'மாற்றுத்திறன் வாழ்க்கை முறை, பகுதி நேர பணி அல்ல': பூனம் நடராஜன்

0

இந்தியாவில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் மாற்றுத்திறன் கொண்ட மக்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்தைத் தாண்டும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது, மொத்த மக்கள் தொகையில் 2.1% ஆகும். ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளில் 1 கோடியே 26 லட்சம் பேர் ஆண்கள், 9கோடியே 30 லட்சம் பேர் பெண்கள் ஆவர். ஐந்து வகையிலான மாற்றுத்திறனாளிகளில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 48.5% என்ற அளவில் அதிக எண்ணிக்கையில் முதன்மை வகிக்கின்றனர். ஏனையோரின் விவரம்: உடல் இயக்க பாதிப்பு (27.9%), மனநல பாதிப்பு (10.3%), பேச்சுத்திறன் பாதிப்பு (7.5%) மற்றும் செவித்திறன் பாதிப்பு (5.8%). நாட்டில் பிரச்சினைக்குரிய இந்த நிலை குறித்து "தேசிய மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை" (National Trust for People with Disabilities) அமைப்பின் தலைவர் பூனம் நடராஜனிடம் பேசினோம். இந்திய உள்ளார்ந்த உச்சி மாநாடு நேரத்தில் நடந்தது இந்த நேர்காணல்.

பூனம் நடராஜன்
பூனம் நடராஜன்

சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளை அரவணைப்பதில் தொடங்கிய ஆர்வம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட மக்களுக்காக இந்திய அரசின் கீழ் செயல்படும் அமைப்புதான் தேசிய அறக்கட்டளை. மேலும், பூனம் அற்புதமான கதையை தன்னகத்தே கொண்டவர். தான் சந்திக்கும் சவால்கள அனைத்தையும் சாதிப்பதற்கான வாய்ப்புகளாக மாற்றிக்கொள்வதே இவரது தனித்துவம். 30 ஆண்டுகளுக்கு முன்பு தன் மகன் ஒரு மாற்றுத்திறனாளியாக பிறந்தபோது விதைக்கப்பட்ட தொடக்கப் புள்ளி அது. "பல்கலைக்கழக பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல்கலைக்கழக ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது என் மகன் பிறந்தான். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். நம்பிக்கை வைப்பதே வீண் என்று அவர்கள் வாய்திறந்து சொல்லிவிட்டார்கள். அவர்கள் சொன்னது முற்றிலும் தவறு. என் மகன் மற்றவர்களைப் போலவே இந்த உலகில் பங்காற்றியிருக்கிறான். இந்தத் துறையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டபோது வியப்பில் ஆழ்ந்தது உண்டு. சாதாரணமானவளாக இருந்த எனக்கு, இந்தத் துறையில் புதிய திருப்பத்தைத் தந்து நிறைய கற்றுக்கொடுத்த என் மகன்தான் எனக்கு ஆசான். பல புதிய விஷயங்களைத் திரும்பத் திரும்ப கற்றுக்கொண்டேன். உங்களை வித்தியாசமான கோணத்தில் அணுகவும், உன்னத நோக்கத்துக்கு வழிவகுக்கவும் உதவக்கூடியதே மாற்றுத்திறன்."


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வித்யாசாகர் பள்ளி

"என் மகன் மாற்றுத்திறனாளி என்பதால் அவனைச் சேர்த்துக்கொள்ள எந்தப் பள்ளியும் தயாராக இல்லை. எனவேதான் ஒரு மையத்தை உருவாக்க தீர்மானித்தேன். முதலில் மாற்றுத்திறனாளிகள் குறித்த தவறான புரிதல்களை அகற்றுவதற்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் இயங்கினேன். இந்தப் பயணத்தைத் தொடங்கியபோது, இந்தத் துறைக்கு பலரும் மனபூர்வமாக வந்தனர். ஒரு புதிய சாகசத்தை செய்து முடிக்கும் மன உறுதியுடன் என்னோடு அவர்கள் இணைந்தனர். நான்கு இடங்கள் மாறிய பிறகு இப்போது சென்னையில் நிலைகொண்டிருக்கிறோம்" என்கிறார் பூனம். 'வித்யாசாகர்' (VidyaSagar) என்று அழைக்கப்படும் இவர் நிறுவிய இந்த மையம் இப்போது வரை சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுடன் வாழும் 3,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு துணைபுரிந்துள்ளது.

பள்ளியில் இருந்து தேசிய அறக்கட்டளைக்கு...

