தொழில்முனையும் தாய்மாருக்கு நீளும் உதவும் கரங்கள்!

1

‘தொழில்முனைவோர்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே எத்தனையோ சவால்களைத் தாண்டி வெற்றியடைந்த நபரின் உருவம்தான் கண்முன் தோன்றும்.

இது தொடர்பான பேச்சை எடுத்தாலே தனி மனிதப் போராட்டம் என்பதுதான் நமக்கு முதலில் தோன்றும். பல தொழில்முனைவோரும் இந்தப் பாதையை விரும்பி ஏற்பதுண்டு. ஆனால், தாய்மையடைந்த தொழில்முனைவோருக்கு இது பொருத்தமானதாக அமையுமா?

தொழில்முனையும் தாயார்

மும்பையின் மீடியா தொடர்பான கன்ஸல்டன்சியான க்யூபிக் கம்யூனிகேஷனை நடத்திவரும் நிஷா கேத்தன் ‘இவையனைத்தையும் நானே செய்வேன் என்று கற்பனைகூட செய்ததில்லை’ என்கிறார். நிஷா பல ஆண்டுகளாக தன்னுடன் பணிபுரிந்துவந்த தோழியான சங்கீதா இரானியுடன் க்யூபிக்கைத் தொடங்கினார். தனக்கு குழந்தை பிறந்த பின்னர் தொடர்ந்து முன்புபோல பணிக்கு நேரம் செலவிட இயலவில்லை. ‘முன்னுரிமைகள் மாறின. குழந்தை வந்த பின் கார்ப்பரேட் பணியில் முன்பைப்போல ஈடுபாடு காண்பிக்க முடியவில்லை. தொழிலை கவனிக்க பங்குதாரர் இருப்பது, கொஞ்சம் குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்கு ஏற்ப ஆதரவாக அமைந்தது. பணியைப் பொருத்தவரை, ஏற்கனவே நல்ல நிலையில் செயல்பாட்டில் இருந்து வந்தது. எங்களுக்குள் நேரத்தை பங்கிட்டுக்கொண்டு வாடிக்கையாளருக்கு ஏற்ப பணி செய்து வந்தோம்.’

தொழிலில் வரும் சிக்கலைத் தவிர்க்க வேண்டிவரும்போதும், அவசரகாலத்திலும் சிறப்பாக ஒத்துழைப்புடன் பணியாற்றினர்.

கடந்த ஜனவரி மாதம் தொழில்முனையும் தாய்மார்களிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் முக்கியமான முடிவுகள் கிடைத்துள்ளன. பெண்களை மீண்டும் பணிக்குவர ஊக்கப்படுத்தும் ‘பேக் டு த ஃப்ரண்ட்’ என்கிற அமைப்பு, முதல் தாய்மார்கள் சங்கமும்கூட. உலகம் முழுவதிலும் சுமார் முப்பதாயிரம் உறுப்பினர்களைக்கொண்ட இது, சமீபத்தில் மொபைல் செயலியையும் தொடங்கியுள்ளது. ஒரு மாம்-ப்ரூனரின் கீழ் இயங்கும் இது அவரையும் சேர்த்து, சுமார் ஆயிரத்து இருநூறு பேரிடம் இந்தக் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இதன்மூலம் மனிதர்களுக்குள் இருக்கும் சிறப்பான நெட்வொர்க் மட்டுமே வெற்றிக்கு வித்திடும் என்ற கருத்தை மீண்டும் நிரூபனம் செய்துள்ளது. ‘வீட்டில் ஒரு உதவும் கரமும், தொழிலுக்கு ஒரு வழிகாட்டியும் மற்றும் தன்னைப் போன்ற மனம் கொண்ட சக பெண்களின் உதவியும்தான் சீரான நெட்வொர்க்குக்கான வழி’ என்றார். இந்த கணக்கெடுப்பின் மூலம், தமது உள்ளுணர்வின்படி முடிவெடுக்க விரும்பும் பெண்கள், சரிந்து போகும் நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்கவும், ஆலோசனை அளிப்பதற்கும் ஒரு துணையைத் தேடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

அஞ்சலி குலாட்டி, பேக் டு த ஃப்ரண்ட்டின் நிறுவனர் - ‘ஒரு தொழில் சிறப்பாக நடைபெற ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்முனையும் தாய்மார்கள் அதனை நடத்த வேண்டும். அதில் ஒருவர் தாம் அடைந்த உயரத்தைக் கண்டு திருப்தியடைந்தாலும், மற்றவர்கள் மேன்மேலும் உயருவதற்கான வழியைத் தேடுவார்கள்.’ சுமார் ஆறரை ஆண்டுகளுக்கு முன் அஞ்சலி தொழில் தொடங்க எண்ணியபோது தொழில்முனையும் தாய்மார்களுடன் வேலையும் செய்யலாம் என்கிற யோசனை தோன்றியது. ‘ஆயிரக்கணக்கான தொழில்முனையும் தாய்மாருடன் பணியாற்றியதில், உடைந்துபோகும் தருவாயில் ஆறுதல் அளிக்கும் இதுபோன்றவர்களுடன் பணியாற்றுவதன் தனித்துவத்தை உணர முடிகின்றது. ஆயினும், கன்ஸல்டன்சி போன்ற சில தொழில்களில் தனியாக பணியாற்றினால்தான் வெற்றியடைய முடியும் என்பது நிதர்சனம்’ எனக் குறிப்பிட்டார்.

