சொந்த நகைகளை விற்று அரசுப் பள்ளியின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் ’மாணவர்களின் ஆசிரியை’

5

ஒரு மொழியை சரியாக பேசுவதே அரிதாக இருக்கும் இந்த காலத்தில், சரியான உச்சரிப்பு, தெளிவான பேச்சு என அசத்தும் இந்த கிராமத்து மாணவச் செல்வங்கள் பேசுவது, தங்கள் தாய் மொழியாம் தமிழில் அல்ல. வெள்ளைக் காரன் மொழி என அழைக்கப்படும் ஆங்கிலத்தில். வெறும் நகரத்து பள்ளிகளில் மட்டுமே நடைமுறையில் உள்ள இந்த கலாச்சாரமானது கிராமப்புறத்தில் காண்பது அதிசயம் ஆச்சர்யம். ஆனால் உண்மை.

ஆங்கிலத்தில் கலக்கும் அரசு தொடக்க பள்ளி

தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகாவில் உள்ளது கந்தாடு எனும் சிற்றூர். இதன் சுற்றுப்பகுதிகளுடன் சேர்த்து மொத்த மக்கள் தொகை 2000 பேர் மட்டும் தான். ஒரே வளாகத்தில் இயங்கும் அரசு ஒன்றிய தொடக்கப் பள்ளியும், சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மேல்நிலை பள்ளியும் உள்ளது. ஊரை பற்றி சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.

ஆனால், அந்த ஊரின் பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி பகுதிக்குள் செல்லும் போது மாணவர்களிடையே வீசும் ஆங்கில வாசனை நம்மை அள்ளி செல்கிறது. மாணவர்கள் வெகு சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்களின் அசத்தும் பிரிட்டிஷ் ஆங்கில உச்சரிப்பு நம்மை அதிரவைக்கின்றது. பார்த்தால் இது ஒரு சாதாரண ஆங்கில வழி அரசு தொடக்க பள்ளி தான். பிறகு எப்படி? சிட்டியை தாணிடிய கிராமப்பகுதி, அரசு பள்ளி, ஆங்கிலம் இது எப்படி, யார் கற்று கொடுத்தார்கள், எப்படி இந்த வசதி, இவர்களால் எப்படி முடிந்தது என மனதில் ஆயிரம் கேள்விகள்...

இதற்கெல்லாம் முதல் முக்கிய காரணமாக திகழ்வது அங்கு துணை ஆசிரியராக பணிபுரியும் அன்னபூர்ணா மோகன். அவர் பள்ளிக்குத் தேவையான பயிற்றுவிக்கும் உபகரணங்கள் மற்றும் பொருட்களை தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்து மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார் என்பது தான் இதற்கான பதிலாக நமக்கு கிடைத்தது.

சொந்த செலவு

அன்னபூர்ணா மோகன்
அன்னபூர்ணா மோகன்

சர்வதேச தரம் வாய்ந்த பள்ளிகளில் இருப்பது போல வகுப்பறையை மிக அழகான அமைக்கவும், மாணவர்களுக்கு மேஜை நாற்காலி என பல்வேறு பொருட்களை வாங்கவும் அன்னபூர்ணா டீச்சர், சுமார் 2 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். மேலும் தனது சொந்த நகைகளை விற்று, தொடுதிரை ஸ்மார்ட் போர்டு, மடிக்கணினி போன்றவற்றையும் மாணவர்களுக்காக வாங்கி அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தை பெருக்கியுள்ளார்.

எதற்காக இவர் தனது சொந்த செலவில் பள்ளியை மேம்படுத்தியுள்ளார் என்று அவரிடம் கேட்டபோது? அதற்கு அன்னபூர்ணா மோகன் மேற்கோள் காட்டியது,

"அர்ப்பணிப்பு ... பேரார்வம். இவை தான் என்னை கடன்பட்டேனும் பள்ளிக்காக செலவு செய்ய வைத்தது. இந்த பிள்ளைகளை பார்க்கும் போது அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்து செய்யத் தொடங்கினேன்," என்றார்.
தொடுதிரை ஸ்மார்ட் போர்டு
தொடுதிரை ஸ்மார்ட் போர்டு

தொடக்க பள்ளியில் பணி நியமனம்

இவரது தந்தை, டாக்டர் மோகன். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் பிரபல மருத்துவர். தன்னை நாடி வரும் ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் சிறந்த மருத்துவர் என்கின்ற முறையில் மிக பிரபலமானவர். தந்தை வழியே மருத்துவர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய அன்னபூர்ணா மோகன் 0.5 கட் ஆஃப் மதிப்பெண்ணில் வாய்ப்பை இழந்தார். தனது தந்தையின் விருப்பத்தின் படி, ஆசிரியர் கல்வியில் பட்டயம் முடித்து அரசு வேலைக்கு செல்ல வேண்டா வெறுப்பாகத்தான் அப்போது முடிவெடுத்தார்.

மிக அழகான வகுப்பறை
மிக அழகான வகுப்பறை

2004 ஆம் ஆண்டு கந்தாடு அரசு தொடக்கப் பள்ளியில் பணிசெய்ய நியமனம் கிடைத்தது.

"முதல் நாள் நான் பணிபுரியவேண்டிய பள்ளியில் நுழையும் போது, அப்பொழுது இருந்த சூழலை பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். அனால் இதை நல்ல முறையில் மாற்றிவிடலாம் என்கின்ற நம்பிக்கை மட்டும் இருந்தது."

மெல்ல மாற்றங்களை கொண்டு வரத் தொடங்கினார். அப்பொழுது தான் மாணவர்களின் வெளியுலக வளர்ச்சிக்கு தடையாய் இருப்பது ஆங்கில மொழி அறிவு இல்லாதது தான் என்பதை உணர்ந்தார். மாணவர்களிடையே ஆங்கில மொழி அறிவை மேம்படுத்த முயற்சி செய்ய ஆரம்பித்தார்.

"கிராம புறத்தில் படித்து விட்டு, சரியான ஆங்கில திறன் இல்லாமல் நகர் புறத்தில் உயர் கல்விக்காகவோ, வேலைவாய்ப்பிற்காகவோ செல்லும் போது அவர்கள் படும் இன்னல்கள் அளவிட முடியாது. ஆங்கில திறன் இல்லாததால் அவர்களுக்கு ஏற்படும் தாழ்வுமனப்பான்மை பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது."

உண்மை தான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அல்லது மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் மாணவர்கள் நகர்புறத்திற்கு சென்று பொறியியல், மருத்துவம் படிக்கும் போது கண்டிப்பாக திணறத்தான் செய்வார்கள்.

நீங்கள் எப்படி ஆங்கிலத் திறன் வளர்த்தீர்கள்?

“இந்தியாவில் நாம் பயன்படுத்துவது பிரிட்டிஷ் வழி ஆங்கில மொழியாகும். எந்த ஒரு மொழியில் நாம் பேசினாலும், அதன் வார்த்தைகளை நாம் சரியாக உச்சரிப்பது மிகவும் அவசியமாகும்.”
வெளிநாட்டு இதழ்கள், புத்தகங்கள்
வெளிநாட்டு இதழ்கள், புத்தகங்கள்

"பிரிட்டிஷ்க்காரர்கள் எப்படி ஆங்கிலம் பயிற்றுவித்தார்களோ, அதே பாணியில் இங்கும் ஒரு வார்த்தையை போஃனிடிக்ஸ் எனும் ஒலியியல் முறையில் உச்சரிப்பது எப்படி என்பதை கற்றுக்கொடுக்கிறோம்."

மொழியியலில் ஒலியியல் என்பது மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஓர் அறிவியல் துறையாகும். போஃனிடிக்ஸ் முறைப்படி மனிதர்கள் பேசும் போது எழுத்து மொழிகளை குறிக்கும் குறியீடுகளை கொண்டு மொழி எழுத்துக்களை சரியாக உச்சரிக்க கற்றுக்கொள்ளலாம். ஆனால் நாம் பேச்சொலிகளை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவைகளை குறிக்கும் குறியீடுகளை தவிர்க்கவேண்டும். இது தான் போஃனிடிக்ஸ் முறை படி மொழியை வாசிப்பது ஆகும் என்று விளக்குகிறார்.

