மருத்துவர்களுக்காக இயங்கும் இந்தியாவின் முதல் டாக்டர் டிவி 'Themeditube.com'

0

மருத்துவர்களின் அறிவுப்பாலம்:

Themeditube.com, மருத்துவர்களுக்கு இடையே அறிவுப் பாலமாக விளங்கும் இந்தியாவின் முதல் காட்சி ஊடகத்தினை உருவாக்கி வெற்றிகரமாக்கியவர் நடராஜன். மருந்துப் பொருள் நிறுவனங்களையும், மருத்துவர்களையும் ஒருசேர ஈர்த்திருக்கும் இவர் ஒரு மருத்துவரல்ல..! பின் எப்படி சாத்தியமானது? இதைப் பற்றி அறிந்து கொள்ள தமிழ் யுவர் ஸ்டோரி நடராஜனிடம் நடத்திய உரையாடல் இதோ...

காரைக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட தான் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்ததாக அறிமுகம் செய்து கொள்கிறார் நடராஜன். “மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்களுக்கான இணையதள காட்சி ஊடகத்தை வெற்றிகரமான தொழிலாக மாற்றியிருக்கிறேன்” என்கிறார் பெருமைப் பொங்க.

புதிய பாதைக்கான சிந்தனை:

இருபது தலைமுறைகளாக தொழில் வர்த்தகத் துறையில் உள்ள குடும்ப பின்னணியால் தனக்கு இயல்பிலேயே அந்த ஆற்றல் இருந்தது என்கிறார் நடராஜன்.

குடும்பத் தொழில் மற்றும் வர்த்தகங்களில் ஈடுபாடு காட்டிவந்த நிலையில் புதிய வர்த்தக வழியாக தனக்குத் தோன்றிய சிந்தனைதான் "themeditube.com" என்கிறார்.

வழக்கமான ஒரே வழித்தடத்தில் பயணிக்கும் வேலைகள் அலுப்பைத் தரத்தொடங்கிய தருணத்தில், புதிதாக மாற்றாக ஏதாவது செய்யவேண்டும் என்று தனக்குள் இருந்த உந்துதலே இதற்குக் காரணம் எனச் சொல்கிறார் நடராஜன்.

Meditube உருவான கதை

தனது குடும்பத் தொழில்களில் மருந்துப் பொருள்களின் வினியோகமும் ஒன்றென சுட்டிக்காட்டும் நடராஜன், அதில் கிடைத்த அனுபவங்கள் தனது புதிய தொழிலை அமைக்க ஆதாரமாக அமைந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், பல மருத்துவ பிரதிநிதிகள், முகவர்கள், மருந்துவர்களை சந்திக்கவும், கலந்துரையாடவும் கிடைத்த வாய்ப்பு அந்த துறைக்கான புதிய தேவைகளை அறிந்து கொள்ள வாய்ப்பானது என்கிறார்.

இதயம், எலும்பு, நரம்பு, என்றவாறு பல்வேறு வகைப்பட்ட மருத்துவம், தன்னளவில் மிகப்பெரும் வளர்ச்சியடைந்துள்ள நவீன காலம் இது. அனைத்தும் தொழில்நுட்பமயமாகியுள்ள தற்காலத்தில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு அவசியமானவற்றை “வீடியோ” எனப்படும் காணொளிகள் மூலம் தகவல்களை அவர்கள் கைக்குக் கொண்டு சேர்ப்பதுதான் புதிய களம் என்று அப்போது முடிவு செய்ததாகச் சொல்கிறார். ச்ந்தா அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் அத்துறையினர் தங்களுக்கு தேவையான காணொளிகளை கண்டு தகவல்களை பெறமுடியும் . இதுவே இந்நிறுவனத்தின் வருவாய் மாதிரி.

புதிய சிந்தனை இப்படி வந்ததென்றால், அதனை வெற்றிகரமாக வணிகமயமாக்குவதற்கு, 8 ஆண்டுகளாக ஏர்டெல், ஹிந்துஸ்தான் டைம்ஸ், கேனான் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் வணிக ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவங்கள் உதவின என்கிறார் மேலும்.

செயல்பாடு

அர்ப்பணிப்புணர்வுடன் சிறந்த மருத்துவக்கல்வியை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட themeditube.com, தேர்ந்த மருத்துவர்களின் அனுபவங்களையும், சிறந்த மருத்துவ மையங்களின் ஆய்வுகளையும் இத்தளத்தில் வீடியோ பதிவுகளாகத் திரட்டி உலகளவில் உள்ள மருத்துவர்களுக்கும் மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கும் அளிப்பதாகக் கூறுகிறார் நடராஜன்.

பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச மையங்களுடன் இணைந்து themeditube.com பணியாற்றுவதாகக் குறிப்பிடுகிறார் நடராஜன். கை அறுவை சிகிச்சைக்கான இந்திய மையம், தோள் அறுவை சிகிச்சை மையம் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மையம், டெல்லி கங்காராம் மருத்துவமனை, மும்பையிலுள்ள தேசிய தீக்காய சிகிச்சை மையம், கொச்சி கங்கா மருத்துவ மனை, கோவை கங்கா மருத்துவமனை ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை என்கிறார்.

முன் அனுபவம் முதலீடு இவையெல்லாம் தனக்கு பிரச்சினை இல்லை என்றாலும், இந்த மருத்துவ வீடியோ தளத்தை உரியவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது பெரும் சவாலாக இருந்தது என்கிறார் நடராஜன்.

“மருத்துவர்கள் இயல்பாகவே நேரமின்றி பிசியாக இருப்பவர்கள். ஒருநாளுக்கு 24 மணி நேரம் போதாது என்ற நிலையில் இருப்பவர்கள், தங்களின் நேரத்தை themeditube.com தளத்தில் செலவிட வைப்பது பெரும் சவாலாக இருந்தது”

“சிறிது சிறிதாக அவர்களிடம் நம்பிக்கையை உருவாக்கி, இந்தத் தளத்தின் மூலம் பல மருத்துவ படிப்பினைகளை அறிந்துகொள்ள முடியும் என்பதை மெய்ப்பித்து, அந்த சவாலை எதிர்கொண்டோம்” என்கிறார் நடராஜன்.

நிறுவனர்கள்

Meditube.com நிறுவனரான நடராஜன் தலைமைச் செயல் அதிகாரி என்ற பொறுப்பில், இதன் வளர்ச்சி மற்றும் புதிய உருவாக்கங்களில் அக்கறை செலுத்துகிறார்.

இதன் இணை நிறுவனரான சதீஷ் பட், மங்களூர் யெம்மாபோயோ மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவராக உள்ளார். இத்தளத்திற்கு மருத்துவரான இவரது பங்கு நிறுவன வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது என்கிறார் நடராஜன்.

சதீஸ் பட்டுடன் இணைந்து இருவராக இந்த சவாலை எதிர்கொண்டதாக கூறும் நடராஜன், தற்போது பத்து முழு நேர பங்களிப்பாளர்களும்,  27 ஒப்பந்த பங்களிப்பாள்களயும் கொண்டு ஒரு விருட்சமாக இந்நிறுவனம் வளர்ந்திருக்கிறது.

அங்கீகாரம் மற்றும் விருதுகள்

Tiecon 2015 ஆம் ஆண்டு விழாவில், முன்னணி முதலீட்டு நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறந்த தொழில் முனைவோருக்கான விருதைப் பெற்றது தங்களின் தொழில் மற்றும் வணிகமுறைக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரம் என மகிழ்கிறார் meditube நிறுவனர்.

VIT இன் வணிக திட்ட ஆய்வுக்குழுமத்தில் இடம் பெற்றுள்ள meditube அடுத்தகட்டமாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டிலும் தடம் பதிக்க உள்ளதாக கூறுகிறார்.

அறுவை சிகிச்சை மருத்துவம் தொடர்பான வீடியோ பதிவுகள், பயிற்சி வகுப்புகள், ஆய்வுரைகள், என பல்வேறு வகையான தேவைகளை இணைய வழியில் தரும் தங்கள் தளம், உலக அளவில் இத்துறையில் முதல் நிலையை அடைய வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என்கிறார் நடராஜன்

சிறுவயதில் தன் உள்ளத்தில் ஆழப்பதிந்த, ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்சின், 'மிகப் பெரும் குறிக்கோளோடு வாழ்' என்ற சொற்களும், அசிம் பிரேம்ஜி மற்றும் அமுல் நிறுவனர் குரியன் ஆகியோரின் 'விடாமுயற்சி' என்கிற மந்திரச் சொற்களும் தான், தன்னை சோர்வடையாமல் வைத்திருப்பதாக்க கூறுகிறார் நடராஜன்.

“பூமிக்குக் கீழே 5000 அடியில் எண்ணெய் இருக்கும் நிலையில் 4800 அடி தோண்டிவிட்டு சோர்ந்து தோல்வியடைந்தவர்கள் பலர். நான் எண்ணெய் கிடைக்கும் வரை தோண்டுவதை நிறுத்தமாட்டேன்” என்கிறார் நடராஜன்.

இணையதள முகவரி: themeditube.com

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

இணையம் வழியாக மருத்துவம் வழங்கும் கோவை ஐ க்ளினிக்!

கிராமங்களுக்கு தொலை மருத்துவத்தை கொண்டு செல்லும் முன்னோடி டாக்டர். இந்து சிங்