சிலிக்கான் வேலியில் முத்திரை பதித்த 3 இந்திய பெண்கள்!

1

இந்தியாவில் இருந்து வெற்றிகரமான பெண் தொழில்முனைவோர்களின் வெற்றிக்கதைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் பல பெண்கள் தங்கள் சொந்த நிறுவனத்தை உருவாக்கும் கனவில் இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் திரிஷா ராய், ரிதுபர்னா பாண்டா மற்றும் யோஷா குப்தா ஆகிய மூன்று பெண்களின் வெற்றிக்கதை நிச்சயம் உற்சாகம் அளிக்கும். இந்த மூன்று பெண்களும் தங்கள் கனவைத்தேடி அமெரிக்கா சென்று, உலக அளவிலான சந்தையை உருவாக்குவதில் வெற்றி பெற்று , கலிபோர்னியாவை சேர்ந்த ஆக்சலேட்டரான 500ஸ்டார்ட் அப்ஸ் நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்திருக்கின்றனர்.

பிரான் அண்ட் வில்லோ கதை

இரண்டு ஆண்டுகளுக்கு முன் திரிஷா அமெரிக்காவில் தனது வீட்டிற்கான அலங்காரத்தில் ஈடுபட்டிருந்த போது திரைச்சீலைகள் மற்றும் ஜன்னல் அலங்காரங்கள் மிக அதிக விலை கொண்டவையாக இருப்பதை கவனித்தார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை சில 10,000 டாலர் அளவு விலை இருந்தன. உடனே கொல்கத்தா மற்றும் தில்லியில் ஜவுளி ஆலைகள் வைத்திருந்த தனது உறவினர்களுக்கு தொலைபேசி செய்து, அமெரிக்காவில் இவற்றின் விலை ஏன் அதிகமாக இருக்கின்றன என தெரிந்து கொள்ள முயன்றார். அப்போது தான் உயர்தர பருத்தி திரைச்சீலைகளுக்கான விநியோக அமைப்பு செயல்படும் விதம் பற்றி தெரிந்து கொண்டார். இதன் பயனாக மேலும் ஆய்வு செய்து அவர் பிரான்&வில்லோவை உருவாக்கினார்.

”இந்த விநியோக செயலில் உள்ள பலர் ஆலைகளில் இருந்து வாங்கி அதற்கு மேல் விலை வைத்து அமெரிக்காவில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு விற்கின்றனர்” என்கிறார் திரிஷா. 

விற்பனை நிலையங்களில் 250 சதவீதம் அதிக விலைக்குக் கூட விற்கப்படலாம்.

இந்த விநியோக அமைப்பில் 2 அல்லது 3 இடைத்தரகர்களை நீக்க முடிந்தால் அமெரிக்காவில் விலையை பெருமளவு குறைக்க முடியும் என நம்பினார். ஆனால் வெறும் திரைச்சீலைகள் மற்றும் தலையணை உரைகளை மட்டும் விற்பனை செய்யாமல், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிரத்யேகமான வடிவமைப்பு மற்றும் சேவையை வழங்க தீர்மானித்தார். இதற்காக அவர் சரியான தொடர்புகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. கண்காட்சி ஒன்றில் சந்தித்த நபர் மூலமாக தமிழகத்தின் ஆலையில் இருந்து மாதிரிகளை தருவித்தார். பெல்ஜியத்தில் உள்ள ஆலையில் இருந்து சிறந்த தரத்திலான துணிகள் தருவிக்கப்பட்டு, பிரத்யேக வடிவமைப்பில் தில்லியில் தைக்கப்பட்டன. இந்தியாவில் இருந்து இவை பெறப்பட்டு கலிப்போர்னியாவில் உள்ள வேர்ஹவுசில் இருந்து அமெரிக்கா முழுவதும் விநியோகிக்கப்பட்டன. இவற்றின் மீது 60 சதவீத அளவுக்கு மட்டுமே லாப விகிதம் இருந்தது.

”இதன் காரணமாக வர்த்தகம் பெரிய அளவில் வளர்ந்தது’ என்கிறார் திரிஷா. ஏற்கனவே பே பால் மற்றும் இபே ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் இதில் கைகொடுத்தது என்கிறார். 2014 ல் முதல் ஆர்டர் கிடைத்தது. இப்போது அவர் நிறுவனம் மாதந்தோறும் 50,000 டாலர் வருவாய் ஈட்டுகிறது. 45 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இதன் மூலம் 500 ஸ்டார்ட் அப்ஸ்- ன் 125000 டாலர் நிதி கிடைத்தது.

