயாரிப்பை விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் கால்பதிக்க பதஞ்சலி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து ராம்தேவ் கூறியது,

“நேபால் மற்றும் பாங்களாதேஷில் தனது பிரிவுகளை பதஞ்சலி தொடங்கியுள்ளது, மத்திய கிழக்கு நாடுகள் சந்தையில் நுழைந்து அங்கே ஏற்கனவே பிரபலமாகி உள்ளது எங்கள் தயாரிப்புகள். குறிப்பாக சவுதி அரேபியாவில் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏழை நாடுகளில் எங்கள் கவனம் அதிகமாக இருக்கும், ஏனெனில் அங்கு கிடைக்கும் லாபம் அந்த நாட்டின் வளர்ச்சிக்காக செலவிடப்படும்.” 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் விரிவாக்கம் அங்குள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும். நிலைமை சாதரணமாக இருப்பின், அங்கும் எங்கள் பிரிவுகளை தொடங்குவோம் என்றார். 

கனடா வரை சென்றுள்ள பதஞ்சலி பொருட்கள், 90சதவீதம் இஸ்லாமியர்கள் வாழும் அசெர்பைஜான் நாட்டில் ஏற்கனவே நுழைந்துவிட்டதாக தெரிவித்தார் ராம்தேவ். ”அங்குள்ள பெரிய தொழிலதிபர் ஒருவர் எங்கள் தயாரிப்புகள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்” என்றார். 

அடுத்து, பதஞ்சலி ஆடை சந்தையில் நுழைய உள்ளதாக கூறிய ராம்தேவ், 

“இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ’ஸ்வதேசி ஜீன்ஸ்’ வகைகளை அறிமுகப்படுத்த உள்ளோம்” என்றார். 

பதஞ்சலி’க்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்புள்ளதால், இந்திய ஜீன்ஸ் வகையை அறிமுகப்படுத்தி, வெளிநாட்டு பிராண்டுகளுடன் போட்டியிட உள்ளோம் என்றார். பதஞ்சலி நிறுவனத்தின் சமையல் எண்ணெய் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், நாக்பூரில் உள்ள மிஹான் நகரில் 40லட்ச சதுர அடியில் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. ஹரித்வாரில் உள்ள இவர்களது முதல் தொழிற்சாலையை விடவும், இந்தியாவிலேயே பெரியதாகவும் இது இருக்கும் என்று ராம்தேவ் கூறினார். 1000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த தொழிற்சாலையில் மகராஷ்ட்டிர மாநிலத்தை சேர்ந்த 10000 முதல் 15000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.  

அடுத்ததாக பதஞ்சலி, மத்திய பிரதேசம், அசாம், ஜம்மு அண்ட் காஷ்மீர், உத்திர பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகாவிலும் இவர்கள் பிரிவுகளை தொடங்க உள்ளதாக தெரிகிறது. நுகர்பொருட்கள் தயாரிப்பில் 50லட்சம் கோடி ரூபாய் சந்தையை ஏற்படுத்துவதே தங்களது இலக்கு என்றார் பாபா ராம்தேவ். 

தகவல் உதவி: பிடிஐ