'தி ரிங்க்'- வயது வந்தோர் மறந்த பாலியல் பாடம்! 

1

பெண்களுக்கு மட்டுமே ’கற்பு’ பயிற்றுவிக்கப்படும் இந்தியாவில், “பாலியல் வன்கொடுமையை பெண்கள் ஏன் ஒருக்கட்டத்தில் சுகமாய் அனுபவிக்க மாட்டார்கள்?’ என்ற அபத்தமான கேள்வியும் கூச்சமில்லாமல் இங்கு பலரால் கேட்கப்படுகிறது.

பாலியல் கல்வியின் தேவை குறித்தான விழிப்புணர்வு, இன்னும் பலரை எட்டவில்லை என்றே சொல்லவேண்டும். ஆனால், இங்கே பாலியல் கல்வி தேவைப்படுவது சிறுவர், சிறுமியர்களுக்கு மட்டுமல்ல, வயது வந்த இந்தியர்களுக்கும் தான். இத்தேவையை உணர்ந்து, பாடத்தை முகத்தில் எறிந்திருக்கிறார் ஹர்ஷினி ராஜி என்ற சென்னை இளம்பெண்!

“பெண், இயற்கையாக உடலுறவு கொள்ள நினைக்கும் போது, பெண்ணுறுப்பு ஈரப்பதத்தை சுரந்து, ஆண்குறி உள்நுழைவதை எளிதாக்குகிறது. ஆனால் பலாத்காரத்தின் போது, வலுக்கட்டாயமாக ஆண்குறி உள்நுழைவதால், ஈரப்பதம் இல்லாமல், பெண்ணுறுப்பு காயப்படுகிறது. அதற்கு மேலும் உடல் ரீதியான காயங்கள் ஏற்படாமல் இருக்க பெண் உடல் தானாக சில திரவங்களை சுரக்கும், ஆனால், அதற்கு அர்த்தம் அந்த பெண் பாலியல் கொடுமையை சுகமாய் அனுபவிக்கிறாள் என்பதல்ல..." 

இந்த தகவலை முன்னிறுத்துகிறது, ஹர்ஷினி வடிவமைத்திருக்கும் கருத்தாக்க படங்களின் தொகுப்பு. சிந்தித்துப் பார்த்தால், இது பலருக்கும் தெரிந்த காரியம் தான். ஆனால், இடிப்போர் இடித்துரைத்தால் தானே, புத்திக்கு உறைக்கிறது!

மேலும், இதை கிரகிக்க முடியாதவர்கள் எளிதாய் புரிந்துக் கொள்ள, விரலில் மாட்டியிருக்கும் மோதிரத்தின் உதவியோடு விளக்கத்தை தொடங்கும் ஹர்ஷினி, இத்தொகுப்பிற்கு, ‘தி ரிங்/ரேப்’ 'The Ring/Rape' எனப் பெயரிட்டிருக்கிறார். வடிவமைத்த நான்கு நாட்களில் ஐந்தாயிரம் ஷேர்களோடு, தற்போது, வைரல் ஹிட், ‘தி ரிங்’ தான் !

அண்ணா யுனிவர்சிட்டியில் எலெக்ட்ரானிக் மீடியா படித்துக் கொண்டே, ஃப்ரீலான்ஸ் கிராஃபிக் வடிவமைப்பாளராக இருப்பவர் ஹர்ஷினி. சென்னையை அடையாளப்படுத்தும் விதமாய் ‘ஆட்டோவையும்’, பெண்மையை பிரதிபலிப்பதாய் அவர் நினைக்கும் ‘பிங்க்’ வண்ணத்தையும் ஒன்றாக்கி, தன் நிறுவனத்திற்கு ‘பிங்க் ஆட்டோ’ எனப் பெயரிட்டிருக்கிறார்.

“வழக்கமாகவே, நான் பெண்ணியம் பேசும் பல புத்தகங்கள் படிப்பேன். நயோமி வூல்ஃபியின் ‘வஜைனா’ என்ற புத்தகத்தை படித்த போதிலிருந்து எனக்கு பெண் பால் பண்பு மீது ஆர்வம் வந்தது என்கிறார்.

