கடும் மழையிலும் இடைவிடாது பணிபுரிந்த மகப்பேறு மருத்துவர் பத்மப்ரியா!

0

உயிர் காக்கும் மருத்துவர்களை கடவுளுக்கு சமமாக பார்க்கிறோம். குழந்தை பிறப்பு என்பதே மறு ஜென்மம் எடுப்பது போன்று உணரப்படும் நிலையில் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இடர்பாடுகளை தாண்டி தங்கள் பணியை செவ்வனே செய்யும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் பாராட்டி தான் ஆக வேண்டும்.

சென்னையை கதி கலங்க வைத்த வெள்ளத்திலும் பிரசவிக்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு சமயோசிதமாக உரிய நேரத்தில் மருத்துவ சேவையை வழங்கிய Dr பத்மப்ரியாவிடம் தமிழ் யுவர் ஸ்டோரி உரையாடியது.

"எனது பதினான்கு வருட மருத்துவ சேவையில் பல அவசர நேர சவால்களை சந்தித்திருந்தாலும் இது போன்ற ஒரு நிலையில் செயல்படுவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை" என கூறும் Dr பத்மப்ரியா கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இடைவிடாது பணியாற்றி இருபத்தி இரண்டு பிரசவத்தை பார்த்துள்ளார்.

காரப்பாக்கம் அப்போல்லோ கிராடில் மருத்துவமனையில் மழை நீர் வர ஆரம்பித்ததும் தக்க தருணத்தில் முடிவெடுத்தார் அதன் துணை தலைவர் Dr . ஜார்ஜ். "நான் பார்த்த சிறந்த பாதுகாப்பு வெளியேற்றும் பணி இது தான். பதினைந்தே நிமிடத்தில் எங்கள் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளையும் பிரசவிக்க இருக்கும் பெண்களையும் ஓஎம்ஆர் (OMR) சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனைக்கு மாற்றினார்" என்கிறார் பத்மப்ரியா.

ECR சாலையில் உள்ள தன்னுடைய வீட்டாருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறும் பத்மப்ரியா கடந்த திங்கள் இரவிலிருந்து மருத்துவமனையிலையே தங்கி இருந்து பிரசவம் பார்த்துள்ளார்.

தொடர்புகள் செயலற்ற நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட சூழ்நிலையில் செவிலியர்கள், மருத்துவ நிர்வாகிகள் என அனைவரும் இடைவிடாது இயங்கினோம். வங்கி தானியங்கி செயல்படாத நிலையில் நிர்வாகம் உடனடி கட்டணமின்றி அனைவருக்கும் மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொண்டது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பெண்களை தவிர அவசர பிரசவ நிலையில் பல பெண்கள் எங்கள் மருத்துவமனைக்கு வந்தனர். 

"தீயணைப்பு வாகனம், தண்ணீர் லாரி, சலவை வேன் என்று கிடைக்கும் வாகனங்களில் நிறைமாத கர்பிணி பெண்கள் வந்ததை என்றுமே என்னால் மறக்க இயலாது" என்கிறார் பத்மப்ரியா.

சூழ்நிலை தந்த அழுத்தம் காரணமாக மிகுந்த கவலை நிலையுடன் வந்த கர்பிணிகளை, எங்கள் குழு நம்பிக்கையூட்டி அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர். 

"75-80 சதவிகிதம் சுகப் பிரசவம், மற்றவர்களுக்கு சாதாரண நிலையில் வரக் கூடிய சிக்கல்களால் C-sec செய்யும் நிலைமை ஏற்பட்டது" என்று தனது மெய்சிலிர்க்கும் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

இத்தனை இடர்பாடுகளுக்கு இடையே பிறந்த அந்த பிஞ்சு முகங்களை பார்த்த மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களின் சோர்வை மறந்து பணியை தொடர்ந்ததாக கூறுகிறார்.

சவாலான நேரத்தில் சென்னையில் ஓங்கிய மனித நேயமிக்க செயல்கள் மற்றும் தன்னலமற்ற உதவிகள் பலரது மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.