உணவகங்கள் உள்ளிட்ட 7 வர்த்தக பிரிவுகளில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை பெற உதவும் ‘FIZZ'! 

0

சென்னையில் பிறந்து வளர்ந்த நண்பர்கள் ப்ரகுன் கெம்கா மற்றும் அதிதி ஜலன் தங்களின் பட்டப்படிப்பை லண்டனின் முடித்துவிட்டு, இருவரும் இணைந்து தொடங்கியுள்ள நிறுவனம், ‘FIZZ'. சிறு வயது முதல் நண்பர்களாக இருந்தாலும், வெவ்வேறு துறைகளில் பட்டம் பெற்ற பின் சென்னை திரும்பிய இருவரும், ஒரு காபி சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது முடிவெடுத்து தொடங்கியதே இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம். தங்களின் நிறுவனம் எந்தவித பிரச்சனைக்கு தீர்வு வழங்குகிறது? இருவருக்கும் இந்த திடீர் யோசனை எப்படி வந்தது? என்ற சுவாரசிய விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ப்ரகுன். 

நிறுவனர்களின் பின்னணி

சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த ப்ரகுன், சிறுவயது முதலே தன்னை சுற்றியுள்ள பிரச்சனைகள் பற்றி யோசிக்கும் பழக்கமுடையவர். அவர் அதைப்பற்றி கூறும்போது,

“எனக்கு ஒரு பிரச்சனை இருக்கு என்றால், அதே பிரச்சனையை என்னை சுற்றியுள்ள பலரும் சந்திக்கின்றனர் என்று தானே அர்த்தம்? என்று சிந்தித்துக்கொண்டே இருப்பேன்” என்கிறார்.  

இந்த சிந்தனை, அவரை பல கோணங்களில் பலவற்றை யோசிக்கத் தூண்டியதாக தெரிவித்தார். தனக்குள் இருக்கும் இந்த உந்துதலே தன்னை பின்னாளில் ஒரு தொழில்முனைவராக மாற்றியது என்றும் நம்புகிறார். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, லண்டன் கிங்க்ஸ் கல்லூரியில் பிசினஸ் மேனேஜ்மெண்ட் முடித்து சென்னை திரும்பினார் ப்ரகுன். கிட்டத்தட்ட அதே சமயத்தில் பி.ஏ. சித்தாந்தம், பொலிடிக்ஸ் மற்றும் பொருளாதாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் அவரது நண்பர் அதிதி. 

“எங்கள் இருவரது குடும்பங்களும் தொழில்முனைவிற்கு எங்களை எப்போதுமே ஊக்குவித்து வந்துள்ளனர். படிப்பை முடித்துவிட்டு என்ன ஆகப்போகிறீர்கள் என்ற கேள்வியை விட, எந்த மாதிரியான பிரச்சனைக்கு தீர்வு அளிக்கப்போகிறீர்கள்? என்ற ரீதியில் எங்களை எதிர்நோக்கி இருந்தனர் என்கிறார் ப்ரகுன். 

ப்ரகுன் கெம்கா, அதிதி ஜனல் மற்றும் அனந்த் உம்மிடி
ப்ரகுன் கெம்கா, அதிதி ஜனல் மற்றும் அனந்த் உம்மிடி

தொழில்முனைவை தேர்ந்தெடுத்தது எப்படி?

லண்டனில் கல்வியை முடித்து இருந்தாலும் சொந்த நாட்டிற்கு திரும்பி ஏதேனும் செய்யவே ஆசை கொண்டிருந்தனர் இருவரும். பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்க ஆவலாக இருந்த ப்ரகுன் ஒரு புறம், தன் கனவுகளை நினைவாக்கும் சொந்த நிறுவனத்தை தொடங்க நினைத்த அதிதி மறுபுறம் என்று இருவரும் நல்ல ஒரு கூட்டணியாக அமைந்தனர். 

”ஒரு புதிய ஐடியாவை வடிவமைத்து, உங்களின் மூளையில் இருந்து பிறந்த அந்த யோசனை பிறரது வாழ்வில் மதிப்பை கூட்டப்போகிறது என்று நினைக்கும் போது கிடைக்கும் உற்சாகமே தனி,” என்ற எண்ணம் கொண்டவர் அதிதி. 

பட்டம் முடித்து திரும்பிய ப்ரகுன், ஸ்டீல் தொழிற்சாலை வைத்திருக்கும் தந்தையின் நிறுவனத்தில் சிறிது காலம் பணிபுரிய தொடங்கினார். அதிதி தனது மேற்படிப்பிற்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது நண்பர்கள் ப்ரகுன் மற்றும் அதிதி சந்திக்க, பலவித ஐடியாக்களை பறிமாறிக்கொண்டனர். அப்போது தோன்றியதே FIZZ. இருவரும் தங்களின் சொந்த நிறுவனத்தை தொடங்க முடிவெடுத்ததால், மற்ற வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 

FIZZ பிறந்தது எப்படி?

