12-ம் வகுப்புத் தேர்வை ஒரே சமயத்தில் எழுதிய தாய், தந்தை மற்றும் மகன்! 

0

மேற்கு வங்கத்தில் நதியா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் மூவரும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வினை சேர்ந்து எழுதியுள்ளனர். பலராம் மண்டல் (வயது 42), கல்யாணி மண்டல் (வயது 32) மற்றும் பிப்லப் மண்டல் (வயது 17) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதி பலரை திரும்பி பார்க்கவைத்துள்ளனர். 

பிப்லப்பின் பெற்றோர்கள் படிக்க விரும்பினர், அதனால் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று, தினமும் பள்ளிக்கு சென்றனர். 

பட உதவி: Indian Express
பட உதவி: Indian Express
“என் பெற்றோர்கள் தினமும் யூனிபார்ம் அணிந்து என்னுடன் பள்ளிக்கு வருவார்கள். முதலில் என் நண்பர்கள் அதிர்ச்சியாக பார்த்தனர், பின்னர் அவர்களுடன் நண்பர்கள் ஆகிவிட்டனர்,” என்றார் பிப்லப். 

பொருளாதார வசதியின்மையில் படிப்பை பாதியில் விட்டிருந்த பலராம் மற்றும் கல்யாணி, மகனுடன் சேர்ந்து 12-ம் வகுப்பு தேர்வு எழுத முடிவெடுத்தனர். 9-ம் வகுப்பு வரை படித்திருந்த பலராம், எட்டாம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்த கல்யாணி இருவரும் தினக்கூலிகளாக இருந்தனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்திகள் படி, கல்யாணி 228 மார்குகளும், பிப்லப் 253 மதிப்பெண்களும் பெற்று பாஸ் செய்துள்ளனர். ஆனால் தந்தை பலராம் மட்டும் தேர்வில் தோல்வியுற்றார். ரபீந்திர முக்தோ வித்யாலயா பள்ளியில் திறந்த வெளி பள்ளியில் இவர்கள் படித்தனர். தினமும் பலராம் தன் விவசாய வேலைகளையும், கல்யாணி ஆடு மேய்ப்பதையும் முடித்துவிட்டு பள்ளிக்கு செல்வார்களாம்.  

ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும் கலைத் துறையில் 12-ம் வகுப்பில் பதிவு செய்து, ஒரே புத்தகங்களை பகிர்ந்து கொண்டு தேர்வுக்கு தயாராகி உள்ளனர். தேர்வு முடிவுகளுக்கு ஆர்வமாக காத்திருந்த அவர்கள், பலராம் மட்டும் பெயில் ஆனதில் சற்று வருத்தத்தில் உள்ளனர். 

“நான் அவரை மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க சொல்லி இருக்கிறேன். அப்படி அதிலும் பாஸ் செய்யாவிடில், மீண்டும் அவர் மட்டும் பரிட்சை எழுதுவார்,” என்றார் பிப்லப். 

மேற்கு வங்க போர்ட் 12-ம் வகுப்பு தேர்வுகளில் இந்த ஆண்டு சுமார் 84.2 % மாணவர்கள் பாஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரை: Think Change India