குருஷேத்ரா’17- மாணவர்களுக்கான தொழில்நுட்ப விழா!  

0

கிண்டி பொறியியல் கல்லூரியின் தொழில்நுட்ப குழுமம் நடத்தும் குருஷேத்ரா ’17 - தொழில்நுட்ப மேலாண்மை விழா, இரண்டாவது நாள், பல்வேறு கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. புகைப்படங்களின் பிந்தைய செயலாக்கம், தொழில்முறை பட்டறைகளான ஐபிஎம் நிறுவனத்தின் இயந்திர கற்றல், சைகைகள் மூலம் கட்டுப்படுத்தும் எந்திர அறிவியல் போன்ற பயிற்சி பட்டறைகளில் மாணவர்கள் ஆர்வமோடு கலந்துக் கொண்டனர்.

மேலும், இரு சிறப்பு விருந்தினர் உரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை ஐஐடியில் 2001 முதல் 2011 வரை  இயக்குனராக பணிபுரிந்த எம்.எஸ்.ஆனந்த் உரையாற்றினார். கார்த்திகேயன் விஜயகுமார், நான்கு மில்லியன் மாணவர்கள் பயன்படுத்தும் இந்தியாவின் மிகப்பெரிய இன்டர்ன்ஷிப் வலைத்தளமான ட்வென்ட்டி19ன் (Twenty19), இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான கார்த்திகேயன் விஜயகுமார் சிறப்புரையாற்றினார்.

காட் ஸ்பீடு (God speed), ரோபோ வார்ஸ் (Robo Wars), நெட்வொர்க் கீக் (Network Geek), நின்ஜா கோடிங் (Ninja Coding), டிசிஎஸ் இன்னோவேட் (TCS Innovate), அல்கட்ராஸ் (Alcatraz), ஹேக்கத்தான் (Hackathon) போன்ற போட்டிகளும் மாணவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

அடுத்து முக்கிய சிறப்பம்சமான கே! விருதுகள். மற்ற விருதுகளைப் போல் அல்லாமல் சமூகத்தின் உண்மையான கதாநாயகர்களை அடையாளப்படுத்துகிறது. கே! விருதுகள் பின்வரும் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது:

* சாந்தி செளந்தராஜன் - இந்திய தடகள வீராங்கனை, இவர் சர்வதேச போட்டிகளில் 12 பதக்கங்களும், 50 பதக்கங்களை தமிழகத்துக்காகவும் வாங்கி குவித்துள்ளார்.

* சாஜி தாமஸ் - மாற்றுத்திறனாளியான இவர் 14 லட்ச ரூபாய் மதிப்பிலான விமானத்தை உருவாக்கியுள்ளார்.

* ஶ்ரீராம் மற்றும் சுந்தரம் - தையல் இலை மூலம் தட்டு மற்றும் குவளைகளைச் செய்து தொழில் புரிகின்றனர்.

* சுபிக் பாண்டியன் - தண்ணீர் கேன்களை பயன்படுத்தி கழிப்பிட வசதிகளை உருவாக்கிய எட்டாம் வகுப்பு மாணவர்.

* ஆர்த்தி - ஏழாம் வகுப்பு மாணவி, செங்கற்களை அடுக்கும் கருவியை வடிவமைத்துள்ளார்.

சாதனையாளர்களுக்கு கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தின் முதல்வர் டாக்டர். பி. நாராயணசாமி விருதுகளை வழங்கி கெளரவித்தார்.