இணைய மிரட்டல் பிரச்சனைக்கு தீர்வு: 15 வயது சிறுமி உருவாக்கிய ‘ரீதிங்க்’

1

2013ம் ஆண்டில் ஒருநாள். த்ரிஷா பிரபு பள்ளியில் இருந்து திரும்பி வந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் கண்ணில் பட்ட ஒரு செய்தி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 11 வயது சிறுமி ஒருத்தி, இணைய மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட செய்தி அது. அந்த செய்தியைப் படித்ததும் த்ரிஷா மனம் உடைந்து போனார். “என்னைவிட வயதில் சிறிய பெண் இப்படி அநியாயமாக தற்கொலை செய்து கொண்டாளே என நினைக்க நினைக்க எனக்கு ஆத்திரமாக வந்தது. இது போன்ற ஒரு சம்பவம் இனி நடக்கவேக் கூடாது. அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்” என்கிறார் த்ரிஷா. இதற்கு முன்பு அவருக்கு நடந்த ஒரு சம்பவமும் இத்தகைய சிந்தனைக்கு அவர் வருவதற்கு காரணம்.

“இந்தியாவில் இருந்த எனது பிரியத்திற்குரிய அத்தை ஒரு வாகன விபத்தில் பலியானார். அவர் வாகனம் ஓட்டிய போது அவரது கவனம் சிதறியதுதான் அதற்குக் காரணம். இந்தச் சம்பவம் நடக்கும் போது எனக்கு பத்து வயது” என்று ஒரு சம்பத்தை நினைவு கூர்கிறார் த்ரிஷா. அவர் இலினோய்சில் வசிக்கிறார். நெருக்கடியும் துன்பமும் நேரும் போது அதைச் சமாளிப்பதற்கு குழந்தைகள் ஆக்கப் பூர்வமான சில வழிகளைக் கண்டறிகின்றனர். த்ரிஷாவும் அப்படித்தான். ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

“மனித மூளையின் செயல்பாடுகள் குறித்து அறிய வேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்போதுமே உண்டு. வாகன ஓட்டிகளின் கவனம் எப்படி சிதறுகின்றது என்பதைப் பற்றி ஆய்வு செய்தேன். எனது பள்ளி சயின்ஸ் புராஜெக்ட் இதுதான். கவனம் சிதறும் போதும் சிதறாதபோதும் வாகன ஓட்டிகளின் எதிர்வினை என்ன என்பதை அறிய ஒரு மென்பொருளை உருவாக்கினேன்” என்று ஆச்சரியப்படுத்துகிறார் அவர்.

இப்போது இந்த சிறுமி தற்கொலை சம்பவம் பற்றிப் படித்த உடன், அதே ஆய்வுக்குத் திரும்பினார் த்ரிஷா. “மூளையின் அறியப்படாத ரகசியங்களை அவிழ்க்க வேண்டும் என்ற எனது விருப்பம் ‘ரீதிங்க்’ எனும் மென்பொருளை உருவாக்கச் செய்தது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பதின்பருவத்தினர் எதிர்கொள்ளும் இணைய மிரட்டல் பிரச்சனைக்குத் தீர்வுகாண இந்த மென்பொருளை உருவாக்கினேன்” என்கிறார் த்ரிஷா.

நமது இளம் தலைமுறையைப் பாதிக்கும் இந்த ஆபத்தைத் தடுப்பதற்கு ஒரு வழியைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில், தீவிரமான ஆராய்ச்சியில் மூழ்கினார் த்ரிஷா. “இணைய மிரட்டலால் நிகழும் தற்கொலை குறித்த செய்தியைப் படித்த போது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. சமூக வலைத்தளத்தில் அர்த்தப் பூர்வமான அல்லது காயப்படுத்தும் பதிவுகளை பதின்பருவத்தினர் போடுவதற்கு என்ன காரணம்? அந்த ஆண்டு அறிவியல் கண்காட்சிக்கு நான் ஒரு சயின்ஸ் புராஜெக்ட் செய்தேன். அந்த புராஜெக்ட்டில் காயப்படுத்தும் பதிவுகளுக்கு வயது எந்த அளவுக்கு காரணமாகிறது என்று ஆய்வு செய்தேன். பெரியவர்களோடு ஒப்பிடும் போது பதின்பருவத்தினரில் 50 சதவீதத்தினர் இது போன்ற காயப்படுத்தும் பதிவுகளைப் போடுகின்றனர் என்று முடிவு வந்தது. இந்த முடிவு என்னை ஆச்சரியப்படுத்தவில்லை.” என்கிறார் அவர்.

