ஆரம்பப்பள்ளி கல்வி மாணவர்களுக்கு உதவும் 'ஈ-காமராஜர்' செயலி அறிமுகம்!

1

ஆரம்பப்பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் 'ஈ-காமராஜர்' என்ற ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் “காமராஜ் மின் ஆளுகை செயலி” என்று இதற்கு பெயரிட்டிருக்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கடந்த செவ்வாய்கிழமை அன்று தஞ்சையில் இதை அறிமுகப்படுத்தினார். இந்த செயலி இலவசமாக பயன்படுத்தக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று வயதிலிருந்து பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. “புனிதக் கடமையாக” இதை செய்வதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார். காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்த போது தமிழகத்தில் 15,000க்கும் மேற்பட்ட பள்ளிகளை உருவாக்கினார். மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தினார். காமராஜர் வழியில் நடக்கப்போவதாக தெரிவித்த வாசன், 'ஈ-காமராஜர்' செயலியின் மூலம் அடுத்தத் தலைமுறைக்கான கல்வியை வீட்டுக்கே கொண்டு செல்லும் நோக்கோடு உருவாக்கப்பட்டது தான் இந்த செயலி என்றும் தெரிவித்தார்.

செயலியில் என்னென்ன இருக்கிறது?

சமச்சீர் கல்வியில் இருக்கும் பாடங்களான அடிப்படை கணிதப் பாடங்கள் இருக்கிறது. "நல்லொழுக்கங்கள்” என்ற பகுதியின் கீழ் அனிமேஷன் வீடியோக்கள் தொடர்ச்சியாக பதிவேற்றப்பட இருக்கின்றன. இந்த அனிமேஷன் வீடியோக்கள் மூலம் வாழ்க்கைக்கு தேவையான சில அடிப்படை நன்னெறிகள் மற்றும் சுத்தம் போன்றவற்றின் அவசியம் பற்றி சொல்லித்தரப்பட உள்ளது. அன்றாடம் செய்யக்கூடிய அடிப்படை உடற்பயிற்சிகள் பற்றி இதில் இடம்பெற்றிருக்கின்றன. இவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இருக்கின்றன.

“ஆசிரியர்கள் பலர் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள். நாங்களே குழந்தைகளுக்கு இதை காட்டிவிடுகிறோம் என்பது போல சிலர் ஆர்வமாக முன்வருகிறார்கள். முதலில் இதற்கு என்னென்னவெல்லாம் தேவை என்று சந்தையை ஆய்வு செய்த பிறகே இதை உருவாக்கினோம். ஆசிரியர்களே இது போன்ற ஒன்றுக்கான தேவை இருப்பதாக தெரிவித்தார்கள். பாடத்திட்டத்தில் இருக்கக்கூடிய எல்லாம் உள்ள செயலி ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்கள்.” என்கிறார் விஜய் ஞானதேசிகன்.

இவர் தமிழ்மாநில காங்கிரஸின் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்தின் தலைவராக இருக்கிறார்.

இதன் உருவாக்கத்தில் பங்காற்றியவர்கள்

இந்த செயலியை உருவாக்க 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி இருக்கிறார்கள். டாக்டர் அனிதா என்ற கல்வியாளர், பல்வேறு புதுநிறுவனங்களை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர். கல்வி சார்ந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியிருப்பவர். இதற்காக பல மணிநேரம் உழைத்திருக்கிறார். டாக்டர் ஜெயந்தி என்பவர் குழந்தைகளுக்கான யோகா பயிற்றுவிப்பவர். குழந்தைகளுக்கான மூளைப்பயிற்சி, நினைவுத்திறன் வளர்ப்பு போன்றவற்றில் இருப்பவர். இந்த செயலிக்காக இவரும் தன் பங்கை ஆற்றியிருக்கிறார். இது போல கண்ணுக்கு தெரியாதப் பலரும் இந்த செயலிக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

வெள்ள பாதிப்பு

"இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தொடக்கக்கல்வியை கூட முழுமையாக முடிக்காமல் இடையிலேயே பள்ளியில் இருந்து நின்று விடுகிறார்கள். மாநில அளவில் இது 22 சதவீதமாக இருக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த மழை, வெள்ள பாதிப்பின் காரணமாக இந்த இடைநிற்றல் விகிதம் இன்னும் அதிகமாகுமோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுகிறது. மழை வெள்ளத்தால் 4 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும், அதன் கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் இலட்சக்கணக்கான மாணவர்களின் இயல்பான கல்வி கற்கும் நிலை பாதிக்கப்படும் என்ற கவலையும் நமக்கு ஏற்படுகிறது. இந்நிலையை சீர் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான், “ஈ-காமராஜர் செயலி” என்ற காமராஜர் மின் “ஆளுகை செயலி”யை தமிழ் மாநில காங்கிரஸ் அறிமுகப்படுத்தியுள்ளது” என்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.கே.வாசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை பதிவிறக்க : e-kamarajar