சிக்கலை தீர்த்த சிகாந்தோ : குப்பை அள்ளும் இயந்திரம் வடிவமைத்த மாணவர்!

சிகாந்தோ மண்டல், ஒன்பதாம் வகுப்பு படிக்கும்பொழுது, ஸ்வச்சதா கார்ட என்னும் குப்பை அள்ளும் இயந்திரத்தை உருவாக்கினார்.

0

சிகாந்தோ மண்டல் பள்ளியில், காலை வேளையில் மற்ற மாணவர்களை காட்டிலும் வித்தியாசமான வேலையில் ஈடுபடுவார். மற்ற மாணவர்கள் பிரார்த்தனை, படிப்பு என இருக்க, சிகாந்தோ மற்றும் அவரது வகுப்பு மாணவர்கள் பள்ளியை சுத்தம் செய்வதில் ஈடுபடுவர்.

சவாலான குழந்தைப்பருவம் :

"பொதுவாக சிறுமிகள் குப்பைகளை பெருக்கித் தள்ள, சிறுவர்கள் அதனை அள்ளி, கூடையில் கொட்டுவர். ஆனால் என் நண்பர்கள், அவற்றை தொடுவதற்கும், வெறும் கரங்களில் தூக்குவதற்கும் தயங்கியதை நான் பார்த்தேன். அதன் காரணமாக, அவர்கள் சிக்கலை போக்க யோசிக்க துவங்கினேன்," என கூறுகிறார் சிகாந்தோ. 

சிகாந்தோ; குப்பை அள்ளும் ஒரு இயந்திரத்தை வடிவமைக்கும் யோசனையை, தனது பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் அந்த யோசனையை ’இன்ஸ்பியர் விருதுகளுக்கு’ அனுப்பிவைக்க கூறியுள்ளனர். இவர் நம்பிக்கை இன்றி அனுப்பி வைத்தாலும், அவரே எதிர்பாரா வண்ணம், அவரது யோசனை ஏற்கப்பட்டு அதனை இயந்தரமாக கட்டமைக்க. அவரது கணக்கில் 5000 ரூபாய் செலுத்தப்பட்டது.

அதன் பிறகு சிகாந்தோ, ஒன்றரை மாதங்கள் செலவிட்டு, தனது யோசனைக்கு தொடக்க வடிவம் கொடுத்துள்ளார். அதனை கைகளால் இயக்கவும், தேவையான இடங்களுக்கு நகர்த்தவும் முடியும். மேலும் அதன் மூலம் குப்பைகளை அள்ளவும் இயலும்.

சிறுகச்சிறுக தவறுகளை திருத்தி, முதல் மாதிரியை, பழைய மரச்சாமான்கள், வண்டிகளின் உதிரிபாகங்கள், ஒதுக்கித்தள்ளப்பட்ட பொருட்கள் ஆகியவற்றில் இருந்து உருவாக்கியுள்ளார்.

வேறுபடும் புள்ளி :

சந்தையில் உள்ள மற்ற குப்பை அள்ளும் இயந்தரங்களுக்கும் இதற்கும் உள்ள வேற்றுமையை பற்றி கேட்டபோது, உற்சாகமாக பதில் அளித்தார் சிகாந்தோ.

"சந்தையில் உள்ள மற்ற இயந்திரங்கள் மின்சாரத்தாலோ அல்லது எரிபொருள் மூலமாகவோ இயங்கக்கூடியதாக உள்ளன. ஆனால் எனது இயந்திரம் கைகளால் இயக்கக்கூடியது. எடை குறைவானது. மேலும் மிக எளிதாக இயக்க இயலும்..."

சிகாந்தோவின் இயந்திரம், தனித்தன்மை வாய்ந்த பொருத்தல்களோடு வருகின்றது. குப்பைகளை நாம் பற்றி எடுக்க ஒரு கருவி உள்ளது, மேலும் மொத்த வண்டியையும் கவிழ்க்காது, குப்பையை கொட்ட வசதியும் உள்ளது.

