‘ஹாரிபாட்டர்’ புகழ் ஜேகே ரௌலிங்: வாழ்க்கையை மாற்றிப் போட்ட ரயிலின் 4 மணி நேர தாமதம்!

0

சுருக்கம்:

கதைப்புத்தகமாக மட்டுமின்றி சினிமாவாகவும் வெளிவந்து வசூலில் சாதனை படைத்தது ஹாரிபாட்டர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தால் இன்று உலகிலேயே அதிகமாக பணம் ஈட்டும் எழுத்தாளர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ள ஜேகே ரௌலிங், வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தோல்விகளால் துவண்டு வாழ்க்கையே அவ்வளவு தான் என மனமுடைந்து போவோருக்கு நிச்சயம் இவரது வாழ்க்கைப்பாடம் மருந்தாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஸ்டோரி:

வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் பிடித்தது ஹாரிபாட்டர் கதை. மாயாஜாலங்கள் நிறைந்த அக்கதையைப் போன்று பல திடுக் திருப்பங்கள் நிறைந்தது தான் அதை எழுதிய ஜே.கே.ரௌலிங்கின் சொந்தக் கதையும். ஆனால், ஹாரிபாட்டர் கதையில் வருவது போல் மாயாஜாலம் எதுவும் இவரது நிஜ வாழ்க்கையில் நடந்துவிடவில்லை. மாறாக தான் சந்தித்த சோதனைகளை எல்லாம் தன்னம்பிக்கை எனும் மந்திரக்கோலால் மட்டுமே விரட்டியடித்து, இன்று வெற்றியாளர் என்ற நிலையை அவர் எட்டியுள்ளார்.

”இந்த உலகம் அற்புதங்களால் நிரம்பியிருக்கின்றன. அதை நீங்கள் இதுவரை பார்க்கவில்லை. எனவே அதை பார்க்கும் வாய்ப்பை நழுவவிடாதீர்கள்,” என்கிறார் ரௌலிங்.

1965-ன் ஆண்டு மேற்கு இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் எனும் நகரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஜே.கே.ரௌலிங்கிற்கு பெற்றோர் வைத்த பெயர் ஜோன்னே . பெண் ஒருவர் எழுதிய மாயாஜாலக் கதையை இளைஞர்கள் படிக்க விரும்ப மாட்டார்கள் என பதிப்பகத்தார் வற்புறுத்தியதாலேயே, தன் பெயரை இன்சியலாக்கி, தந்தையின் பெயரான ரௌலிங் என்ற பெயரில் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார் ஜே.கே.ரௌலிங். பின்னாளில் அதுவே அவரது அடையாளமாகிப் போனது.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என சிறு வயது முதலே கதைகள் சொல்வதில் பெரும் ஆர்வம் காட்டி வந்துள்ளார் ரௌலிங். தனது தங்கை டயானாவுக்கு தினமும் புதுப்புதுக் கதைகள் சொல்வது தான் அவரது பொழுதுபோக்கே. வாய் மொழியாக கதை சொல்லி வந்த ரௌலிங் தனது ஆறு வயதில் தனது முதல் கதைக்கு எழுத்து வடிவம் தந்தார். அந்தக் கதையின் பெயர், ‘ரேபிட்’.

கதை சொல்வதில் தீராக்காதல் இருந்தபோதும், படிப்பிலும் ரௌலிங் படி கெட்டி. குடும்ப வறுமை பாதிக்காதவாறு படிப்பிலும் கவனம் செலுத்தியதால், படிப்பிலும் முதல் மாணவியாகவே திகழ்ந்தார்.

படிப்பை முடித்த பின், போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார். அப்போது அவரது வாழ்க்கையில் காதல் மலர்ந்தது. காதலரைக் கரம் பிடித்து ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். ஆனால், அவரது திருமண வாழ்வு மகிழ்ச்சியாக நீடிக்கவில்லை. இரண்டே ஆண்டுகளில் கணவரைப் பிரிந்தார். விவாகரத்துக்குப் பின், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான ரௌலிங், தற்கொலைக்குக் கூட முயற்சித்துள்ளார்.

