கர்ப்ப கால பெண்களுக்கு ஆடைகள் தயாரிக்கும் ஷ்ரத்தாவின் ‘Mamacouture'

0

அநேக பெண்கள், விடுமுறை எடுத்து, தாய்மையின் பேரானந்தத்தை கொண்டாடும் பொழுது, ஷ்ரத்தா சூட் , இரண்டு தொழில்முனைவுகளின் தொடக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தன் சிறு பெண் குழந்தைக்கு தாயாக, மற்றொன்று "மாமாகொட்டூர்" (MamaCouture) மூலம் கர்ப்பகால ஆடைகளை உருவாக்கும் தொழில் முனைவராக .

ஆனால், அவர் நிச்சயம் வேறு சமயத்திலோ, வேறு விதத்திலோ தொழில்முனைவை தொடங்க விரும்பியிருக்கவில்லை. அழகாய் உணர்ந்தாலும், தவறான அளவிலான ஆடைகளால் கர்ப்ப காலத்தில் தான் அழகாக தெரியாதது, கர்ப்பமாய் இருக்கும் மற்ற பெண்களுக்கு நேரக் கூடாது என நினைத்தார். “என்னுடைய எட்டாவது மாதத்தில், அலுவலகம் அணிந்து செல்ல கர்ப்ப கால ஆடைகள் தேடினேன், ஆனால், என்னுடைய விருப்பத்திற்கு ஏற்ற, அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனும் இன்றைய பெண்களின் வாழ்க்கை முறைக்கு தகுந்த ஆடைகள், கிடைக்கவே இல்லை”.

எனவே வழக்கறிஞராக இருந்த ஷ்ரத்தா, அந்நேரத்தின் அவசியத் தேவையை, தன் துறையை மாற்றுவதன் மூலம் அடைவதாய் முடிவெடுத்தார். “கர்ப்ப காலம் குறித்து இருக்கும் தற்போதைய மனநிலையில் மாற்றம் தேவை. கர்ப்பத்தை மறைப்பதோ, தங்களுடைய புதிய உருவத்தை நினைத்து வெட்கப் படவோ கூடாது. மோசமாக ஆடை அணியாமல், வழக்கம் போல நம்பிக்கையோடும், அழகோடும் உடுத்த வேண்டும்”, என்கிறார்.

கர்ப்ப காலத்தின் இடையில், தன் உடலைப் பற்றிய கவனமும் கவலையும் அதிகரிக்கும் காரணத்தினால், வேலையிலிருந்து நீங்கிய பல பெண்களை அறிந்திருக்கிறார் ஷ்ரத்தா. “கர்ப்ப காலத்தில், ஆடைகள் தேர்வு செய்துக் கொண்டிருந்த பொழுது, அவை பொருந்திப் போகாதவையாகவும், தரம் குறைந்தவையாகவும், சரியான யோசனைகள் இல்லாமல் தைக்கப்பட்டவையாகவும் இருப்பதையும் கவனித்தேன். மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டிய கர்ப்ப காலத்தில் அதிக நேரத்தை நான் வெளிநாடுகளிலிருந்து ஆடைகள் ஆர்டர் செய்வதிலேயே செலவிட்டேன். நான் எடுத்த முயற்சி, செலவழித்த பணம், நேரம் எதுவுமே அதன் மதிப்பை பெறவில்லை என்பது தான் உண்மை.”

புதிய தொடக்கங்கள்

இதன் காரணமாக ஒரு சந்தை ஆய்வு செய்யலாம் என நினைத்த ஷ்ராத்தாவிற்கு, வியப்பளிக்கும் முடிவுகள் கிடைத்தன.

இந்தியாவில் ஒரு நிமிடத்தில் நிகழும் 51 பிறப்புகளில், 20 % பெண்கள் ஒன்று அல்லது இரண்டு அடுக்கு நகரை சேர்ந்தவராக இருந்தாலும் கூட, அதன் சந்தை மதிப்பு 2500 கோடி அளவுக்கு பெரியது, அதில் பெரும்பான்மை கண்டு கொள்ளப்படாமல் இருந்தது. தன்னுடைய வியாபாரச் சின்னத்தை நிறுவ அதுவே சரியான தருணம் என முடிவு செய்தார் ஷ்ரத்தா, எட்டு மாத கர்ப்பமாய் இருந்தாலும் கூட, அது ஒரு தடையாக இருக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தார்.

“நிச்சயம் அது பெரிய, சிக்கலான முடிவு தான். இருந்தாலுமே எனக்குள் ஆழப் பதிந்த அந்த யோசனை , உலகிற்கு எடுத்துச் செல்ல தகுதியானதாகப் பட்டது.”

ஷ்ரத்தாவின் குறிக்கோளும், அவர் தேர்வு செய்திருக்கும் நேரமும் கேள்விப் பொருளாகும் போதெல்லாம், தான் இத்தனை உற்சாகமாய் ஒரு திட்டத்தில் செயல்படும் போது, அந்த மொத்த ஆற்றலையும் சாதகமான செயலாக மாற்றாமல் இருப்பது மிகப் பெரிய குற்றமாய் இருக்கும் என பதில் சொல்வாராம்.