பூனம் நடராஜனின் அரும்பணியைக் கண்டு வியந்தது சென்னை மட்டும் அல்ல, மத்திய அரசும் கூட. "பள்ளிக்கு இயக்குநராக 23 ஆண்டுகள் இருந்துவிட்டேன். அடுத்த கட்டத்துக்குச் செல்ல தீர்மானித்தேன். பள்ளி எனக்கு குழந்தை மாதிரி. அது சுதந்திரமாக இயங்குவதைப் பார்க்க விரும்பினேன். அந்தச் சூழலில்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அறக்கட்டளையில் தன்னார்வ தொண்டு நிபுணருக்கான இடம் இருந்தது. அதன் மூலம் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோருக்கு பாதுகாப்பும் உறுதுணையும் அளிக்கும் வாய்ப்பு மிகுதியானது. எனது நோக்கத்தை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும், குறிப்பாக மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோருக்கும் கொண்டுசெல்வதே தேசிய அறக்கட்டளையின் தலைவர் என்ற முறையில் எனது முக்கியப் பணி ஆனது. மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும்பாலானோரும் எதிர்மறை சிந்தனை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். நாட்டுக்கு பங்காற்றக் கூடிய ஒரு நல்ல குடிமக்களாக தங்களது குழந்தைகளை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் குறித்து அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இது சற்றே கடினமான பணிதான். ஆனால், இந்த நோக்கத்தை அடைவது என்பது மிகவும் வியத்தகு அனுபவம் தரக்கூடியது. இப்படி ஒரு பயணத்தில்தான் பல அற்புத மனிதர்களை கண்டிருக்கிறேன்" என்று நெகிழ்கிறார் பூனம்.

தேசிய அறக்கட்டளை பணிகள்

ஒரு பள்ளியை நிர்வகிப்பது என்ற முற்றிலும் மாறுபட்ட பணியில் இருந்துவிட்டு அரசு துறைக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக்கொள்வது என்பது எளிதான விஷயமல்ல. "அரசுடன் இணைந்து பணியாற்றுவது என்பது மிகவும் வித்தியாசமானது. உங்கள் பொறுப்புக்கு ஏற்ப, தொடர்ச்சியாக சரியான முறையில் செயலாற்ற வேண்டும். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் இது மிகவும் மதிப்பு மிக்கது. ஏனெனில், இந்தியாவில் பெற்றோர்கள் பலரிடமும் மாற்றுத்திறன் குறித்த விழிப்புணர்வும், தகவல் அறிவும் இல்லை. குறிப்பாக, ஏழைகளிடம் சரியான புரிதல் இல்லவே இல்லை. சில நேரங்களில், மாற்றுத்திறனாளி குழந்தைகள் கைவிடப்படுகின்றனர். போதுமான வாழ்வாதாரங்களும் தகவல்களும் இல்லாமையே இந்த அவல நிலைக்குக் காரணம் என்று கருதுகிறேன். இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான களம் என்பது கடந்த 20 ஆண்டுகளில் வெகுவாக முன்னேறியிருக்கிறது. ஆனால், இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தேச அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்திருப்பதை உள்ளார்ந்த உச்சமாநாட்டில் உணர முடிகிறது. ஆனால், முழுமையான மாற்றம் உருவாக இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம். எந்த ஓர் இலக்கும் ஒரு சிறிய அடியை முன்வைப்பதால்தான் அடைய முடியும். அந்த வகையில் நாங்கள் நிறையவே செய்துகொண்டிருக்கிறோம். மாற்றுத்திறன் குறித்த மக்களின் மனப்பான்மையில் மாற்றம் உண்டாக வேண்டும்" என்று பூனம் அழுத்தமாகச் சொல்கிறார்.

உள்ளார்ந்த உச்சிமாநாட்டில் இவரது பங்கு மிக முக்கியமானது. இதுபற்றி கேட்டபோது, "இது அற்புதமான அனுபவம். இதில் பங்கு வகிக்கும் 750 பேருமே உள்ளார்ந்த இந்தியாவின் தூதர்கள் ஆவர். இந்தச் சாதனையாளர்களின் கதைகள், நமக்கான சாத்தியங்களுக்கு நிச்சயம் வழிகாட்டும். இவர்களைப் போல் சாதனையாளர்களாக ஆவதற்கு ஒரே வழி, பாதகங்களைப் புறந்தள்ளிவிட்டு முயற்சிகளில் இறங்குவது ஒன்று மட்டுமே. ஏனெனில், "மாற்றுத்திறன் என்பது பகுதி நேரப் பணியல்ல. அது ஒரு வாழ்க்கை முறை' என்பதை நாம் நினைவுகூர்ந்திட வேண்டும்" என்கிறார் பூனம் நடராஜன்.