“என் கணவர் பிரிந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில்தான் இருந்தேன். இதில் ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை. வாழ்வின் கீழே சென்று அதன் அடி ஆழத்திலிருந்து என் வாழ்வை மீண்டும் அமைத்தேன்,”

என தன் வாழ்வின் கசப்பான நாட்கள் குறித்து பேட்டியொன்றில் ரௌலிங் இப்படிக் கூறியுள்ளார்.

கைக்குழந்தையுடன் வறுமை ஒருபுறம் வாட்டியபோதும், தன் கதை சொல்லும் ஆசையை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. தொடர்ந்து அவர் தன் மகளுக்கு கதைகள் சொல்லி வந்தார். பொருளாதார நிலை காரணமாக மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கிய அவர், தனது ஓய்வு நேரங்களில் எல்லாம் புதுப்புதுக் கதைகளை உருவாக்கினார்.

“இளம்வயதிலேயே ஆதரவற்ற நிலையில் ஏழ்மை என்னை சின்னாபின்னமாக்கிவிட்டது. ஆனால் நான் மீண்டும் பழைய நிலையை அடையவேண்டும் என்று விரும்பியதற்கு காரணம் என் மகள். நான் இருந்த மோசமான சூழ்நிலையில் வாழவேண்டியவள் அல்ல அவள். என் மகள் கஷ்டத்தை அனுபவிக்கக் கூடாது. அவளை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்தேன்.

எனவே, என் மனக் குழப்பங்களுக்கு மனநலம் பெற விரும்பினேன். தற்கொலை தூண்டுதல்களைத் தவிர்ப்பதற்காக மனோதத்துவ சிகிச்சை பெற்றேன். எனது மனநிலை சரியானது, என்கிறார் ரௌலிங்.

தான் வாழ்க்கையில் சந்தித்த நல்ல மற்றும் கெட்ட மனிதர்களின் சாயல்களைக் கொண்டே தனது கதையின் கதாபாத்திரங்களை அவர் வடிவமைத்தார். ஆனால், தனது கற்பனையில் உதித்த கதைகள் அனைத்தையுமே எழுத்தில் கொண்டு வர அவருக்கு நேரமும் போதவில்லை, பொருளாதார வசதியும் இல்லை.

“புரிதல் என்பது நிஜத்தை ஒப்புக் கொள்வதில் இருந்து தொடங்குகிறது. ஒப்புக்கொள்ளும்போது தான், மீண்டு வருதல் சாத்தியமாகிறது” - ரௌலிங்.

இப்படியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், 1990-ம் ஆண்டு ஒருநாள் மான்செஸ்டரிலிருந்து லண்டனுக்குச் செல்ல ரயிலுக்காக காத்திருந்தார் ரெளலிங். ரயில் சுமார் 4 மணிநேரம் தாமதமாக வந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் தனது கற்பனைக் குதிரையை தட்டி விட்டார் ரௌலிங். அப்போது உருவானது தான் ஹாரிபாட்டர் கதைக்கான கரு. ரயில் பயணத்தில் மேலும் அந்தக் கதையை செதுக்கினார் ரௌலிங்.

மனதில் ஏதோ பொறி தட்ட, மற்றக் கதைகளைப் போல அதைக் காற்றில் எழுதாமல் தன் கைக்குட்டையில் குறிப்பாக எடுத்துக் கொண்டார் அவர். பின்னர் டைப்ரைட்டர் ஒன்றில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தக் கதையை கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கி நாவலாக எழுதி முடித்தார்.