“இல்லை... காத்திருக்க முடியாது என்று எல்லாரிடமும் சொல்வேன். சரியான தருணம் என்று ஒன்று அமையவே அமையாது. இதற்கு முன் பல தொழில்முனைவு முயற்சிகள் செய்திருக்கிறேன், சரியான மன அமைப்பும், சரியான அளவு உத்வேகமும் சேர்ந்து கிடைப்பது மிக அரிது; அப்படிக் கிடைத்த ஒன்றை இழக்க நான் விரும்பவில்லை. பலர் முயற்சிகளை கைவிடக் காரணம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள், உண்மை என்னவென்றால் ஒரு காரியத்தை ஏன் செய்யக் கூடாது என்பதற்கு பல காரணங்கள் இருக்கும், ஆனால், என்னக் காரணத்தினால் செய்ய வேண்டும் என்பதில் தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.”

இரட்டையர்கள்

ஒரு நாள் கூட விடுப்பு எடுத்துக் கொள்ளவில்லையாம் ஷ்ரத்தா. தாயாகப் போகும் மற்ற பெண்களிடம் ஆய்வு நடத்துவது, வடிவமைப்பாளர் தேடுவது, நிறுவனம் தொடங்குவதற்கு முன் ஒரு தொகுப்பு ஆடைகளை தயாரிப்பது என உற்சாகமாய் எல்லா இடத்திற்கும் சென்றதால், சராசரியாக, கர்ப்பமாய் இருக்கும் ஒரு தொழில்முனைவருக்கு இருக்கும் சவால்கள், பெரிதாக படவில்லை ஷ்ரத்தாவிற்கு.

ஆனால், உண்மையான சவாலே அவர் மகள் பிறந்த பிறகு தான் ஏற்பட்டிருக்கிறது.

“அவள் வந்த பிறகு, இரட்டைக் குழந்தைகள் இருப்பது போல இருந்தது. என் குழந்தையும், இந்த யோசனையும் ஒன்றாய் உருவானது தான். நேரத்தை சமாளிக்கும் யுக்தியை கண்டுக் கொள்ளத் தான் மிகக் கடினமாக இருந்தது. என்ன தான் செய்தாலுமே, இருவருக்கும் போதுமான நேரம் கொடுக்க முடியவில்லை.”

“ எல்லாவற்றையும் தனியாக செய்வதற்கு நிச்சயம் சூப்பர் பவர் தேவைப்படும். குடும்பத்தை போல வேறு யாருமே இந்நேரத்தில் உதவியிருக்கு முடியாது, நிச்சயமாக அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும். சூழலை உணர்ந்து எல்லோரும் முன் வந்து உதவினார்கள். வீட்டையும், குழந்தையையும் பார்த்துக் கொண்டு, அவர்களுடைய நேரத்தை எனக்கேற்றது போல மாற்றிக் கொண்டார்கள். அவர்களுடைய உதவியும் ஆதரவும் இல்லையெனில் என்றால் எனக்கு பித்துப் பிடித்திருக்கும்”.

பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, பெண்கள் தேவையான உதவியை கேட்பதில்லையென்றும், அதிகளவு பொறுப்பை எடுத்துக் கொள்கிறோம் என்றும் அவர் நம்புகிறார். “நாம் உதவியை எட்டிப் பிடிக்க வேண்டும். குழந்தை வைத்திருப்பது சுலபமானது இல்லை தான், அதனால், ஒரு மலர்ச்சியான தொழில் வாழ்க்கை இருக்கும் போது, உங்களோடு இருக்கும் அன்பானவர்களிடம் உதவி கேட்பதை நினைத்து குழம்பக் கூடாது.”

ஷ்ரத்தாவின் வணிகமும் மலர்கிறது. தொடங்கிய மூன்றே மாதத்தில், அமேசான், ஃப்ளிப்கார்ட், ஜபாங், லைம் ரோடு, ஃபர்ஸ்ட் க்ரை போன்ற பல முக்கியத் தளங்களின் 30 - 60 % "மாமாகொட்டூர்" நிரப்புகிறது. “இந்தப் பிரிவில் உற்சாகமும், ஆர்வமும் இருக்கிறது. ஆடைகளில், ஒரு முழுமையான பகுதியாக இதற்கு மக்கள் கவனம் செலுத்துகிறார்கள்”, என்கிறார் ஷ்ரத்தா.

விளைவுகள்

மிகக் குறைந்த நேரத்திலேயே, நிறுவனம் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது. புதுமுகமான ஷ்ரத்தா பாதுகாப்பாக தடம் பதிக்க தொழில்முனைவு சமூகமும் உதவியிருக்கிறது. 

“பெண்களையும் தொழில்முனைவு சமூகம் சிறப்பாக வரவேற்கிறது. உங்களுக்கு தேவையான கருவிகளை அளித்து, உங்கள் திறனையும் சக்தியையும் குறைவாக எண்ணாமல், உங்களை சமமாக நடத்துவார்கள்”.

ஷ்ரத்தாவின் இரட்டையர்கள் இருவருமே ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும் இருந்தாலுமே, சாதிக்க வேண்டும் என்றிருந்த தீவிரம், எப்போதும் சிக்கலாக மாறியதில்லையா என்று ஆச்சரியமாகத் தான் இருக்கிறது!

“குழந்தை போல நடை பழகுங்கள்,”என்று சிரிக்கிறார் ஷ்ரத்தா.

இணையதள முகவரி: Mamacouture

ஆக்கம் : Binjal Shah | தமிழில் : Sneha