தமிழில் கலக்கும் ராக் பேன்ட் இசைக் குழுக்கள்!

0

இசை இயற்கையின் வடிவம். இயற்கையின் அதிர்வலைகளும் இசையின் அலைகளும் ஒன்று போலவே அமைந்து உள்ளதில் இருந்தே இதனை நாம் அறியலாம். இயற்கையாக வளர்ந்துள்ள மூங்கிலில் காற்று மோதும் போது இசை பிறக்கிறது. இயற்கையின் பிரதிபலிப்பான இசையில் ஏற்படும் லயம், தாளம், காலப்பிரமாணம், ஆழம் யாவும் இயற்கையில் இருந்தே துவங்குகிறது.

கடலின் அலை ஓசை, காற்றின் ஓசை, காற்றில் இலைகள் ஆடும் ஓசை, மழைத்துளியின்  ஓசை, மரத்தில் துளை போடும் மரங்கொத்தியின் அலகின் ஓசை யாவுமே இசையாகத் தான்  துவங்குகின்றன. இந்த இசைக்கு மனிதன் தன்னுடைய புத்திக்கூர்மையால் ஒரு கலையாக  உருவம் கொடுத்திருக்கிறான்

மனிதர்களிடம் இருந்து இசையை பிரிக்கவே முடியாது, அனைத்து உணர்ச்சிகளிலும் இசையை மனிதன் பயன்படுத்தி வருகிறான், தனது பிறப்பில் இருந்து இறப்பு வரை இசையை தன்னோடு சுமந்தே செல்கிறான் காரணம் இசை மேல் அவன் வைத்து உள்ள அளவற்ற காதல். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப இசையும் மாறிக்கொண்டு வருகிறது.

பாரம்பரிய இசை, நாட்டுப்புற இசை, இந்துஸ்சானி, பாப், ஜாஸ், ராக் என உருவான இசை வகைகள் அதிகம். மேடை கச்சேரியிலிருந்து செல்போன் ஆப் வரை இசை கண்டு உள்ள வளர்ச்சியை நினைத்து பார்த்தால் உடம்பே சிலிர்கிறது. 

இந்த நூற்றாண்டில் இசையை வெவ்வேறு நபர்கள் பல விதத்தில் நமக்கு அளித்து  வருகின்றனர். அவை திரைப்படம் வாயிலாகவும், கச்சேரி வாயிலாகவும் நம்மிடம் வந்து  சேர்கிறது. இசைக் கலைஞர்கள் குழுவாக இணைந்து மக்களுக்கு அவர்களின்  வாழ்வியலையோ, உணர்வுகளையோ, வரலாற்றையோ எந்தவொரு பாகுபாடு இன்றி மக்களிடம் நேரடியாக கொண்டு போய் சேர்க்கின்றனர். இவர்கள் எந்தவொரு அமைப்பையும் சாரா இசைக் குழுவாக செயல்படுவார்கள். 

இந்தியாவில் இதுபோன்ற இசைக் குழுக்கள் நிறைய உள்ளனது. தமிழில் இசைக் குழுக்கள் என்று எடுத்துக்கொண்டால் குறைந்த பட்ச பேண்டுகள் (band) தான் உள்ளது, அதுவும் கடந்த சில ஆண்டுகளாக தான் அவைகளின் தோற்றம் அதிகரித்து வருகிறது.

தமிழ் இசைக்குழுக்கள் ஒரு பார்வை

’லா பொங்கல் (la pongal)’ ’யோதாக (yodhaka)’ போன்ற பேன்டுகளை தர்புகா சிவா துவங்கினார். இவை அனைத்துமே நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, போன்ற இந்திய மரபை சார்ந்த இசைகளை உருவாக்கி வந்தது. இந்த இசைக் குழுவில் சந்தோஷ் நாரயணன், பிரதிப் குமார்,  கேபா போன்ற இசைக் கலைஞர்களும் சிவாவுடன் இணைந்து இசை அமைத்து வந்தனர்.

மேலும், கிராஸ்ஹாப்பர் கிரீன் (grasshopper green), சீன் ரோல்டன் குழு (sean roldan and friends),  ஜிஹானு (jhanu), ஊர்க (oorka), நம்ம ஊர் பாய் பேன்டு (namma oor boy band) போன்ற இசைக் குழுக்கள் வரிசையாக அதிகரித்து வந்தது.

தற்போதைய காலகட்டத்தில் இசை ஆர்வலர்களிடையேயும், இளைஞர்களிடையேயும் அதிக வரவேற்பு பெற்று இருக்கும் இசைக் குழுக்கள் குரங்கன் (kurangan), ஒத்தச்செவுரு (othasevuru), சியென்னார்(seinnor) ஆகியவை.

இவர்களின் இசைச் சத்தம் புதுமையாகவும், பாடல் வரிகள் புரட்சிகரமாகவும் இருப்பதால் இளைஞர்களின் விருப்பத்திற்குரிய பாடல் பிளே லிஸ்ட்களில் (favourite playlist) இடம்பெற்று இருக்கிறது. 