ஆனால், அவ்வளவு எளிதாக அதனை அவரால் புத்தகமாக வெளியிட இயலவில்லை. பதிப்பகத்தார் பலர் அவரது நாவலைப் புறக்கணித்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பின், ப்ளும்ஸ்பரி எனும் பதிப்பகம் ரௌலிங்கின் ஹாரிபாட்டர் கதையைப் புத்தகமாக அச்சிட்டது. அந்த பதிப்பக உரிமையாளரின் எட்டு வயது மகளுக்கு ரௌலிங்கின் ஹாரிபாட்டர் கதை பிடித்துப் போனதாலேயே அது அச்சில் ஏறியது தனிக்கதை.

முதலில் வெளியிடப்பட்ட 1000 பிரதிகளும் ஜெட் வேகத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து ரௌலிங்கின் அடையாளமாக மாறிப்போனது ‘ஹாரிபாட்டர்’ கதை. அதனைத் தொடர்ந்து ஹாரிபாட்டர் கதையின் தொடர்ச்சியை ஏழு பகுதிகளாக வெளியிட்டார் ரௌலிங்.

“ஒவ்வொருவருக்குள்ளும் இருளும் இருக்கிறது, வெளிச்சமும் இருக்கிறது. எதை தேர்வு செய்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. அதைப்பொறுத்தே நாம் வெளிப்படுகிறோம்”- ரௌலிங்

அடுத்தடுத்து ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் கதை புத்தகங்கள் 40 கோடி பிரதிகள் உலகம் முழுவதும் விற்றுத் தீர்ந்தன. புத்தக விற்பனை சாதனையில் 700 கோடி பவுண்டுகளை ஈட்டியது. 2004-ல் அமெரிக்க கரன்ஸி படி, ’முதல் பில்லியனர் எழுத்தாளர்’ என்ற பட்டத்தை பெற்று, உலகிலேயே அதிகமாகப் பணம் ஈட்டும் எழுத்தாளர் எனும் பெருமையைப் பெற்றார் ரௌலிங்.

நாவலின் வெற்றியைத் தொடர்ந்து, அதனைப் படமாக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர். அவர்களின் எதிர்பார்ப்பு தோற்கவில்லை. ஹாரிபாட்டர் படங்களும் வசூல் மழையைப் பொழிந்தன. ரௌலிங்கின் கைகளில் புகழோடு பணமழையும் கொட்டியது.

ஆனால் வறுமையில் வாடிய காலம் மாறி, பணம் கொழித்தபோதும் ரௌலிங்கால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவரது அம்மாவின் திடீர் மரணத்தால் நிலைகுலைந்து போன ரௌலிங், ஒரு கோடி பவுண்ட் பணத்தை மல்டிபிள் ஸ்கிலாராசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக தானம் செய்தார். இதோடு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்ற, தன் சொத்தில் பெரும் பகுதியைத் தந்தார்.

“வலி ஏற்படும்போது அதை மறத்துப்போக செய்துவிட்டு, பின்னர் அதை உணரும்போது மிகவும் கொடுமையாக இருக்கும்...” என்கிறார் ரௌலிங்.

தொடர்ந்து வாழ்க்கையில் போராட்டங்களைச் சந்தித்த ரௌலிங், தனது விடாமுயற்சியால் வெற்றியை வசப்படுத்தியுள்ளார். விரும்பிய துறை எதுவாக இருந்தாலும் அதில் முழு நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் போராடினால் நிச்சயம் ஒருநாள் வெற்றி நிச்சயம் என தன் வாழ்க்கைப் பாடத்தின் மூலம் உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளார் ரௌலிங்.

"தோல்விகள் நமக்கு துணைபுரிகின்றன. அவை நம்மிடமிருக்கும் வேண்டாதவற்றை களைய உதவுகின்றன. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் சிந்திக்க வைக்கின்றன. அதனால் என் வாழ்க்கையில் சரியான பாதையைக் கண்டேன். என் தோல்விதான் என் ஆசான்," என தன் வெற்றிக்கான ரகசியம் கூறுகிறார் ரௌலிங்.

கட்டுரை தொகுப்பு: ஜெயசித்ரா