இதற்காக நமது பள்ளி கல்வித் துறை போஃனிடிக்ஸ் முறைப்படி கற்றுக்கொள்ள வழிகாட்டுதல்களை பள்ளிகளுக்கு அளித்துள்ளது. ஆனால், புதிய சொற்களுக்கு ஏற்றதாக அமையவில்லை. இதை கருத்தில் கொண்டு புதிய சொற்களுடன் படக்காட்சிகளை உருவாக்கினார், அன்னபூர்ணா. ஒவ்வொரு படத்திலும் வார்த்தை, படம், அதன் ஒலி உச்சரிப்பு, அதன் நிகரான தமிழ் வார்த்தை என அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைத்தார்.

சுமார் 10,000 பட காட்சிகளை உருவாக்குவதில் எட்டு பேர் துணை கொண்டு உருவாக்கினார். ஆனால் அனைத்து பட காட்சிகளையும் இவரே ஒவ்வொன்றாக சரிபார்த்து ஒருங்கிணைத்து முடிப்பதற்கு சுமார் ஒன்றரை வருடம் பிடித்தது. இதுவும் அன்னபூர்ணா மோகன் அவர்களின் சொந்த செலவில் தான்.

இவர் தயாரித்த பட காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்க்கும் போதும் வாசிக்கும் போதும் மாணவர்கள் மனதில் வார்த்தைகளும் அதன் உச்சரிப்பும் நன்றாக பதிந்து விடுவதாக கூறுகிறார் அவர். மாணவர்களிடையே சரளமாக ஆங்கிலத்திலேயே உரையாடுவதை இயல்பாக கொண்டு அவர்களின் ஆங்கில அச்சத்தை முழுவதுமாக மெல்ல நீக்கினார் அன்னபூர்ணா.

தனது பணிகள் குறித்து தொடர்ந்து முகநூலிலும் பதிவு செய்தார்.

பாராட்டுக்கள்

"சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மாணவர்களை பாராட்டி பலர் பாட்மிண்டன் ராக்கெட் என பல பரிசு பொருட்களை அனுப்பி வைத்த நிகழ்வுகளும் நடந்துள்ளன."
"மேலும் நெல்லையை சேர்ந்த ஒருவர், மாணவர்கள் அனைவருக்கும் தலா 10 ரூபாய் பண அஞ்சல் அனுப்பி பாராட்டியுள்ளார்."
மாணவர்களிடையே ஆங்கில அச்சத்தை முழுவதுமாக நீக்கினார்
மாணவர்களிடையே ஆங்கில அச்சத்தை முழுவதுமாக நீக்கினார்

தனது சொந்த செலவில் தினசரி செய்தித்தாள்கள், பத்திரிகைகள், வெளிநாட்டு இதழ்கள், புத்தகங்கள் என அனைத்தையும் பள்ளிக்காக வாங்கி வருகிறார்.

மேற்படிப்பு

தான் வேலை பார்க்கும் பள்ளிக்காகவும் கற்பிக்கும் மாணவர்களுக்காகவும் தனது முழு நேரத்தை செலவு செய்துவரும் அன்னபூர்ணா, தனது மேற்படிப்பையும் கவனத்தில் கொண்டு பி.சி.ஏ பட்டம், கணிதத்திலும் ஆங்கிலத்திலும் முதுகலை பட்டங்கள், பி.எட் மற்றும் எம்.பி.ஏ என பட்டங்கள் பெற்றிருக்கிறார்.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அன்னபூர்ணா மோகன் செய்த சாதனைகள் அவரை ’மாணவர்களின் ஆசிரியை’ என்று போற்றும் அளவிற்கு உயர்த்தியுள்ளது என்று கூறுவதில் சிறிதளவும் ஐயமில்லை.

(படங்கள் அனைத்தும் அன்னபூர்ணா மோகன் அவர்களின் முகநூல் பதிவுகளிருந்து பெறப்பட்டவை )