குரங்கன்

கேபர் வாசுகி, தேன்மா இவர்கள் இணைந்து குரங்கன் இசைக் குழுவை நிறுவினர். குரங்கனின் தோற்றத்தின் ஒரு பகுதியானது, ஒரு ஐ-பாடில் இருந்து துவங்கியது. கேபர் கல்லூரி விடுதியில் ஒரு ஐபாடை ஐந்து பேர் பகிர்ந்து கொண்டனார். அவர் கல்லூரியில் சேரும் வரை, மைக்கேல் ஜாக்சனின் ஆல்பம் மட்டும் தான் கேட்டுக் கொண்டு இருந்தார். கல்லூரியில் தனது நண்பரின் ஐபாட் மூலம் பிறர் ஆல்ப பாடல்களை கேட்கத் துவங்கினார்.

கேபர் வாசுகி, தேன்மா (நடுவில்) குரங்கன் குழு உடன்
கேபர் வாசுகி, தேன்மா (நடுவில்) குரங்கன் குழு உடன்

கேபரின் ’அழகு’ புரட்சி இசை ஆல்பத்திற்கு நிதி திரட்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் தான் தேன்மா கேபரின் முன்தய பாடல்களைக் கேட்டு, அவரின் பாடல் வரிகள் மேல் கொண்ட மோகத்தால் கேபருடன் இணைந்து பணிபுரிய ஆரம்பித்தார்.

இருவரும் இணைந்து குழு அமைத்து தங்களது பயணத்தை துவங்கினார்கள். அவர்களின் பாடல்கள் உணர்ச்சிகள், தமிழ் மொழி, கோடை வெயில், மழை வெள்ளம், சினிமா, அரசியல், போன்ற விஷயங்களை பற்றி அழகிய தமிழில் மெல்லிய இசையில் இருக்கும்.

ஒத்தச்செவுரு

பிரவேகா ரவிச்சந்திரன், தருண் சேகர் ஒசூரில் கட்டிடக்கலை படிப்பை படித்து கொண்டு இருந்தனர். ஒசூரின் அழகை ரசித்து அந்த இயற்கையை போற்றி பாடல்கள் எழுதி மெட்டு அமைத்து பாடி வந்தனர். அப்படி இயல்பாக உருவானது ஒத்தச்செவுரு. இன்று, இவர்களின் தனித்துவமான மெட்டுகளும் பாடல் வரிகளும் இளம் தலைமுறையினர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

பிரவேகா ரவிச்சந்திரன் மற்றும் தருண் சேகர் (ஒத்தசெவுரு)
பிரவேகா ரவிச்சந்திரன் மற்றும் தருண் சேகர் (ஒத்தசெவுரு)

ஒத்தச்செவுரு என்ற பெயருக்கு பின்னணியில் உள்ள வரலாறு,

”வைகை நதியின் அருகே உள்ள சுவரைக் குறிக்கிறது. நானும் தருணும் அந்த செவுத்தில் அமர்ந்து, மைதானத்தில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகளை கண்டு எங்களுடைய விடுமுறை நாட்களை கழிப்போம், மேலும் நாங்கள் எழுதிய பாடல்களின் பிறப்பிடம் அந்த ஒத்தச்செவுரு தான். அதனால் தான் அந்த பெயர்,” என்றார் பிரவேகா ரவிச்சந்திரன்.

சியென்னார்

தமக்கும் இசைக்கும் உண்டான உறவை பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டார் சியென்னார்.  “சிறுவயதில் இருந்தே ஹிப்-ஹாப் இசைப் பாடல்களின் கவர்ச்சியான அழகு என்னை ஈர்த்தது. யோகி பி மற்றும் நாச்சத்ரா அவர்களின் ’வல்லவன்’ ஆல்பம் எனக்கு மிகப் பெரிய உத்வேகத்தை கொடுத்தது. இன்று கேட்டால் கூட, எனது 13 வயதில் கேட்ட அதே அனுபவத்தை தருகிறது. அதுபோன்ற உணர்வை ஏன் நாம் எற்படுத்தக் கூடாது என்று எண்ணினேன். மேலும் குயின் மற்றும் தி டோர்ஸ் போன்ற இசைக் குழுவின் பாடல்கள் என்னுள் ஏற்படுத்திய  இசை தாக்கத்தால், முழுநேரம் இசையோடு பயனிக்கத் தொடங்கினேன். 

சியென்னார்
சியென்னார்
“பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகளையும் நான் எழுதிய பாடல்களையும் சேர்த்து இசை அமைத்து பாடி இணையத்தில் பதிவேற்றினேன். அந்த பாடல்கள் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது தனிச்சியாக பாடல் பாடிக் கொண்டு வருகிறேன். மேலும் குழுவை அமைத்து திறமை வாய்ந்த இசை கலைஞர்களுடன் பயணிக்க வேண்டும் என்பதே எனது அசை,” என்றார்.

இவர்களை போன்று இசையோடு பயணித்துக் கொண்டு இருக்கும் இசைக் கலைஞர்கள், தங்களின் திறமையை, இசையின் புதிய வடிவில் அளித்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர். தமிழ் ராக் பேண்டுகளுக்கு இன்றைய இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பது வரவேற்கத்தகுந்தது. 

Related Stories

Stories by Deepak kumar