மீண்ட சொர்க்கம்!

0

சென்னையின் பெருவெள்ளம் வாழ்வின் பல பரிமாணங்களையும் எனக்கு கற்றுக்கொடுத்துவிட்டது. பயம், படபடப்பு, உதவி, நன்றி, நெகிழ்ச்சி என்று எல்லாவற்றையும் கலந்த ஞானப் பெருவெள்ளத்தை அடித்துக்கொண்டுவந்து என் வாசலில் வீசிவிட்டுச் சென்றது கூவம்.

மரண பீதி என்ற சொல்லை என் வாழ்வில் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால் அதை அதன் முழுமையான பொருளுடன் உணரும் வாய்ப்பு எனக்கு இதுவரை வாய்த்திருக்கவில்லை. இந்த வடகிழக்குப் பருவமழை அந்த நல்வாய்ப்பை எனக்கு வழங்கியது. டிசம்பர் 1 ஆம் தேதி மாலை. எனது அலுவலகத்தின் மனித வளப்பிரிவு அலுவலர் மெல்ல என்னருகே வந்தார். ”துரை, இன்னிக்கு பலத்த மழை பெய்யும்னு சொல்லியிருக்காங்க. அதனால சீக்கிரமே கிளம்பிடுங்க” என்று மெலிதான குரலில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். நானும் சரி என்று தலையசைத்துவிட்டு வேலையில் மூழ்கினேன். ஒரு மணி நேரம் கழித்து நிமிர்ந்துபார்த்தால்… ஒன்றிரண்டு பேரைத்தவிர யாரையும் காணவில்லை. ஒரு கட்டத்தில் நானும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். வெளியே மெலிதாகத் தூறிக்கொண்டிருந்தது.

பெருங்குடியில் எனது பத்திரிகை அலுவலகத்திலிருந்து சூளைமேட்டில் இருக்கும் வீட்டுக்கு வருவதற்குள் தொப்பலாக நனைந்துவிட்டிருந்தேன். குழந்தைகள் எப்போதும்போல சோட்டா பீமுக்குள் மூழ்கிப்போயிருந்தனர். 7 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மழை வெள்ளத்தில் சூளைமேடு மிதந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அதனால் ஒரு சிறிய எச்சரிக்கை உணர்வு (பய உணர்வுதான்) இருந்தது. எனவே அடிக்கடி வானிலை அறிக்கையைத் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மாலையில் பெய்யத் தொடங்கிய மழை மறுநாள்வரை விடாமல் கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. வீட்டிலிருந்தே இன்று பணியாற்றுங்கள் என்று எனது அலுவலகத்திலிருந்து உத்தரவு வேறு வந்துவிட்டிருந்தது. அப்பொழுதாவது சுதாரித்திருக்க வேண்டாமோ? அதுவும் இல்லை. மாலை ஆக ஆக, இருள் கவியத் தொடங்கியது. நான் குடியிருக்கும் தெருவின் கடைசியில் கூவத்தின் வாய்க்கால் ஒன்று குறுக்கிடுகிறது. எங்கள் தெருவாசிகள் அனைவரும் அந்த வாய்க்கால் செல்லும் பாதையையே பெரும் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். 

என்ன ஏது என்று விசாரிக்கத் தொடங்கினேன். “செம்பரப்பாக்கம் ஏரி திறந்துவிட்டா நம்ம தெருவுக்குள் தண்ணி வந்துடும்” என்று ஆளாளுக்கு பீதியைக் கிளப்பினர். முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் சாக்கடை நீர் பாதைகளைத் திறந்துவைத்தனர். சிறிது நேரம் இவற்றைப் பார்ப்பது, அப்புறம் ஓடிவந்து வீட்டிலுள்ள பொருட்களை உயரமான இடத்தில் வைப்பது என்று இருதலைக் கொள்ளி எறும்பாக ஓடிக்கொண்டிருந்தேன். ஒருவேளை முழங்கால் அளவுக்கு வெள்ளம் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம். எனவே எல்லாப் பொருட்களையும் அந்த அளவுக்கு உயரத்தில் வைக்கத்தொடங்கினேன். குழந்தைகள் மகிழ்ச்சியோடு உதவத்தொடங்கினர். என் மனைவி, அச்சத்தால் உறைந்துபோயிருந்தார்.

