வாடிக்கையாளர் திருப்தி அடைந்தால் முதலீடு குவியும்: நிகேஷ் அரோரா

0

ஒரு சில மாதங்களுக்கு முன்னால், இந்தியர் ஒருவர் ஒரு ஜப்பானிய முதலீட்டு நிறுவனத்தில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டியது. அந்த இந்தியர் பெயர் நிகேஷ் அரோரா. அந்த நிறுவனத்தின் பெயர் சாப்ஃட்பேங்க். நிகேஷ் அந்த நிறுவனத்தின் சிஓஓ. 'ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டேண்ட் அப்' இந்தியா நிகழ்ச்சியின் கலந்துரையாடலில் பங்கேற்ற நிகேஷ், புதிய நிறுவனங்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்துப் பேசினார். அவரது பேச்சில் 10 முக்கியமான அம்சங்கள் அடங்கியிருந்தன. அவை:

இந்தியாவில் அவரது பிடித்தமான இலக்கு ஏன்?

“கடந்த 18 மாதங்களுக்கு முன் மசாயோசியில் நான் சேர்ந்த பொழுது, நமது அடுத்த மிகப்பெரிய சந்தை இலக்கு எது என்று விவாதித்தோம். அந்த நேரத்தில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. அது புதிய நிறுவனங்களுக்கு புதிய சக்தியைக் கொடுத்தது. இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் அப்டேட் வெர்ஷன்களும் வளர்ந்திருந்தன. அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா ஆற்றல் வளம் மிக்க நாடாக வளர இருக்கிறது.”

உபேர் நிறுவன சிஇஓ ட்ராவிஸ் கலானிக் மூன்று ‘B’க்கள் குறித்து சொன்ன விஷயத்தை நிகேஷ்சும் வலியுறுத்தினார். மூன்று ‘B’க்கள் என்பது வடக்கு கலிபோர்னியாவில் உள்ள விரிகுடாப் பகுதி; பே ஏரியா, பெய்ஜிங், பெங்களூர் ஆகிய மூன்று பகுதிகளைக் குறிக்கும். இவை மூன்றும் முதலீட்டுக்கான உலகின் மிக முக்கிய பிராந்தியங்கள்.

கற்றுக் கொள்ளுதல்

ஒரு நிறுவனம், புதிய நிறுவனமோ பெரிய நிறுவனமோ எதுவாக இருந்தாலும் அது நமக்குக் கற்பிப்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாடத்தைத்தான். மகத்தான விஷயங்களைச் சாதிப்பதில் தீராத் தாகம் கொண்டவர்கள் மற்றும் மிகப்பெரும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதில் விருப்பம் கொண்ட நிறுவனங்களால் வெறுமனே பணத்திற்காகத் தொழில் செய்பவர்களைக் காட்டிலும் அதிகம் சாதிக்க முடியும்.

உங்கள் நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி?

“புதிய நிறுவனங்கள், நிதி, நிறுவனக் குழு மற்றும் இன்னபிற விஷயங்கள் குறித்து அன்று முழுவதும் நிறைய விவாதங்கள் நடந்தன. என்னைப் பொருத்தவரையில், வெறுமனே நிதி அதிகரிப்பதைப் பற்றிச் சிந்திக்காமல், வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு அவர்களைத் திருப்திப்படுத்துவதில் கவனம் குவிக்க வேண்டும் என நினைக்கிறேன்” வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தினால் முதலீடு தானாகவே வரும் என்கிறார் நிகேஷ் அரோரா.

கல்வி அவரின் மனம் கவர்ந்த விஷயம்

“கல்விதான் முதன்மைத் தேவை. தொழில்நுட்பத்துடன் கல்வியை புதுப்பிக்க வேண்டும். எனினும் அத்தகைய தொழில் நுட்பத்திற்கு பெரும்பாலும் அரசின் பங்கு தேவைப்படுகிறது. அது கொஞ்சம் கடினமானதுதான்”.

முதல் கட்ட வெற்றி சாத்தியமாகியிருக்கிறது

“உண்மையில் குறிப்பிட்ட சில வெற்றிகளைப் பெற்றிருப்பதாக நான் நம்புகிறேன். அரசின் பல்வேறு துறைசார் நபர்களையும் புதிய தொழில்சார் பிரதிநிதிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். அவர்கள் ஒன்றாக இணைந்து பிரச்சனைகளை அணுகுகின்றனர். இந்தப் பயணம் இலக்கைச் சென்றடைய நீண்ட காலம் பிடிக்கும். எனினும் முதல் கட்ட வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறோம்” என்கிறார் நிகேஷ்.

சூரிய ஒளி மின்சக்தித் துறையில் சாஃப்ட் பேங்க் ஒரு பெரிய முதலீட்டாளர்

“தற்போதுள்ள மின் திட்டங்களில் இருந்து சுற்றுச்சுழலுக்குக் கேடு விளைவிக்காத ஒரு சுத்தமான மின்திட்டத்திற்குத் தாவிச் செல்லும் பெரும் வாய்ப்பு இந்தியாவில் இருக்கிறது” அரசும் இந்த விஷயத்தில் நிறைய கவனம் செலுத்துகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார் நிகேஷ்

மசாயோசி மகன் போல, புத்திசாலி எந்திரங்களை உருவாக்குவதில் ஆர்வம்

“செயற்கை நுண்ணறிவில் (மனிதனுக்கு இணையாகச் சிந்திக்கும் எந்திரங்களை உருவாக்குவது) ஆர்வம் காட்டுகிறோம். ஆனால் எப்படி அதில் முதலீடு செய்வது என்பதுதான் கேள்வி”.

ஆரம்ப நிலையில் உள்ள தொழில் வளர்ச்சியை எச்சரிக்கையாகக் கையாள வேண்டும்

“இந்தியாவில் புதிய தொழில் வளர்ச்சி இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. எனவே இதை எச்சரிக்கையாகக் கையாளும் பொறுப்பு நம் அனைவருக்குமே இருக்கிறது. 2015ல் விலைமதிப்பற்ற விஷயங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு சில வீழ்ச்சிகளும் உண்டு. இந்த வருடத்தில் ஒரு சில மாற்றங்களைப் பார்க்கலாம்.”

பெரிய நிறுவனங்களின் முதலீடு பற்றி?

மெகா நிறுவனங்களின் நிதிமுதலீடு தொடரும்.

வாடிக்கையாளருக்கு சலுகை என்பது எவ்வளவு நாட்களுக்குத் தொடரும்?

“வாடிக்கையாளர்களின் அனுபவத்தையே புதிதாக உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம். அனைத்து நிறுவனங்களுக்கும் நாங்கள் சொல்வது இதுதான். அப்படி ஒரு அனுபவத்தை உருவாக்குங்கள். சந்தையில் யார் ஹீரோ என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்யட்டும்”

ஆக்கம்: தவுசிஃப் ஆலம் | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா