தைரியமுள்ள சிறந்த பெண் அதிகாரிகளை இந்திய நாட்டிற்கு அளிக்கும் சென்னை OTA !

0

2010-ல் சென்னை ஆப்ஃபீஸர்ஸ் ட்ரெய்னிங் அகாடெமியில் (OTA), சென்னையைச் சேர்ந்த திவ்யா அஜீத்குமார் மதிப்புமிக்க ஸ்வார்ட் ஆப் ஹானர்ஸ் வென்ற முதல் பெண் கேடட் ஆவார். உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு அவர் உத்வேகம் அளிக்கிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த ரேணு ஷெகாவாட், திவ்யாவைப் பின்தொடர்ந்து 2015-ல் OTA-வில் சேர்ந்தார். இந்த வருடம் மார்ச் மாதம் மொத்தம் 33 பெண் கேடட்கள் தேர்ச்சிபெற்று வெளியேற உள்ளனர். இவர்களில் ரேணு முன்னனி வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பயிற்சியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 150 ஆண் கேடட்களுடன் பெண்கள் போட்டியிடுகின்றனர்.

2015-ல் புதுடெல்லியில் நடந்த குடியரசுதின அணிவகுப்பில் திவ்யா தலைமை வகித்தார். திவ்யா, CRPF கான்டின்ஜென்ட் அணிவகுப்பில் தலைமை வகுத்த முதல் பெண்மணியாவார். 

“திவ்யாவின் சாதனை குறித்து நான் செய்தித்தாளில் படித்ததும் ராணுவத்தில் சேரவேண்டும் என்று முடிவெடுத்தேன். அகாடெமியில் பாலினம் ஒரு தடை இல்லை. அனைவருக்கும் அதே கடின பயிற்சிதான் அளிக்கப்படும்,” 

என்று டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டியளித்தார் ரேணு.

சென்ற வருடம் எர்னாக்குளத்தைச் சேர்ந்த அஞ்சனா என்ற அதிகாரி ஸ்வார்ட் ஆஃப் ஹானர்ஸ் வென்றார். 25 வயதான அஞ்சனா, மும்பை அரசு சட்டக்கல்லூரியில் படித்து முடித்து ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். ஃபைன் ஆர்ட்ஸில் முதுநிலை பட்டம் பெற்றவர். பயிற்சிபெற்ற பரதநாட்டிய கலைஞர். 48 வார கடின பயிற்சிக்குப்பின், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் கேடட்களை எதிர்த்து ஒட்டுமொத்தமாக தகுதிபெற்று வென்றார். பயிற்சியில் கேடட்கள் அபாயமான நிலப்பரப்பில் 20 கி.மீ முதல் 40 கி.மீ வரை ஓடவேண்டும்.

14-தடைகள் கொண்ட பயிற்சி உள்ளிட்ட பல உடல் வலிமை பயிற்சிகளில் ஆண் பெண் என்று வித்தியாசப்படுத்த முடியாத அளவிற்கு அகாடெமியில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதனை புரிகிறார்கள். 2013-ல் அசாமின் பலிபரா எனும் இடத்தில் நடந்த கிளர்ச்சியின்போது மேஜர் வினீத் வர்மா வீர மரணமடைந்தார். அதன்பின் அவரது மனைவி ருசி வர்மா அகாடமியில் சேர்ந்து 2015-ல் “வீர் நாரி” பெற்றார். ஒருவரின் வயதோ அல்லது திருமண நிலையோ ஒரு தடை அல்ல என்பதற்கு ருசி வர்மா ஒரு மிகச்சிறந்த உதாரணம். 

கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு அளிக்கப்படும் “வீர் நாரி” பட்டம் மட்டும் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. சகல வசதிகளுடன் வாழும் இருப்பிடத்தை விட்டு வெளியேறி கணவர் விட்டுச்சென்ற பணியை நாட்டுக்காக தொடர விரும்பினார். கடந்த வருடம் இந்திய ராணுவத்தின் அதிகாரியாக பதவியேற்ற OTA-வின் 185 கேடட்களில் 24 வயது ருசியும் ஒருவராவார். “அகாடெமியில் சேர்ந்தபின் என் வாழ்க்கையே தலைகீழாக மாறியது” என்று லெப்டினன்டாக பதிவியேற்ற விழாவில் தெரிவித்தார் ருசி. அவரது ஆறு வயது மகன் அக்ஷத் வர்மா நிச்சயம் ஒரு நாள் ராணுவத்தில் சேருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

மக்கள் பணி முதல் படைப்புலகம் வரை: மகளிர் மகத்துவம் போற்றும் தமிழ் யுவர்ஸ்டோரி!