"மேலும் குப்பை அள்ளுபவர் துடைப்பத்தையும், நீர் குடுவையையும் வைக்க தனியாக வண்டியில் ஒரு இடம் ஒதுக்கியுள்ளேன், மேலும் மற்ற இடங்களில் இருந்து எடுக்கப்படும் குப்பைகளையும் சேர்த்து வைக்க இடமுள்ளது," என்கிறார் சிகாந்தோ.

இந்த வசதிகள், நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் துயர் துடைக்கும் வண்ணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி எளிதாக அவர்கள் பூங்காக்களிலும் பள்ளிகளிலும் துப்புரவு செய்ய இயலும்.

அங்கீகாரம் மற்றும் உதவி :

மாவட்ட அளவில் நடைபெற்ற ’இன்ஸ்பையர்’ விருதுகளில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு, சிகாந்த்தோவின் மாதிரி பல விருதுகளை குவித்தது மட்டுமன்றி மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற கண்காட்சிக்கும் தகுதி பெற்றது. 

"2016ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கண்காட்சியில் உபி-ல் இருந்து வந்த 3 மாதிரிகளில் ஒன்றாக என்னுடைய மாதிரியும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி இவரது மாதிரியை கண்டு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்."

அதன் பின்பு இவரது மாதிரியை உலோகத்தில் செய்ய தேசிய கண்டுபிடிப்பு இயக்குனரகம் உதவியுள்ளது. அடுத்த கட்டமாக அதனை விற்கவும் உதவி செய்துள்ளனர். தற்போது இந்த குப்பைகளை அள்ளும் இயந்திரத்தின் அனைத்து உரிமைகளும் ’சர்ஜான் இன்னோவேட்டர்ஸ்’ என்ற குஜராத்தை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

"விரைவில் இந்த இயந்திரத்தை அதிக அளவில் தயாரிக்க உள்ளோம்" என்கிறார் கௌரவ் ஆச்சார்யா. அவரிடம் தான் காப்புரிமை முழுமையாக உள்ளது.

இந்த "ஸ்வச்சதா கார்ட்டின்" மூலமாக குப்பை அள்ளுதல் மிக சுலபமாக அகற்றப்படும் என்கிறார் அவர்.

கௌரவ் அசல் மாதிரியில், சிலவற்றை சௌகர்யங்களுக்காக சேர்த்து, அதன் செயல்திறனை குஜராத்தில் உள்ள பதான் நகரில் பரிசோதித்து பார்த்துள்ளார். 10,500 ரூபாயில் ஸ்வச்தா கார்ட் விரைவில் மற்ற நகராட்சிகளிலும் செயலாற்ற உள்ளது.

மேலும் ராஷ்ட்ரபதி பவனில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கண்டுப்பிடிப்புகளுக்கான திருவிழாவில் ஒரு வார காலம் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் தேசிய கண்டுபிடிப்புகளுக்கான இயக்குனரகம் நடத்திய "இன்னோவேஷன் கான்கிலேவ்வில்" கலந்துகொண்ட மிகச்சிறு வயது கண்டுபிடிப்பாளர் இவர்தான்.

மேற்கு வங்காளத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்து உபி-யில் தங்கியது சிகாந்தோவின் குடும்பம். சிகாந்தோவிற்கு எதிர்காலத்தில் பொறியாளன் ஆகி, மேலும் பல அட்டகாசமான இயந்திரங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். வறுமையின் பிடியில் குடும்பம் இருந்தாலும், எதிர்காலத்தில் ஏற்றம் உண்டு என நம்புகிறார் அவர்.

"வரும்காலத்தில் கொடலா கிராமத்தில் சொந்த வீடு கட்ட இயலும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், எனது அண்ணன் அவனது பட்டப்படிப்பை படித்து முடிக்க தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றான். அவனுக்கும் உதவவேண்டும்," என்று முடித்தார் சிகாந்தோ.