’மதிப்பில் கவனம் செலுத்தினால் மதிப்பீடு தானாகவே தேடி வரும்’ - இந்திய வணிகர்கள் சங்க தலைவர் குமார் ராஜகோபாலன்  

0

சென்னையில், இந்திய வணிகர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த இந்திய சில்லறை வணிகர்கள் சிஇஒ குமார் ராஜகோபாலுடனான பேட்டியில், தற்போதுள்ள வர்த்தகர்கள் பற்றியும், பாரம்பரிய வணிகர்களின் இன்றைய தலைமுறை வாரிசுகளின் பங்குகள் மற்றும் தொழிலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றியும் பேசினோம். 

”இது தொழில்முனைவோர்களின் காலகட்டம். இன்று பல ஸ்டார்ட் அப்கள் செயல்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க பாரம்பரிய வணிகர்கள், சில்லறை வர்த்தகர்கள் போன்றோரும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரும் அவற்றை பின்பற்றி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கான கூட்டமைப்புதான் இந்திய வணிகர்கள் சங்கம், என்றார்.

ரீடெய்லர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா 2004-ம் ஆண்டு துவங்கப்பட்டது. அது வரை சில்லறை வர்த்தகர்களுக்கென தனிப்பட்ட முறையில் ஒரு சங்கம் இல்லை. இது ஒரு பெரிய துறை. இதில் சுமார் மூன்றரை கோடி மக்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்று கருதினர். அவர்களுக்காகவே இந்த சங்கம் துவங்கப்பட்டது என்றார் குமார்.

”சில்லறை வர்த்தகத் துறையை நவீனப்படுத்தவேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். வாடிக்கையாளர்கள் நவீனமயமாகிவிடுகின்றனர். இதனால் வர்த்தகர்கள் நவீனமயமாகவில்லை எனில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய மதிப்பை வழங்க இயலாத சூழல் ஏற்படும்,” என்று பகிர்ந்தார். 

”சென்னை ஒரு அற்புதமான நகரம். தி.நகர் உஸ்மான் ரோடு பகுதிக்கு சென்றால் எண்ணற்ற சில்லறை வர்த்தகர்கள் 60-70 வருடங்களாக செயல்பட்டு வருவதைக் காணலாம். இவை இன்றும் பல வாடிக்கையாளர்களுக்கு முக்கிய கடைகளாகவே விளங்குகிறது. இதற்கு தனிமனித ஒழுக்கம் என்கிற மதிப்பும், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் மதிப்பினால் மட்டுமே இது சாத்தியம்,” என்கிறார் குமார் ராஜகோபாலன்.

சில்லறை வர்த்தகம் எப்படி மதிப்பீடு செய்யப்படுகிறது? 

”இந்தியாவிலேயே சென்னையில் மட்டும்தான் மிகப்பழமையான அதே சமயம் நவீனமயமான சில்லறை வர்த்தகர்கள் அதிகளவில் உள்ளனர். செயின் ஸ்டோர் என்கிற கான்செப்டே சென்னையிலிருந்துதான் தொடங்கியுள்ளது. இதனால்தான் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.”

அதே சமயம் பெண்கள் சில்லறை வர்த்தகங்களில் அதிகளவில் ஈடுபடவில்லை. பெண்கள் இதில் செயல்படுவது முக்கியமானதாகும். சில்லறை வர்த்தகப் பிரிவில் உலகளவில் பெண்கள் 50 சதவீதம் பங்களிக்கையில் இந்தியாவில் வெறும் 20 சதவீதம் மட்டுமே பெண்களின் பங்களிப்பு உள்ளது. அதற்கான காரணத்தை கண்டறியவேண்டும், என்றார்.