பதின்பருவத்தினரின் மூளை குறித்த ஆய்வில் இறங்கிய போது, மூளையின் ஒரு மிக முக்கியமான பகுதி த்ரிஷாவின் கவனத்தை ஈர்த்தது. “மூளையின் முன்பகுதியை மூடியிருக்கும் ப்ரிஃப்ரன்ட்டல் கோர்ட்டெக்ஸ் எனப்படும் அந்தப் பகுதி முழுமையாக வளர்ச்சியடைய 25 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. நமது முடிவெடுக்கும் திறனுக்கு இதுதான் காரணம். இந்தப் பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? பதின் பருவத்தினர் அவசர கதியில் உணர்ச்சி வயப்பட்டு முடிவெடுக்க இது காரணமாக இருக்குமா? இணையதளத்தில் காயப்படுத்தும் பதிவுகளைப் போட வைப்பது இதுதானா?” போன்ற கேள்விகளை எழுப்பிய த்ரிஷா, இந்தக் கேள்விகளுடன் இணைய மிரட்டல் பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சித்தார்.

பதின்பருவத்தினரின் உணர்ச்சிவயப்படும் மன நிலையைக் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டது ‘ரீதிங்க்’ மென்பொருள். இணைய மிரட்டலால் வரும் பாதிப்பை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. தாங்கள் என்ன செய்கிறோம்? அதன் பின் விளைவு என்ன என சிந்தித்தால் 93 சதவீதம் பேர் இணைய மிரட்டல் பிரச்சனையில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்கிறது த்ரிஷா மேற்கொண்ட ஆய்வு முடிவு. இந்த 93 சதவீதம் என்பதை நிஜமாக்குவதற்கு உருவாக்கப்பட்டதுதான் ‘ரீதிங்க்’. காயப்படுத்தும் பதிவுகளைப் போட வேண்டும் என்ற விருப்பம் 71ல் இருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது எனும் புள்ளி விபரம் ஒன்றை தனது இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார் த்ரிஷா.

இணைய மிரட்டல் செய்வதில் ஆர்வமுடைய பதின்பருவத்தினர் ‘ரீதிங்க்’ மென் பொருளை தனது போன் அல்லது கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்வார்களா? இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் த்ரிஷா, ‘ரீதிங்க்’ வெறுமனே ஒரு செயலி மட்டுமல்ல. அது ஒரு இயக்கம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் ஒரு இயக்கம் என்கிறார்.

அந்தப் பதினோரு வயது ரெபெக்கா, ஒன்றரை வருடங்களாக இணையத்தில் மிரட்டப்பட்டுள்ளார். அதன்பிறகு தண்ணீர் தொட்டி மீதி குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இணைய மிரட்டல் செய்ய வேண்டும் என்ற தீய எண்ணத்தை ‘ரீதிங்க்’ கட்டுப்படுத்தும் சரிதான். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக ரெபெக்கா மிரட்டப்பட்டுள்ளார். அது போன்ற சந்தர்ப்பங்களில் ‘ரீதிங்க்’ எப்படி வேலை செய்யும்?

தவறான நோக்கத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருந்து இந்த இணைய மிரட்டல் ஆசாமிகள் இயக்கப்படுவதாக ஒன்றும் நான் நினைக்கவில்லை என்கிறார் த்ரிஷா. தீமை நிச்சயமாக எல்லா இடத்திலும் பரவி இருக்கிறது. அது எந்த விதக் கட்டுப்பாடுமில்லாமல் செழித்து வளர்வதுதான் ஆபத்தானது. மனிதனுடைய எண்ண ஓட்டத்திற்கு முன்னால் ஒரு மென்பொருள் என்பது வெகு பலவீனமான ஒரு சாதனம்தான். ஆனால் மனித விழிப்புணர்வுக்கு அது ஒரு வலிமையான துணையாக இருக்கும். நடத்தை மாறுபாட்டுக்கான ஒரு சாதனமாகத்தான் ‘ரீதிங்க்’கை வடிவமைத்திருப்பதாகக் கூறுகிறார் த்ரிஷா. தனது சொந்த விழிப்புணர்வில் அந்த வலியை உணரும் போது, ஒருவர் பாதகமான முடிவை தேர்வு செய்வதற்கு முன் அதை மறுபரிசீலனை செய்வார்.

‘ரீதிங்க்’ பற்றி எல்லோருக்கும் பொதுவாக ஒரு கேள்வி எழும்: இணைய மிரட்டல்காரர்கள் தங்களது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஒரு செயலியை ஏன் தங்களது போனில் தரவிறக்கம் செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு,

“ரீதிங்க் பெற்றோர் மற்றும் கல்வியாளர்களை மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டது. குழந்தைகள் தங்களுக்காகவும் தங்களது நண்பர்களுக்காகவும் நல்ல முடிவெடுக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் இந்த முயற்சி எப்போதும் எப்படிப் பலனளிக்கும் எனத் தெரியாது. எனவேதான் எங்கள் முயற்சியில் இணைந்து கொள்ள பெற்றோர் மற்றும் கல்வியாளர்களைத் தேர்வு செய்கிறோம்". 