வெகு சமீபத்தில், மேரிட்டல் ரேப் குறித்து வீடியோ ஒன்றை எடிட் செய்துக் கொண்டிருந்த நண்பர் ஒருவருக்கு உதவிக் கொண்டிருந்தேன். அவர் கூறுகையில், ‘ஒருக்கட்டத்தில், பாலியல் கொடுமையை பெண்கள் சுகமாய் அனுபவிக்க மாட்டார்கள் என என்ன நிச்சயம்?’ எனக் கேட்டார். ஏற்கனவே, சில முறை பலரிடம் நான் பதிலளித்த கேள்வி இது. பெரும்பாலும், அதை விளக்கிய பிறகு அவர்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.

அப்போது, அக்‌ஷிதா, என் தோழி, ஒரு மோதிரம் உங்கள் விரலில் மாட்டிக்கொண்டு இருக்கிறது. அதை கழட்டி எடுக்க வேண்டுமானால் என்ன செய்வீர்கள்? சோப் போட்டு கழட்டுவீர்கள் இல்லையா?அப்படியே, இதையொத்து தான், யோனியும் செயல்படும் என்றாள்.

அப்போது, இதை விளக்க இவ்வளவு அருமையான உதாரணம் சொல்ல முடிவதை நினைத்து வியப்பாக இருந்தது. அவளிடம் இதைச் சொன்ன போது, இதைப் பற்றி எதாவது செய், எதாவது வீடியோ உருவாக்கு என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். மேலும், பல இடங்களில், பாலியல் வன்முறைக்குப் பின் ஏற்படும் அதிர்ச்சியை தான் விளக்கியிருக்கிறார்கள் என்று தோன்றியது.

மிகச் சரியாக ஒரு பலாத்காரத்தின்போது என்ன நடக்கும் என யாரும் ஆலோசிப்பதில்லை. அது மிகக் கடுமையான பிரச்சினை. அதை நாம் ஏன் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென யாரும் விவரித்ததும் இல்லை. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, சிறு ஆய்வு ஒன்றை செய்து விட்டு, ‘தி ரிங்’-கை வடிவமைத்து முடித்தேன்”, என்கிறார் ஹர்ஷினி.

இறுதியாண்டு எலக்ட்ரானிக் மீடியா பயிலும் ஹர்ஷினி, ‘ரெட்டிரெஸ்’ (Redress) என்றொரு செயலியையும் வடிவமைத்திருக்கிறார். இச்செயலியில், வீட்டிற்குள் நடக்கும் வன்முறைக்கெதிராய் பெண்கள் எப்படி புகார் கொடுக்கலாம், எஃப்.ஐ.ஆர் என்றால் என்ன, எவையெல்லாம் குற்றம், பெண்களின் அடிப்படை உரிமைகள் என்ன என்பன குறித்து தகவல்கள் அளிக்கிறது.

மிகத் தாரளமாய் என்னை செண்டிமெண்டல் முட்டாள் எனச் சொல்லுங்கள்; உண்மையில், விருப்பமில்லாத தொடுகை உடலை பதைபதைக்கச் செய்யும்! அதற்காக, இருளில் ஒளிந்து நடக்க வேண்டாம், நம் உரிமைகளையும், வலிமையையும் உணர்ந்தாலே போதும், நம் கதையை, நாமே எழுதலாம் ஹர்ஷினியைப் போல. 

பிங்க் ஆட்டோ ஃபேஸ்புக் பக்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ள அதன் சட்டத்தை தெரிந்துகொள்வது அவசியம்!

'India Tomorrow'- பாலியல் தொழிலாளியை முன்வைத்து வளர்ச்சிப் பாதை காட்டும் குறும்படம்  

பெண்களுக்கு நேரிடும் பாலியல் கொடுமைகளை எதிர்கொள்ள உருவான 'துர்கா' 

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Stories by Sneha