ஸ்டார்ட் அப்கள் மற்றும் சில்லறை வர்த்தகங்கள் 

ஸ்டார்ட் அப் செயல்பாடுகளுக்கும் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் இத்தகைய சில்லறை வர்த்தகங்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடு குறித்தும் இன்றைய காலகட்டத்தில் இந்த இரு பிரிவும் ஒருங்கிணைந்து செயல்படுவது சிறந்ததா அல்லது தனிப்பிரிவுகளாக செயல்படவேண்டுமா என்று கேட்டபோது, 

“எந்த ஒரு வணிகமும் ஒரு தொழில்முனைவோரால்  துவங்கப்படுகிறது. அவரால்தான் அந்த வணிகத்தின் வளர்ச்சி குறித்து சிந்திக்கமுடியும். அதனால் தொழில்முனைவு குறித்து அதிகம் கலந்துரையாடவேண்டும். ஆனால் இன்றைய தொழில்முனைவோர் தன்னுடைய வணிகத்தில் கவனம் செலுத்துவதுடன் பிறருடன் ஒருங்கிணையவேண்டும். தங்களது குழுவில் புதிய உறுப்பினர்களை இணைத்தாகவேண்டும். அப்போதுதான் புதிய சிந்தனைகளும் வழிகாட்டல்களும் கொண்டு வணிகத்தை விரிவாக்கமுடியும்.

ஆனால் ஸ்டார்ட் அப்பை பொருத்தவரை புதிய வணிகம் ஒன்றை துவங்குகிறார். ஆனால் தோல்வி குறித்து கவலை கொள்வதில்லை. நிறைய நபர்களை இணைத்துக்கொண்டால் மட்டுமே அவர்களால் வளர்ச்சியடைய முடியும். இது அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படவேண்டிய காலகட்டம். அதாவது வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், நிதியாளர்கள் என ஒட்டுமொத்த சமூகத்துடன் இணைந்திருக்கவேண்டும். இதை சாத்தியப்படுத்த வெளியுலகை தொடர்ந்து கண்காணித்து குழுவில் புதிய ஆலோசகரை இணைத்துக்கொள்வது நல்லது என்று அறிவுரைத்தார்.

இன்றைய காலகட்டத்தில் பல வர்த்தகங்கள் நவீனமயமாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதை எந்த வகையில் நவீனப்படுத்துகின்றனர்? தொழில்முனைவோர் இதற்கு எவ்வாறு ஆயத்தமாகிறார்கள்? இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறைக்கு எப்படி எடுத்துச்செல்கிறார்கள்? 

ஒரு வணிகத்தை மூன்றாம் தலைமுறையினர் பொறுப்பேற்று நடத்தும்போது அவர்கள் அதை ஒரு ஸ்டார்ட் அப்பாகவே கருதவேண்டும். அப்போதுதான் வணிகத்தை நவீனப்படுத்தமுடியும். வர்த்தகத்தில் புதுமையை புகுத்தவில்லை எனில் நீடித்திருக்கமுடியாது. இந்த காரணத்தினால்தான் இது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பல நகரங்களில் தொழில்முனைவில் ஆர்வமாக ஈடுபட்டுள்ள பலருக்கு ஆலோசனை வழங்கும் விதமாக குமார் ராஜகோபால் குறிப்பிடுகையில், 

“ஒரு நல்ல வணிகத்தை உருவாக்க வெற்றிக்காரணியாக இருப்பது பெரும்பாலும் மதிப்பு மட்டுமே. தனிமனித ஒழுக்கம் என்கிற மதிப்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு இரண்டுமே அவசியம். வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் மதிப்பை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். நேற்று வழங்கப்பட்ட அதே மதிப்பு இன்றும் பொருந்தவேண்டும் என்பது நிச்சயமில்லை. ஆகவே இன்றைய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு மதிப்புகளில் புதுமைகளை புகுத்தி நவீனமயமாக மாற்றவேண்டும். இதுவே சில்லறை வர்த்தகர்களின் வளர்ச்சிக்கான முக்கிய ஆலோசனையாகும். 

அதேசமயம் மதிப்பீட்டிற்காக மட்டுமே தொழில் புரியவேண்டாம். மதிப்பீடு என்பது முயற்சியின் பலன். அதை மட்டுமே கவனத்தில் கொண்டு வணிகத்தில் ஈடுபட்டால் தொழிலில் முன்னேற முடியாது. மதிப்பில் கவனம் செலுத்தினால் மதிப்பீடு தானாகவே தேடி வரும்,” என்றார்.
Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Related Stories

Stories by Induja Ragunathan