‘ரீதிங்க்’கின் நோக்கம் பெற்றோரின் கட்டுப்பாட்டுக்கு ஒரு மாற்றுதான். உங்கள் குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் என்ன செய்கிறார்கள் என்று வேவு பார்ப்பதற்கு மாறான ஒரு மாற்று. அறம் மற்றும் மதிப்பு வாய்ந்த நடத்தைகளை வளர்ப்பதற்கான ஒரு ஊடகமாக ‘ரீதிங்க்’ செயல்படுகிறது.” என்கிறார் த்ரிஷா. “வேவு பார்க்காமலிருப்பது முக்கியமானது. ஏனெனில் சுதந்திரமாகவும் தனது சொந்த அடையாளத்தோடும் வளரும் வயது அது” என்கிறார் அவர்

இந்த அறிவுப்பூர்வமான ஆய்வு வேலைகளைத் தாண்டி ரீதிங்க்கின் சிஇஓ த்ரிஷா நான்கு புத்தகங்களையும் எழுதியுள்ளார். அந்தப் புத்தகங்கள் மேதாவிக் குழந்தைகளின் முன்மாதிரியான செயல்பாடுகள் பற்றியும் தர்க்கத்தைத் தாண்டிய அவர்களது வயதுக்கும் சாதனைக்கும் இடையே உள்ள உறவு பற்றியும் பேசுகின்றன. தனது சாதனைகள் தனது வயதுக்கு மீறியது என்று த்ரிஷா ஒப்புக் கொள்வதில்லை. தனது வயதுக்கேற்ற வேலைதான் இது என்கிறார் அவர்.

“எனக்கு ஏழு வயதாக இருக்கும் போது பருவநிலை மாற்றம் பற்றியும் அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்தும் விளக்கும் ஒரு புத்தகத்தைப் படித்தேன். ‘தி இன் கன்வீனியன்ட் ட்ரூத்’ எனும் பெயர் கொண்ட அந்தப் புத்தகத்தை எழுதியது அமெரிக்காவின் துணை அதிபர். அந்த நேரத்தில் எனக்கு ஒரு கவலை ஏற்பட்டது இப்போதும் நினைவிருக்கிறது. பருவநிலை மாற்றத்தால் பனி உருகி விட்டால் பாண்டா கரடிகள் இறந்து போய் விடுமே என்று கவலைப்பட்டேன். இது பற்றி நாப்பர் வில்லி மேயருக்கு க்யோட்டோ ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ளுமாறு கடிதம் ஒன்றை எழுதினேன். இது தவிர காற்றிலும் தண்ணீரிலும் செல்லும் கார் ஒன்றை வடிவமைப்பதற்காக வாரக் கணக்கில் செலவு செய்தேன். எனது வயது எனக்கு ஒரு தடை என்று எப்போதும் நான் நினைத்ததே இல்லை. வளர்ந்த பெரியவர்களைக் காட்டிலும் வாழ்க்கையைப் பற்றிய குழந்தையான எனது பார்வை மிகவும் வித்தியாசமானது. பிரச்சனைகளுக்கு வழக்கமாகச் சொல்லப்படும் தீர்வுகளைக் காட்டிலும் புதுமையான எளிமையான தீர்வுகளை நான் எட்டுவதற்கு அதுதான் காரணம்.” என்கிறார் த்ரிஷா.

குழந்தைகளில் பலர் தங்களுக்குக்கு கிடைக்கும் பாக்கெட் மணியைக் கொண்டு சிறு தொழில்களைச் செய்வது நடக்கிறது. ஆனால் த்ரீஷா அவர்களைக் காட்டிலும் ஒரு படி மேலே சென்றவர். கூகுள் சயின்ஸ் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற த்ரிஷா, “பல்வேறு போட்டிகளில் எனக்கு வரும் பரிசுப் பணத்தை ‘ரீதிங்க்’ புராஜக்ட்டுக்காகச் செலவு செய்திருக்கிறேன்” என்கிறார். ‘ரீதிங்க்’கும் த்ரிஷாவும் உலகம் முழுவதும் நிறையப் பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் அந்தப் பாராட்டுகளில் இரண்டுதான் த்ரிஷாவுக்கு மிகவும் முக்கியமானது.