எனது வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்றிருந்ததால் அவர்கள் வீட்டு மீன் தொட்டியில் இருக்கும் மீன்களுக்கு இரை போடுவதற்காக எங்களிடம் தங்கள் வீட்டு சாவியைக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தனர். ஒருவேளை வீட்டுக்குள் வெள்ளம் வந்துவிட்டால் (தரைத்தளம்) மாடியில் உள்ள உரிமையாளர் வீட்டுக்குள் தஞ்சம் புகுவது என்று முடிவெடுத்தோம்.

ஒரு கட்டத்தில் தெருவெங்கும் ஒரே கூக்குரல். “தண்ணி வந்துருச்சு” . ஒரு கணம் ஆடிப் போய்விட்டோம். கூவம் கால்வாய் நீர் எங்கள் தெரு வழியே ஆறுபோல ஓடத்தொடங்கிற்று. முக்கிய தெருவிலிருந்து பிரியும் சந்தில்தான் எங்கள் வீடு என்பதால் வந்த வேகத்தில் நீர் எங்களது வீட்டுமுன்பு வரவில்லை. ஒதுங்கிய நீர்தான் தேங்கத்தொடங்கியது.

நாங்கள் வாசலைப் பார்த்துக்கொண்டிருக்க, கழிப்பறை வழியாக சாக்கடை நீர் வீட்டுக்குள் வரத்தொடங்கியது. இதற்கு அப்புறமும் காத்திருக்க வேண்டியதில்லை என்று முடிவெடுத்து முதல் தளத்திலிருக்கும் வீட்டு உரிமையாளரின் வீட்டுக்குச் சென்றோம். கையில் இருந்த மெழுகுவர்த்தியின் துணையுடன் ஓர் இரவைக் கழித்தோம். மறுநாள் விடிந்ததே தவிர வெள்ளம் வடியவில்லை. பால், மெழுகுவர்த்தி, நீர் என்று எதுவுமே கிடைக்கவில்லை. மின்சாரம் நிறுத்தப்பட்டது. தீவில் வசிப்பவர் போலானோம். எங்கள் தெரு இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து சமைத்துக் கொடுத்த உணவுப் பொட்டலங்களை ஒரு கை பார்த்தோம். அன்று வெகு சீக்கிரமாகவே இருளத்தொடங்கியிருந்தது.

எனது முன்னாள் சகாவும் தற்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் தலைமை செய்தியாளருமான எம்.சி.ராஜன், காலையிலிருந்தே தனது வீட்டுக்கு வந்துவிடும்படி வலியுறுத்திக்கொண்டிருந்தார். நானோ, “வெள்ளம் வடியட்டும், வந்துவிடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்தில் நீர் முதலிய அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு வரும்போல தோன்றியது. எனவே ராஜனின் வீட்டுக்கு அகதிகளாகத் தஞ்சமடைவது என்று முடிவெடுத்தோம். ஆனால் செல்பேசி உயிர் துறந்திருந்தது. எனவே, எனது இரு குழந்தைகளை முதல் தளத்தில் பக்கத்து வீட்டு சகோதரியிடம் விட்டுவிட்டு நானும் எனது மனைவியும் வாசலில் கால் வைத்தோம். இடுப்பளவு நீர்…

பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டே பிரதான சாலைக்கு ஊர்ந்துகொண்டே செல்லச் செல்ல, கூவம் ஆற்றின் வெள்ளம் சுமார் ஐந்து அடி உயரத்துக்கு சாலையின் மெல்ல சென்றுகொண்டிருந்தது. அடிமேல் அடிவைத்து நீந்தி நண்பர் எம்.சி.ராஜனின் வீட்டுக்குச் சென்றோம். அவர் உடனடியாக ஒரு டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு எங்களோடு புறப்பட்டார். அவர் வீட்டிலிருந்து எங்களது வீட்டுக்குத் திரும்பும்போதுதான் ஆற்றுநீரின் வேகம் என்றால் என்ன என்பதைக் கூவம் எங்களுக்கு உணர்த்தியது. தார்ச்சாலையின்மீது ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன் எங்களை எதிர்நடை போட விடாமல் தடுத்தது. ஒரு வழியாக எங்களது தெருவுக்குள் நுழைந்தோம்.

