டைம்ஸ் வெளியிட்ட 'அடுத்த தலைமுறை தலைவர்கள்' பட்டியிலில் சென்னை தொழில்முனைவர்!

0

சென்னையைச் சேர்ந்த 30 வயது தொழில்முனைவர் உமேஷ் சச்தேவ், அண்மையில் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட உலகில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, 'அடுத்த தலைமுறை தலைவர்கள்" பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகை திரும்பிப் பார்க்க வைக்க இவர் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

உலக மக்கள், மொழியின் தடையின்றி கைப்பேசியுடன் தங்கள் தாய்மொழியிலேயே தொடர்பு கொண்டு ஆன்லைன் சேவைகளை பெறக்கூடிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியிருப்பதே இவர் செய்துள்ள சாதனை. 

உமேஷ் சச்தேவ், தன் கல்லூரி நண்பர் ரவி சரோகியுடன் இணைந்து யுனிபோர் மென்பொருள் நிறுவனம் ஒன்றை சென்னையில் நிறுவினார். இந்த நிறுவனம் தயாரித்துள்ள மென்பொருளின் மூலம் மக்கள் தங்கள் போனுடன் தங்களுக்குத் தெரிந்த மொழியில் உரையாடி தொடர்பு கொண்டு வங்கி சேவைகள் உட்பட பல ஆன்லைன் சேவைகளை பெறமுடியும். மெய்நிகர் உதவியுடன் 25 உலக மொழிகள்ள, 150 பேச்சுவழக்கு மொழிகளைப் புரிந்து கொள்ளமுடிந்த இந்த மென்பொருளை 5 மில்லியன் இந்தியவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

டைம்ஸ் நாளிதழ் பேட்டியில் கூறிய உமேஷ் சச்தேவ்,

“கைப்பேசி என்பது நிதி தொடர்பான மற்றும் பலவகை சேவைகளை பெறவும், ஒரு விவசாயி தனக்குத் தேவையான வானிலை தகவல்களை பெறுவதற்கும் உதவியாக இருக்க முடியும். ஆனால் அவர் தனது மொழியில் அந்த தொழில்நுட்பத்துடன் தொடர்பு கொள்ள ஒரு வழி தேவைப்படுகிறது, என்றார்.

தொழில்நுட்பம் மற்றும் மொழிக்கும் இடையில் உள்ள பிரச்சனையை தீர்க்கத் தான் சச்தேவின் மென்பொருள் வழி செய்கிறது. பல லட்ச மக்களிடையே தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள பிரிவினையை மொழியின் மூலம் இணைக்கிறது இவரது கண்டுபிடிப்பு. கைப்பேசி தொழில்நுட்பம் இந்திய விவசாயிகளின் மொழியை பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டை உடைதெறிந்துள்ளது இந்த இளைஞரின் புதிய தீர்வு.

யுனிபோர் தொடக்க நிறுவனத்தின் கதை

10 வருடங்களுக்கு முன்பு ரவி சரோகி மற்றும் உமேஷ் சச்தேவ் சென்னையில் தொடங்கிய முதல் ஸ்டார்ட் அப் ‘சிங்குலாரிஸ் டெக்னாலஜீஸ்.’ 2008 இல் இதுவே 'யுனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ்' என்று தொலைதொடர்பு துறையில் உள்ள பெரிய இடைவெளியை போக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிறுவனமாக உருமாறியது. இது தொடர்பாக பல ஆராய்ச்சிகளையும் பங்குதாரர்களையும் சந்தித்ததில், ஐஐட் மெட்ராஸ் அடைகாக்கும் மையத்தில் தங்கள் நிறுவனத்தை அமைத்துக் கொண்டனர். தொலைதொடர்பில்; ஊரக வளர்ச்சிக்கு உதவும் தொழில்நுட்பத்தை கொண்டுவர ஐஐடியின் உதவியோடு தீவிரமாக செயல்பட்டுவந்தனர் இவர்கள். அப்போதே, ஊரக மக்களுக்கு தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் மொழி ஒரு பிரச்சனையாக இருப்பதை உணர்ந்தனர். அதை முக்கிய இலக்காகக் கொண்டு பிரச்சனையை தீர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க முடிவு செய்தனர் உமேஷ் மற்றும் ரவி.

இணையத்தை உபயோகப்படுத்தும் அதே வகையில் மக்கள் கைப்பேசியையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தகவல்கள், சேவைகள் என எல்லா தேவைகளுக்கும் இன்று கைப்பேசி உதவிகரமாக உள்ளது. எனவே அதை அவரவர் மொழியில் சுலபமாக அடைய, சமூக-பொருளாதார எல்லைகளைத் தாண்டி மக்கள் அதை பயன்படுத்த ‘குரல்’ (voice) ஒரு சிறந்த வழி என்று முடிவெடுத்தனர்.

ஆராய்ச்சியின் மூலம் இதை தெரிந்து கொண்ட உமேஷ் மற்றும் ரவி, ‘தாய்மொழியை அடையாளம் கண்டு இயங்கக்கூடிய 'வாய்ஸ் பயோமெட்ர்க்' முறையை உருவாக்கினர். இந்த மென்பொருள், ஊரக மக்கள் கைப்பேசி மூலம் சேவைகளை துரிதமாக பெற உதவிகரமாக இருந்து வருகிறது. 

தங்களது தொழில்நுட்பத்தை பற்றி விளக்கிய உமேஷ்,

“யுனிபோர் முக்கியமாக வங்கி மற்றும் விவசாயத்துறையில் கவனம் செலுத்துகிறது. எனினும் கல்வி, மருத்துவம், சில்லறை விற்பனை ஆகிய துறைகளிலும் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இவை எல்லாவற்றிலும் மொழியின் அவசியம் உள்ளது,” என்றார்.

2012 இல் யுனிபோர் இந்தியன் ஏன்ஜல் நெட்வர்க் இடமிருந்து முதலீடு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்