'ஸ்டார்ட்-அப் இந்தியா'வை ஜன.16-ல் தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

0
புதுடெல்லியில் ஜனவரி 16, 2016-ல் தொடங்கப்படும் இந்திய அரசின் 'ஸ்டார்ட்-அப் இந்தியா' இயக்கத்துடன் கூட்டு அமைப்பாக இணைவதில் 'யுவர்ஸ்டோரி' பெருமிதம் கொள்கிறது.

இளைஞர்கள் தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் இளம் தொழில்முனைவரின் உத்வேகத்தைக் கொண்டாடும் நோக்கத்துடன் நடைபெறும் இந்த நிகழ்வில், நாடு முழுவதிலும் இருந்து முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களும் நிறுவனர்களும் (1,500-க்கும் மேற்பட்டோர்) பங்கேற்கின்றனர். அதில், நிறைவுரையாற்றும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இயக்கத்தை முறைப்படி தொடங்கிவைத்து, 'ஸ்டார்ட்-அப் இந்தியா' செயல் திட்டத்தை வெளியிடுவார்.

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் அருண் ஜேட்லி விக்யான் பவனில் ஜனவரி 16, 2016 காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கிறார். இதில், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

நாள் முழுவதும் ஸ்டார்ட்அப் தொழில்முனைவு குறித்த சர்வதேச பயிலரங்கு தொடர்ச்சியாக நடைபெறும் இந்த நிகழ்வில் அரங்கேறவுள்ள குழு விவாதங்களில் இடம்பெறும் கருப்பொருள் தலைப்புகள்:

  • தொழில்முனைவு கட்டவிழ்த்தலும் புத்தாக்கமும்: இந்திய ஸ்டார்ட்அப்-களின் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் தேவையானவை
  • மகளிரைக் கொண்டாடுதல்: புத்தாக்க பெண் தொழில்முனைவர்களின் கதைகள்
  • இந்திய எதிர்காலத்தை 'டிஜிட்டல் மயம்'; மாற்றும் விதங்கள்
  • இந்திய சுகாதார மேம்பாட்டை உருவாக்குதல்
  • எட்டக்கூடிய இலக்குடன் உள்ளார்ந்த நிதிநிலை

மத்திய இணை நிதியமைச்சர் ஜெயந்த் சின்ஹா தலைமையில் 'பணத்தை காட்டுங்கள்: நாம் தொழில்முனைவை பயன்படுத்துவது எப்படி?' என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெறும். 'கொள்கை வகுப்போருடன் நேருக்கு நேர்' என்ற தனித்துவமான கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெறும். அதில், ஸ்டார்ட் அப்களை சூழல்களை உருவாக்குவது குறித்து அமைச்சரவைகள் மற்றும் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் விளக்கம் அளிப்பார்கள்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஒரு சூழலமைப்பை உருவாக்குவதையொட்டிய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்துவதே முக்கிய நோக்கம். வருவாய்த் துறை, மனித வளம் மற்றும் மேம்பாட்டுத் துறை, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை, நிதி சேவைகள் துறை, பொருளாதார விவகாரங்கள் துறை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, சிறு, குறு மற்றும் மத்திம தொழில்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் செயலாளர்கள் இந்த விவாதக் குழுக்களில் இடம்பெறுவர். அவர்களுடன், பங்கு பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம் (செபி - SEBI) மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி - SIDBI) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடம்பெறுவர்.

மசாயோஷி சன் (சாஃப்ட்ஃபேங்க் நிறுவனர் - சி.இ.ஓ.), டிராவிஸ் கலானிக் (உபேர் நிறுவனர்) ஆடம் நியூமன் (வீஒர்க் நிறுவனர்) போன்ற சர்வதேச தலைவர்கள், தொழில் முதலீட்டாளர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் முக்கிய நிகழ்வுகளில் அடங்கும். 40-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்-களின் முன்னணி சி.இ.ஓ.க்கள், நிறுவனர்கள், தொழில் முதலீட்டாளர்கள், சிலிக்கான் வேலியில் இருந்து ஏஞ்லஸ் இன்வெஸ்டர்ஸ் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கேள்வி - பதில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர்.

'லாஞ்ச்பேடு ஆக்சிலரேட்டர்' எனும் தலைப்பில் கூகுள் ஒரு புத்தாக்க நிகழ்ச்சியை நடத்துகிறது. அதில், ஆரம்பகட்ட ஸ்டார்ட்அப்-களை தகுதிவாய்ந்த முதலீட்டாளர்கள் ஆக்கும் வகையிலான நிகழ்நேர வழிகாட்டுதல் முக்கியப் பங்கு வகிக்கும். ஸ்டார்ட்அப் நிதி தொடர்பான அம்சங்கள் குறித்து சாஃப்ட் பேங்க் தலைவரும், சி.ஓ.ஓ.வுமான நிகேஷ் அரோரா பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடுவார். நாட்டிலுள்ள ஸ்டார்ட்அப்-களால் மேற்கொள்ளப்பட்ட தனித்துவமானதும் புத்தாக்கம் கொண்டதுமான அம்சங்களை உள்ளடக்கிய சிறப்புக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

'மனதில் உள்ளதை கூறுகிறேன்' (மன் கீ பாத்) என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டது போலவே 'ஸ்டார்ட்-அப் இந்தியா'வுக்கான முழு செயல் திட்டமும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. நாட்டின் ஸ்டார்ட்அப் சூழலமைப்பை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு நிலைகளில், அரசின் முன்முயற்சிகளும் திட்டங்களும் அந்தச் செயல் திட்டத்தில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும்.

நாட்டில் ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதற்கு வழிவகுக்கும் இந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்துமே ஐ.ஐ.டி.கள், ஐ.ஐ.எம்.கள், என்.ஐ.டி.கள், ஐ.ஐ.ஐ.டி.கள் மற்றும் மத்தியப் பல்கலைக்கழங்கள் மற்றும் இந்தியாவின் 350 மாவட்டங்களில் உள்ள இளைஞர் குழுக்களுக்கு நேரலையில் ஒளிபரப்பப்படும்.

இன்வெஸ்ட் இந்தியா மற்றும் ஸ்டார்ட்அப் சூழலைமைப்பு நிறுவனங்களான ஐஸ்பிரிட், யுவர்ஸ்டோரி, நாஸ்காம், ஷி தி பீப்பிள்.டிவி மற்றும் கெய்ரோஸ் சொசைட்டி மற்றும் ஃபிக்கி மற்றும் சி.ஐ.ஐ. ஆகியவற்றின் இளைஞர் பிரிவுகள் ஆகியவற்றுடன் இணைந்து தொழில் கொள்கை மற்றும் பிரபலப்படுத்துதல் துறை (டிஐபிபி) இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது.

தமிழில்: கீட்சவன்