யு.கே’வில் படித்து கொண்டிருந்த்போது, ப்ரகுன் ஒரு மாணவனாக பல சலுகைகள் கிடைப்பதை கவனித்தார். பொது போக்குவரத்து, ஹோட்டல்கள், சினிமா டிக்கெட்கள் என்று பல இடங்களில் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகளும், தள்ளுபடிகளும் அங்கே வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அதுபோன்று எந்த சலுகைகளும் இல்லை என்பதை உணர்ந்தார் ப்ரகுன். பொதுவாக கல்லூரி மாணவர்களுக்கு பெற்றோர்களிடம் இருந்து கைச்செலவுக்காக குறிப்பிட்ட தொகை மட்டுமே கிடைக்கும். சிலர் லோன் எடுத்து கல்லூரியில் படித்து வருவர், அவர்களுக்கு கைச்செலவு பணம் இன்றைய காலக்கட்டத்தில் நிறைவாக இருக்காது. இந்த சூழ்நிலையை ஆராய்ந்த ப்ரகுன், மாணவ சமுதாயத்தின் இந்த தேவைக்கு தீர்வு அளிக்க முடிவெடுத்து தொழில்முனைவு பாதையை தேர்ந்தெடுத்தார்.

”ஒரு சாதராண சலுகை ஆப் தயாரிக்க முடிவெடுத்தேன். பின் இளைஞர்களின் பணத்தேவையும், சேமிப்புக்கான அத்தியாவசியத்தையும் புரிந்து கொண்டு, நாங்கள் சில வர்த்தகர்களுடன் பார்ட்னர்களாக இணைந்தோம். புதிய ரெஸ்டாரண்டுகள், கபே, கடைகள் தங்களை பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ள போதிய வருமான இல்லாமல் இருந்தனர். அதனால் அவர்களுடன் இணைந்து FIZZ மூலம் மாணவர்களுக்கு சலுகை அளிப்பதன் மூலம் இரு தரப்பினருக்கும் லாபம் ஏற்படுத்தித் தர முடிவெடுத்தோம்.”

FIZZ சிறிய ப்ராண்டுகளுக்கு மார்கெடிங் பார்ட்னராக திகழ்கிறது. அவர்களை பற்றி எங்கள் செயலியில் வெளியிட்டு, ரேடியோ, பஸ்களின் பின்புறம் விளம்பரப்படுத்தி அவர்களை பிரபலப்படுத்தி தகுந்த அடையாளத்தை தருகிறோம் என்றார்.

FIZZ செய்வது என்ன?

தள்ளுபடிகள், டீல்கள் வழங்கும் புதுயுக லாயல்டி ஆப் FIZZ. இது 7 பிரிவுகளில் சலுகைகளை வழங்குகிறது. உணவு, குளிர்பானம், சில்லறை வர்த்தகம், கேளிக்கை, ஆரோக்கியம், அழகு மற்றும் கல்வி ஆகியவைகளில் இருக்கும் சலுகைகள் பற்றி பயணர்கள் அறிந்து கொள்ள உதவும் செயலி இது. 

இதே போன்ற சேவைகள் அளிக்கும் மற்ற சலுகைகள் ஆப்களில், பயணாளி தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பதிவு செய்து அதன் மூலம் சேவைகளை பெற்றால் மட்டுமே இந்த சலுகைகளை பெறமுடியும். ஆனால் FIZZ மூலம், ஒருவர் கார்ட் இல்லாமலும் பணம் செலுத்தி சலுகைகளை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

“ஒவ்வொரு முறை எங்களின் பார்ட்னர் நிறுவனங்களில் ஒருவர் ஏதுனும் வாங்கினால், அவர்களுக்கு லாயல்டி ஸ்டாம்ப்’கள் கிடைக்கும். அதைக்கொண்டு அவர்கள் தங்களின் பிடித்த இடத்தில் அதை மாற்றிக்கொண்டு இலவச சலுகைகள் பெறமுடியும்,” என்றார் ப்ரகுன்.

சவால்கள்

சலுகைகள் வழங்கும் பிரபல தளங்களுடன் போட்டியிட்டு தனித்து நிற்பது ஒரு பெரிய சவால் என்கிறார் ப்ரகுன். இருப்பினும் ஒரு குழுவாக இந்த சவால்களை தாண்டுவதாகவும் தெரிவித்தார். அடுத்து, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். இது ஸ்டார்ட்-அப்’ கள் சந்திக்கும் தினசரி சவால். இதை கடுமையான உழைப்பை கொண்டு முறியடிக்கமுடியும் என்பதையும் தங்கள் குழு புரிந்துகொண்டதாக கூறுகிறார். 

ப்ரகுன் மற்றும் அதிதி சேர்ந்து தொடங்கியுள்ள இந்த முயற்சியில், அனந்த் உம்மிடி தனது நேரம், வழிகாட்டுதல் மற்றும் முதலீடை அளித்துள்ளார் என்று கூறினர் நிறுவனர்கள். தொழில்முனைவில் ஈடுபட தொடங்கி விட்டால் நாளை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் எடுத்த காரியத்தை இன்றே முடித்திட கற்றுக்கொள்ளவேண்டும் என்று தாங்கள் பின்பற்றும் யுக்தியை கூறி விடை பெற்றனர் இந்த இளம் தொழில்முனைவர்கள். 

FIZZ பதிவிறக்கம் செய்ய