'சுவரில்லா பள்ளி', 'கல்கேரி' : இந்திய மாற்றுக் கல்வி முறை பள்ளிகள்!

0
பட உதவி: http://pri.org
பட உதவி: http://pri.org

தனித்துவமான அம்சங்கள் நிறைத்திருக்கிறது தர்வாட் புறநகர்ப் பகுதி. கனேடிய உச்சரிப்புடன் ஃபிரெஞ்சு மொழி பேசப்படுவதை நீங்கள் அங்கே கேட்கலாம். ஸ்வீடிஷ் மொழியும் உங்கள் செவிகளில் விழலாம். ஆனால், அதைக் காட்டிலும் சற்றே பலமாக, பாரம்பரிய கர்நாடக சங்கீதத்தையும், இளம் விரல்கள் மீட்கும் தாளத்தையும் அங்கு கேட்டு மயங்கலாம்.

அந்த இடம்தான் கல்கேரி (Kalkeri). அங்கே அமைந்திருக்கும் ஒரு இசைப் பள்ளிதான் இந்த மனதை மயக்கும் அனுபவத்துக்குரியது. க்யூபெக்கர் (Quebecker) என்பவரின் இசை மற்றும் சமூக மாற்றம் மீதான ஆர்வத்தின் விளைவாக நிறுவப்பட்டு, இன்று பெங்களூருவின் வடக்குப் பகுதியில் இசைச் சொர்க்கமாகவே திகழ்கிறது இந்தப் பள்ளி. இந்த மாறுபட்ட இசை பள்ளியில் பங்கு கொள்ள உலக நாடுகளில் இருந்து தன்னார்வ பிரதினிதிகள் இங்கு வந்து குவிகின்றனர்.

இந்தியா முழுவதும் 12 முக்கிய இடங்களுக்கு அனுபவம் தேடிச் சென்றது, இளைஞர்களின் பயண ரயிலான ஜாக்ரிதி யாத்ரா. அந்த ரயில் ஓர் இரவில் தார்வாட்டில் நின்றது. மறுநாள் காலை, இந்த இசைப் பள்ளியின் வளாகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கல்வி நிலை குறித்து பேச்சுகளும் கருத்துகளும் பகிரப்பட்டன. இளைஞர்கள் குழுவுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது அந்த நிகழ்வு.

இந்த நிகழ்ச்சியில் இருவரது அனுபவக் குறிப்புகள் மிக முக்கியமானவை. ஒருவர் கர்நாடகாவில் 'சுவர்களில்லா பள்ளி'யை (School Without Walls) சேர்ந்த தேசாய். இவர், பல நாடுகளில் கிளைகளைக் கொண்ட ஐஸ்கிரீம் நிறுவனமான பாஸ்கின் ராபின்ஸ்-சில் பணியற்றியவர். அந்த நிறுவனம் லாபம் ஈட்டுவதிலும் சீரானத்தன்மையைக் கடைப்பிடிப்பதிலும் கவனம் செலுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் கலாச்சாரக் கல்வி என்பது இழக்கப்பட்டு, பணம் சம்பாதிப்பதற்காகவே கல்வி என்ற நிலை உருவாகிவிட்டதாக வருத்தத்துடன் சொல்லும் அவர், தனது ஸ்கூல் வித்தவுட் வால்ஸ் கலாச்சாரக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் உள்ளூர் சிறப்புகளில் அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.

தனது பள்ளியில் பாடத்திட்டமே இல்லை என்றும், இயற்கைச் சூழல்தான் பாடத்திட்டம் என்றும் வியக்கவைத்தார் தேசாய். "உள்ளூர் பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு வேண்டியதை நேரடியாக செய்தே கற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக, மாணவர்கள் சோதனைப் பயிற்சிகளில் ஈடுபடும்போது, ஒரு சமையலறையே ஆய்வுக்கூடமாக மாறிவிடுகிறது. கடந்த ஆண்டு, எங்கள் மாணவர் ஒருவர் கண்டுபிடித்த ஒரு புதிய ரெட் ஹைபிஸ்கஸ் சிரப், உணவுத் திருவிழாவில் விருதுகளை வென்றது. மாணவர்கள் சமூகப் பணிகள் மூலம் ஈட்டும் தொகையிலேயே பள்ளியின் 60% வருவாய் கிடைக்கிறது.

நாம் அனைவருமே மகிழ்ச்சியைத் தேடி அலைகிறோம். அவை நம் கண்ணெதிரிலேயே இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. அமைதியைத் தேடி இமயமலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை; அது உன் மனதிலேயே இருக்கிறது" என்று அறிவுரை சொன்னார் தேசாய். இவரது பள்ளியில் எல்லா வயதினரும், அனைத்துப் பின்னணியில் இருந்தும் வந்து மாற்றுமுறைக் கல்வியைப் பெறுகிறார்களாம்.

இந்த நிகழ்ச்சியில் பேசியவர்களில் குறிப்பிடத்தக்க மற்றொருவர் ஆடம். கல்கேரி குழுவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். இசைப் பள்ளியின் வரலாற்றையும், இப்பள்ளியின் பயின்றவர்கள் அடைந்த பலன்களைப் பற்றியும் விவரித்தார்.

"பெரும்பாலும் இசை என்பதே மேட்டிமை மக்களுக்கானதாக இருக்கிறது. எனவே, அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எங்களுக்கு முதன்மை விருப்பம் ஆனது.

இங்கு சிறுவர்கள் கலைகளையும், பாரம்பரிய கல்வியையும் ஒருங்கே கற்கின்றனர். முதல் வகுப்பில் அவர்களுக்கு தினமும் மூன்று மணி நேரம் வகுப்பு நடக்கும். அதில் பாடல், நடனம், நாடகம் அல்லது ஓர் இசைக்கருவி சொல்லித்தரப்படும். அவர்கள் பெரியவர்களானதும் இவற்றில் இரண்டை மட்டும் தேர்வு செய்து தொடர்ந்து கற்கலாம். ஆனால், கலைகளுக்கு தினமும் ஐந்து மணி நேரம் கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும். பிறகு, அவர்கள் எட்டாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும்போது ஏதாவது ஒரு கலையில் கவனம் செலுத்தினால் போதுமானது.

மதிய வேளையில் மாணவர்கள் வழக்கமான பள்ளிப் பாடங்களைப் படிப்பார்கள். இதுவரை எங்கள் மாணவர்கள் தேசிய தேர்வுகளில் 100% தேர்ச்சியையே பெற்றுள்ளனர். அவர்களில் 85% பேர் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்கின்றனர். தற்போது, கல்கேரியில் 200 மாணவர்கள் உள்ளனர்" என்றார் ஆடம்.

அன்றைய எஞ்சிய பொழுதுகள் கல்கேரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. பாடல்கள், நடனம், நாடகம் என முழுக்க முழுக்க ரசிக்கத்தக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள். கல்வி நிலை குறித்த புதிதாக புரிதலைத் தந்த கல்கேரி, பிறகு அருமையான இசையையும் வழங்கி மனதுக்கு இதமளித்தது.

கட்டுரையாளர்: இந்த அனுபவக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியவர் ஜோ ஹாமில்ட்ன். ஜாகிர்தா யாத்ராவின் பயணி. பெங்களூருவில் படைப்புத் திறனில் பங்காற்றும் Jaaga.in-ன் மக்கள் தொடர்பு தலைவராகவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பவர்.