ஒரு முறை ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. தான் தத்து எடுத்திருக்கும் மகளுக்கு தொடர்ந்து இணைய மிரட்டல் வருவதாக அவர் சொல்லியிருந்தார். அந்த மகள் சிறுமி அல்ல. பெரிய பெண். ‘ரீதிங்க்’ குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் அந்த ஆசிரியை. மற்றொன்று ஒரு மின்னஞ்சல். ஒரு இளம் பெண் எழுதியிருந்தாள். அவளது தோழி ஒருத்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் என்ற தகவலை அந்த மின்னஞ்சல் கூறியது. சத்தமில்லாமல் பரவும் இந்த கொடிய நோயை ஒழிப்பதற்கு நான் மேற்கொள்ளும் முயற்சிக்கு நன்றி தெரிவித்திருந்தாள் அந்தப் பெண்.

‘ரீதிங்க்’ செயலியை ஆங்கிலம் தவிர பிற மொழிகளிலும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார் த்ரிஷா. 

“உலகம் முழுவதும் உள்ள பதின் பருவத்தினர் கையில் இந்தச் செயலி இலவசமாகச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. விரைவில் சர்வதேச அளவில் உள்ள பல்வேறு மொழிகளில் இந்தச் செயலியைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறேன்” என்கிறார் அவர்.

பொதுவாக குழந்தை சாதனையாளர்கள் பாராட்டப்படுகிறார்கள். த்ரிஷா அத்தகைய பாராட்டுகளைப் பற்றியெல்லாம் பெரிதாக அக்கறைப்படவில்லை. “எனது முயற்சிக்கு உரிய அங்கீகாரமும் வெகுமானமும் கிடைத்திருக்கிறது. ஆனால் ‘ரீதிங்க்’ மூலம் வந்த இந்த வெற்றியை எனக்குக் கிடைத்த வெற்றியாக நான் கருதவில்லை. ‘ரீதிங்க்’ செயலி உருவாக்கம் எனது புதியது காணும் ஆர்வத்திற்கு தீனி போட்டிருக்கிறது. ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. எனது படைப்பாக்கத் திறனை வளர்க்கிறது” என்கிறார் த்ரிஷா.

தோல்விகளைக் கூட த்ரிஷா வெகு எதார்த்தமாகவே எதிர்கொள்கிறார். “நான் கீழே விழும் போது எப்படி மீண்டும் நானே எழுந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். எனது பயணம் மற்றும் அனுபவங்களில் இருந்து அதிக பட்சமாக எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவை இறுதி இலக்கோடு நேரடியாக சம்பந்தப்பட்ட அனுபவமாக இருக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை” என்கிறார் அவர். த்ரிஷாவுக்கு பள்ளியில் பிடித்த பாடங்கள் ஆங்கிலம், வரலாறு, அறிவியல். “மனித குலம் எவ்வளவு தூரத்தைக் கடந்து வந்திருக்கிறது என்ற சுவாரஸ்யத்தை ஒவ்வொரு பாடமும் கற்றுக் கொடுக்கிறது” என்று விளக்குகிறார் த்ரிஷா. எதிர்காலத்திற்கும் அவர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்.

“மனித மூளை குறித்த அறிவியல் மீது எனக்கு ஆர்வம். மூளையின் ரகசியங்கள் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நான் கூட நரம்பியல் விஞ்ஞானத்தின் புத்திசாலித்தனத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி நிகழும் நல்ல மாற்றங்களுக்குக் காரணம் என்ன? மாற்றத்தை விரும்புகிறவள் ஒரு சமூக தொழில் முனைவர் என்ற அடிப்படையில் என்னால் இந்த உலகில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியுமானால், அது பெரிதாகவோ சிறிதாகவோ இருக்கலாம்… நான் சரியான பாதையில்தான் பயணப்படுகிறேன் என்று அர்த்தம்” என்கிறார் த்ரிஷா.

கடந்த ஐந்து வருடங்களாக மனித மூளை பற்றியும் நடத்தை பற்றியும் படித்துக் கொண்டிருக்கும் த்ரிஷாவின் அறிவுரை இதுதான்: 

“மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்துவதற்கு பரிசோதனைக் கூட கோட் அணிய வேண்டும் என்றோ உங்களுக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தலைமுடி இருக்க வேண்டும் என்பதில்லை. உங்களைச் சுற்றிப் பாருங்கள். தீர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பிரச்சனை ஒன்றைக் கண்டறியுங்கள். தீர்வைக் கண்டறிய கடுமையாக உழைத்தால் போதும். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். தீர்வைக் கண்டறிவீர்கள்.”

ஆக்கம்: ராக்கி சக்கரவர்த்தி | தமிழிலில்: சிவா தமிழ்ச்செல்வா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

இளம்வயது கண்டுபிடிப்பாளர்கள் தொடர்பு கட்டுரைகள்:

'பூம் பூம் ரோபோ டா...' குருக்ஷேத்ரத்தில் ரோபோக்களின் அணிவகுப்பு!

12 வயதில் வார்த்தை உலகின் சூறாவளியான அனிகா ஷர்மா!