சிறுதொழில்களுக்கான சேவை

திரிஷா போலவே ரிதுபர்னாவிடமும் அமெரிக்க அனுபவம் பற்றி சொல்ல ஒரு கதை இருக்கிறது. அவரது Fulfil.IO நிறுவனம் சிறுதொழில் நிறுவனங்கள் கிளவுட் நுட்பத்திற்கு மாற உதவும் வகையில் துவக்கப்பட்டது. 2012ல் ரிதுபர்னா, பொறியியல் பட்டம் முடித்து பொட்டிக் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றத்துவங்கினார். அதன் பிறகு உலகம் முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்கள் பல வழிகளில் விற்பனை செய்யும் போது தங்கள் கையிருப்பை நிர்வகிக்க தேவையான வசதி இல்லாததை உணர்ந்தார். இதனையடுத்து அவர் பழைய இ.ஆர்.பி அமைப்பிற்கு மாற்றாக செயல்படக்கூடிய அமைப்பை உருவாக்கினார். இருப்புகள் மற்றும் ஆர்டரை பின் தொடர இது வழி செய்தது. “இது ஒரு வாய்ப்பு என்றாலும், எளிதாக இருக்கவில்லை. ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐடி முறைக்கு மாறாக டேப் அடிப்படையிலான பல வழி டிராக்கிங் மற்றும் நிறைவேற்றல் அமைப்பை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஏற்றுக்கொள்ள செய்ய முடிந்தால் இந்த ஐடியவை செயல்படுத்துவது சாத்தியம்” என்கிறார் ரிதுபர்னா.

எனவே ரிதுபர்னா 2015 துவக்கத்தில் வேலையை விட்டு விலகி மூன்று இணை நிறுவனர்களுடன் இணைந்து சேவையை உருவாக்கத்துவங்கினார். அமெரிக்காவில் சோதித்து பார்க்கப்பட்டால் மட்டுமே அங்கு வெற்றி பெற முடியும் என்பதை அவர் முதலில் தெரிந்து கொண்டார். ஆலோசனை மற்றும் ஆய்வு நிறுவனமான ஐடிசி அறிக்கை படி 2015 ல் அமெரிக்காவின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் தங்கள் ஐடி கட்டமைப்பை மாற்ற 161 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. எனவே அவர் அமெரிக்க சந்தையை முதலில் தேர்வு செய்தார்.

2015 மத்தியில் ரிதுபர்னா அமெரிக்க சென்ற போது புல்பில்.இயோ சில மாதங்கள் கொண்டதாக மட்டுமே இருந்தது. அவரும் இணை நிறுவனர்களும் டூல் உற்பத்தி நிறுவனம் ஒன்றை அடையாளம் கண்டனர். அவரது வர்த்தகம் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மின்வணிக தளங்களுக்கு சப்ளை செய்து கொண்டிருந்தது. இந்த உற்பத்தியாளரால் தனது இருப்பு முழுவதும் எங்கே செல்கின்றது என்பதை ஒரே இடத்தில் பார்க்க முடியவில்லை. இதனால் லாபமில்லாத இடங்களுக்குக் கூட சரக்கு அனுப்பி நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துக்கொண்டிருந்தது. 

“அந்த உற்பத்தியாளர் தனது வர்த்தகம் பற்றிய விவரங்களை ஒரே இடத்தில் பார்க்கும் வசதியை எங்கள் சேவை அளித்தது. உற்பத்தியாளர் தனது ஐடி விவரங்கள் முழுவதையும் எங்களுக்கு மாற்றி கொடுத்தவுடன் இரண்டே நாட்களில் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துவிட்டோம்” என்கிறார் அவர்.

மாதம் 1,000 டாலர் எனும் சந்தா முறை எட்டு மாதங்களில் பிரபலமாகி , நிறுவனம் இப்போது 20 கட்டண வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறது. எனவே 500 ஸ்டார்ட் அப்ஸ் கவனத்தை ஈர்த்ததில் வியப்பில்லை.

திரிஷாவின் நிறுவனம் விநியோக அமைப்பில் கவனம் செலுத்தியது என்றால் ரிதுபர்னாவின் நிறுவனம் விநியோகம் மற்றும் வர்த்தகத்தில் கவனம் செலுத்தியது.

அவர்களின் தோழியான யோஷா மின்வணி சார்பு நிறுவனங்களில் கவனம் செலுத்தி, அதன் மூலம் கூப்பன் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

லாஃபா லாஃபாவின் கதை

யோஷா, 2014 ல் ஹாங்காங்கில் லாபாலாபாவை (Lafalafa) துவக்கினார். அவரது ஐடியா எளிமையானதாக இருந்தது. இ-காமர்ஸ் நிறுவனங்களின் சார்பு நிறுவனமாக ஆக முடிந்தால், அவர் தனது கமிஷன் தொகையின் பெரும்பகுதியை லாஃபாலாஃபா தளம் மூலம் கூப்பன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார். அதே நேரத்தில் இணைய விற்பனையையும் பெருக்க வழி செய்வார். அவரது நிறுவனம் அளித்த சேமிப்பு காரணமாக வாடிக்கையாளர்களின் வருகையும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவில் இ-காமர்ஸ் சந்தை அடுத்த நான்கு ஆண்டுகளில் 100 பில்லியன் டாலரை தொடும் என்றும் இதில் சார்பு நிறுவனங்கள் வர்த்தகம் 15-20 சதவீதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. “இந்தத் துறையில் போட்டி அதிகமாக இருப்பதை மீறி வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது” என்கிறார் யோஷா. மைஸ்மார்ட்பிரைஸ், கூப்பன் துனியா, கிராபான், கேஷ்கரோ மற்றும் பென்னிபுல் ஆகிய நிறுவனங்கள் அவரது போட்டியாளராக இருக்கின்றன.

இந்த வர்த்தகம் மொபைல் சார்ந்ததாக இருந்ததாலும், மொபைல் பயன்பாடு அதிகரிப்பதாலும் இவரது நிறுவனம் 500ஸ்டார்டப்ஸ் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டது. லாஃபாலாஃபாவின் 70 சதவீர் ஆர்டர்கள் செயலி மூலம் வருகிறது. “தனிப்பட்ட தன்மை மற்றும் குறிப்பிட்டவரை மையமாக கொண்டு செயல்படுகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளருக்கு பொருத்தமானதை பரிந்துரைக்கிறோம்” என்கிறார் யோஷா. நிறுவனம் ஆன்லைன் அல்லாத முறையையும் கையாண்டு வருகிறது. பிளிப்கார்ட், பேடிஎம்,ஸ்னேப்டீல் மற்றும் ஷாப்க்ளுஸ் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட ஆன்லைன் பிராண்ட்களுடன் நிறுவனம் கூட்டு வைத்துக்கொண்டுள்ளது. 500ஸ்டார்ட் அப்ஸ் இதில் 125000 டாலர் முதலீடு செய்துள்ளது.

500ஸ்டார்ட் அப்சில் கற்றது என்ன?

சிலிக்கான் வேலியில் செயல்படும் ஸ்டார்ட் அப்களில் இந்திய பெண்களால் நடத்தப்படும் மூன்று நிறுவனங்கள் என்பதால் இத்துறையில் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. நிறுவனர் டேவ் மெக்லூர் இவர்களை வாரம் ஒரு முறை சந்திக்கிறார். அவரது குழு கீழ்கண்டவற்றில் வழிகாட்டுகிறது.

* நிதி திரட்டல் மற்றும் நிபந்தனைகளை கையாள்வது.

* வல்லுனர்களுடன் பேசி வளர்ச்சிக்கு வழிகாண்பது.

* வழிகாட்டிகளை அணுகும் தன்மை

* மற்ற ஸ்டார்ட் அப்களுடன் செயல்படும் வசதி.

* ஏடபிள்யூஎஸ், மைக்ரோசாப்ட், ரேக்ஸ்பேஸ், சாப்ட்லேயர் ஆகியவற்றிடம் இருந்து தொழில்நுட்ப சலுகைகள்.

இந்திய பெண்களுக்கான வாய்ப்புகள்

வளரும் நாடுகளில் உள்ள பெண்கள் மேற்குலகில் வெற்றி பெறுவது எளிதானதல்ல. அது மட்டு அல்ல உள்ளூரிலும் கூட அவர்கள் தடைகளை சந்திக்கலாம். ஆனால் ஒரு சில பெண்கள் இதை மீறி கனவு காண்கின்றனர். செல்வந்தரான அனோஷே அன்சாரி (Anousheh Ansari ) இதற்கு நல்ல உதாரணம். 1980 களில் அவர் ஈரானில் இருந்து அமெரிக்க குடிபெயர்ந்த போது ஆங்கிலம் பேசத்தெரியாதவராக இருந்தார். ஆங்கில அறிவி இல்லாததால் அவர் 11 வதுக்கு பதில் 9 வது படிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகிகள் கூறினர். ஆனால் அவர் இரண்டு ஆண்டுகளை வீணாக்க விரும்பவில்லை. அவர் கோடை காலத்தில் 12 மணி நேர ஆங்கில வகுப்பில் சேர்ந்து மீண்டும் 11 ம் வகுப்பில் சேர தகுதி பெற்றார்.

அடுத்த பத்தாண்டுகளில் அவர் தனது தொலைத்தொடர்பு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 750 மில்லியன் டாலருக்கு விற்றார், 1997 ல் அவர் விண்வெளிக்கு சென்றார். இது போன்ற சாதனைகளை தான் இந்திய பெண்கள் இலக்காக கொள்ள வேண்டும். இன்று இந்திய பெண்கள் வர்த்தக நிறுவனங்களை வழி நடத்துகின்றனர். நிறுவனங்களில் தலைமை பதவியில் இருக்கின்றனர். ஐசிஐசிஐ வங்கியின் சாந்தா கோச்சர், ஆக்சிஸ் வங்கியின் ஷிகா சர்மா, ஐபிஎம் வனிதா நாராயணன், ஓம்டியார் நெட்வொர்க்கின் ரூபா குட்வா ஆகியோர் நன்கறிந்த உதாரணங்களாக இருக்கின்றனர். இந்த தலைமுறை பெண்கள் தங்கள் கனவுகளை உலக அளவில் கொண்டு சென்று வெற்றி பெறும் ஊக்கம் பெற்றுள்ளனர்.

ஆக்கம்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: சைபர்சிம்மன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்