அந்தத் தெருவுக்குள் ஆற்று வெள்ளம் பெருக்கெடுக்கவில்லை. மாறாக, நெஞ்சளவுக்கு சாக்கடை நீர் நின்றுகொண்டிருந்தது. மின்சாரம் அவுட்! மெல்ல நடக்க நடக்க நீரின் அளவும் அதிகரித்தது. எனக்கு உயிர்பயம் வரத்தொடங்கியது. தூரத்தில் யாரோ நடந்துகொண்டிருந்தனர். “அண்ணா…தொடர்ந்து நடக்கலாமா?” என்று கேட்டேன். அங்கிருந்து வந்த குரல் “வரலாம். பிரச்சனையில்லை” என்றது. எங்களின் பதற்றமான குரலைக்கேட்ட எங்கள் தெருவாசிகள், சாலையின் இருபுறங்களிலுமுள்ள மாடிகளில் இருந்தபடி டார்ச் விளக்கு வெளிச்சத்தை எங்கள்மீது பாய்ச்சினர். இது சுமார் அரை கி.மீ. வரை தொடர்ந்தது. அந்த உதவிக்கு எனது நன்றியை வார்த்தையால் வடிக்க முடியாது.

அந்நேரத்தில் அங்கு வெள்ளத்தில் மீன்பாடி வண்டியுடன் நின்றுகொண்டிருந்த மூன்றுபேர், எங்களுக்கு உதவ முன்வந்தனர். வீட்டுக்கு வந்தவுடன் எங்களது குழந்தைகளை அந்த வண்டியில் ஏற்றி எனது நண்பரின் வீட்டுக்கு சற்று தொலைவுவரை தள்ளிக்கொண்டுவந்து சேர்த்தனர். அங்கிருந்து என் நண்பரின் வீடுவரை எங்களது குழந்தைகளைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டோம். ஒரு வழியாக நண்பர் வீட்டில் அடைக்கலமானோம். இரண்டு நாட்கள் அங்கேயே உண்டு, உறங்கி, ஆசுவாசப்படுத்தி….பெரும் நிம்மதி.

மழை முழுக்க அடங்கி, நீர் வடிந்தபிறகு வீடு திரும்பினோம். வெள்ளம் வடிந்திருக்கலாம். ஆனால் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய யாரோ ஒருவனுக்காக விளக்கின் ஒளியில் வழிகாட்டிய, எனக்கு அறிமுகமே இல்லாத என் தெருவாசிகள்; நான் பணம் தர முன்வந்தும் அதை வாங்காமல் தங்களது பெயரைக்கூட சொல்ல மறுத்த அந்த மீன் பாடி வண்டிக்காரர்கள்; எனது பிள்ளைகளைத் தனது தோளில் சுமந்து சென்ற எனது நண்பர் ராஜன்; என் குடும்பத்தை கையில் வைத்துத் தாங்கிய அவரது குடும்பம்; எங்கு எந்த தகவலைக் கேட்டாலும் பொறுமையாக பதில் சொன்ன, வழிகாட்டிய, முன்பின் அறிமுகமற்ற எளிய மனிதர்கள்; எனக்கு என்னவோ ஏதோ என்று பதறிபோய் ஓடி வந்த எனது அலுவலக நண்பர்கள் தியாகராஜன், சரவணன், எவர் பெற்ற பிள்ளைகளுக்கோ சொந்த செலவில் சோறு ஆக்கிப் போட்ட சூளைமேடு தன்னார்வலர்கள், மளிகைக் கடைக்காரர்கள், தனது டீ கடைக்கு வைத்திருந்த பாலை எடுத்து என் குழந்தைக்கு வழங்கிய டீ கடைக்காரர்... என்று ஈரம் தோய்ந்த நினைவுகள் என் மனதில் என்றும் அப்படியே தொடரும். மழை வெள்ளம் மனிதத்தின் ஊற்றுகளைத் திறந்துவிட்டது. அது அவ்வளவு எளிதில் அடைபட்டுவிடுமா என்ன?

படங்கள் உதவி: நிஷாந்த் க்ருஷ்

கா.சு.துரையரசு, சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர். 14 ஆண்டுகளாக சென்னைவாசி. தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்.