ஒத்துழைப்பு கொடுக்க பங்குதாரராகவோ இணை-நிறுவனராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மாபெரும் கட்டமைப்பில் ஒருவரின் தவறுகள் மற்றும் வெற்றிகள் மற்றவர்களின் பாடமாக அமையலாம். இப்படி ஒரு சேவையைத்தான் ஹாப்ஸ்காட்ச்.இன் செய்துவருகின்றது. தொழில்முனையும் தாய்மாரின் பணி இன்னல்களைப் புரிந்துகொண்ட ஹாப்ஸ்காட்ச் அவர்களின் தயாரிப்புகளை ஆன்லைனில் எப்படி சந்தைப்படுத்துவது என தமது குழுவின் மூலம் கூறி வழிநடத்தி வருகின்றது. ‘எங்களிடம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர். இதில் பலர் தமது பொருட்களை விற்பனை செய்யும் நிலையிலிருந்து மாறி அவற்றை அறிமுகம் செய்கிற நிலைக்கு உயர்ந்துள்ளனர். நாங்கள் அவர்களது பிராண்ட் வளர்ச்சிக்காக ஆதியிலிருந்து உதவுகின்றோம். லோகோ வடிவமைப்பு முதல், புகைப்படங்களை எடுப்பது என ஆன்லைன் சந்தையை அவர்கள் சரியாக அணுக வழிசெய்கின்றோம். மேலும், சந்தை நிலவரப்படி அவர்களது பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யவும் உதவுகின்றோம்’ என இதன் இணை-நிறுவனரும், தலைவருமான ராகுல் ஆனந்த் குறிப்பிட்டார்.

மாம்-ப்ரூனர்களுக்கு கிடைக்கும் இதுபோன்ற உதவி தொழிலில் வளர நம்பிக்கையளிப்பதாக உள்ளது. 2013-ம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கிய ராகுல், தொடர்ச்சியாக பல்வேறு தொழில்முனையும் தாய்மார் சந்தைக்கு ஏற்ப தமது தயாரிப்புகளை மேம்படுத்த முயல்வதை கண்கூடாக கவனித்து வருகின்றார். மாபெரும் நிறுவனங்கள் ஆண்டுக்கு இரண்டோ, மூன்றோ பொருட்களை அறிமுகம் செய்கிற வேளையில், பன்னிரண்டு முதல் பதினெட்டு தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகின்றனர் மாம்-ப்ரூனர்கள். இது நிச்சயமாக அவர்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.

இதுபோல ஒன்றல்ல பல இணையதளங்கள் தொழில்முனையும் தாயாரின் வளர்ச்சிக்கு உதவுவதற்கெனவே இயங்கிவருகின்றது. தொழில் மேம்பாடு, தொடர் ஆலோசனை போன்ற சேவைகளை இந்நிறுவனங்கள் குறிப்பிட்ட நபர் தொழிலில் வளரும்வரை வழங்கி வருகின்றன. இண்டியாமம்ஸ்.காம் (www.indiamums.com), மாம்ப்ரூனர்ஸிண்டியா.காம் (www.mompreneursindia.com) மற்றும் மாம்ப்ரூனர்ஸான்ஃபையர்.ஓஆர்ஜி (www.mompreneursonfire.org) போன்ற இணையதளங்கள் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மாம்ப்ரூனர்களுக்கு சேவையளித்து வருகின்றது. இதுமட்டுமின்றி தனிப்பட்ட தேவைகளில் கவனம் செலுத்தும் மற்றும் ஆதரவளிக்கும் வகையில் தரோடின்ஹூட்ஸ்.காம் (www.therodinhoods.com) மற்றும் ஸ்மார்ட்மாம்ஸ்.காம் (www.smartmomz.com) போன்ற இணையதளங்கள் செயல்பட்டுவருகின்றன.

ஆகவே, ஒத்துழைப்பு என்பது பலவழிகளிலும் இருக்கலாம். வேலை, வாழ்க்கை, குழந்தை என அனைத்துக்கும் நேரம் ஒதுக்கி தமது திறமைகளை வீணாக்காத பல தொழில்முனையும் தாயாரின் கதைகளும் உத்வேகம் அளிப்பதாகவே உள்ளது.

(இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எழுத்தாளருடையது மட்டுமே. யுவர்ஸ்டோரியை எவ்விதத்திலும் இது பிரதிபலிப்பது இல்லை.)

ஆக்கம்: மீரா வாரியார் | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

வீட்டிலிருந்தே இணையத்தில் கலக்கும் ‘ஹோம்ப்ரூனர்’

எனது மகள் விளையாட உரிய பொருட்களைத் தேடி நிறுவனர் ஆனேன் - மாம்ப்ரூனர் ரூபாலி

நீண்ட இடைவேளைக்கு பின் பணியைத் துவங்கும் தாய்மார்களுக்கு 10 உற்சாகக் குறிப்புகள்!