'ஸ்டார்ட் அப்'களை ஊக்குவிக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம்’ – ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு

0

இந்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சவால்கள் நிறைந்த ஒரு பதவியை திறம்பட நிர்வகித்து வருபவர். அவர் பொறுப்பேற்றதிலிருந்து அமைச்சகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது

யுவர் ஸ்டோரி உடனான உரையாடலில் அமைச்சகத்தின் சாதனைகள், உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கான இந்தியன் ரயில்வே மீதான ஆர்வம், பயணிகளின் மகிழ்ச்சியிலிருந்து கிடைக்கும் தனிப்பட்ட திருப்தி ஆகியவற்றை மிகத் தெளிவாக பகிர்ந்துகொண்டார்.

அமைச்சர் சுரேஷ் பிரபு உடன் யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா
அமைச்சர் சுரேஷ் பிரபு உடன் யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா

அவர் பொறுப்பேற்றபோது அமைச்சகம் சந்தித்துக்கொண்டிருந்த அனைத்து சவால்களையும் பட்டியலிட்டுப் பார்த்தார். வெற்றுரையாக இல்லாமல் பலவற்றை செயலில் நிரூபித்துக் காட்டவேண்டும் என்பதை உணர்ந்தார் பிரபு, பல மாற்றங்களை ஏற்படுத்தினார்.

”இந்தியவில் 42 சதவீத ரயில்வே லைன்கள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டுள்ளது. இன்னும் பல லைன்கள் மீட்டர் கேஜில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தகவலை மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். எனவே நாங்கள் ஒரு தடையற்ற பயணத்தை வழங்க விரும்பினோம். அனைத்து லைன்களையும் அடுத்த ஐந்தாண்டுகளில் மின்மயமாக்குவோம்.” என்றார். 

மேலும் பெரும்பாலான லைன்கள் 160-170 சதவீத திறனுடன் இயங்கி வருவதால் 16,500 கிலோமீட்டர் லைன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 400 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்படுவதற்கான தேவை உள்ளது என்பதைக் கண்டறிந்த பிரபு விமானநிலையங்களுக்கு நிகராக ரயில்வே நடைமேடையை உருவாக்க நடைபெற்று வரும் பணிகளைச் சுட்டிக்காட்டினார். அத்துடன் ரயில் பெட்டிகள் சீரமைப்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இ-கேட்டரிங் ஒரு சிறப்பம்சமாக மாறிவிட்டது. இவை அனைத்தையும் தாண்டி அமைச்சரின் முன்னோக்கு பார்வை கொண்ட அணுகுமுறையை குறிப்பிடவேண்டும். தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிடலாக்குவதற்கான தேவை இருப்பதையும் இவர் வலியுறுத்தினார். 

ரயில் நிலையங்களில் வைஃபை வசதி அமைப்பது, தரவுகளின் பகுப்பாய்வு மற்றும் நிறுவன வளம் திட்டமிடல் (ERP) போன்ற சமீபத்திய வளர்ச்சி குறித்து அவர் நன்கறிந்த காரணத்தினால் இவற்றைக்கொண்டு ரயில்வே பிரிவை ஒரு லாபம் ஈட்டும் பிரிவாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

”அத்தகைய மாற்றத்தைக் கொண்டுவருவதில் ஸ்டார்ட் அப்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க நாங்கள் 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். சில குறிப்பிட்ட பகுதிகளில் எங்களுக்குத் தேவைப்படும் உதவி குறித்து தெரிவித்துள்ளோம். இது குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்கள் தளத்தின் பயனர்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறோம்,” என்றார்.

பயணக்கட்டணம் அல்லாத வேறு சில முயற்சிகள் மூலம் அவரது அமைச்சகம் வருவாய் ஈட்டுவதற்கான தேவையை வலியுறுத்தினார் பிரபு. இதில் தரவுகளை ஆய்வு செய்வதே ரயில்வேயின் வளர்ச்சிக்கான முக்கிய திறன் என்று அதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். அமைச்சகத்தின் பரந்த டிஜிட்டல் டிஸ்ப்ளே நெட்வொர்க் - ஸ்டேஷன்களில் இரண்டு லட்சம் ஸ்கிரீன்கள் - மற்றும் வினைல் விளம்பரங்கள் போன்றவற்றின் வாயிலாக அமைச்சகம் வருவாய் ஈட்டுகிறது. “அடுத்த ஐந்தாண்டுகளில் 25 சதவீத வருவாயை இவற்றிலிருந்து பெற விரும்புகிறேன்.” என்றார்.

சமூக ஊடகங்களில் சிறப்பாக செயல்படுகிறார் பிரபு. இவர் அமைச்சகத்தை நவீனமயமாக மாற்றியுள்ளார். அனைத்து அதிகாரிகளும் ஊடகங்கள் வாயிலாக செயல்படுவதால் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், ரயில்வே அதிகாரிகளின் முறைகேடு குறித்து புகாரளிப்பவர்கள் என அனைவருக்கும் உடனடி உதவி வழங்கப்படுகிறது. 

”ஒரு அமைச்சராக நான் சிறப்பாக செயல்படுகிறேன். அயராது உழைக்கும் பிரதமர் எனக்கு ஒரு உந்துதலாக உள்ளார். ரயில்வேதுறையில் 13 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். எனவே நோக்கங்களை கண்டறிந்து கார்ப்பரேட் அமைப்பைப் போல அமைச்சகத்தை மாற்றவேண்டும்.” என்று குறிப்பிட்டார்.

சிஏ தேர்விற்கு முழுமையாக தயார்நிலையில் இல்லாதது போன்ற கனவுகள் 40 வருடங்களுக்கு முன்னால் பிரபுவிற்கு தோன்றியுள்ளது. பிரபு நகைச்சுவையாக குறிப்பிடுகையில் தற்போது தான் நன்றாக உறங்குவதாகவும், இருப்பினும் அதே போன்ற கனவுகள் தோன்றுவதாகவும் தெரிவித்தார். 

கேமராமேன் : மனோஜ் உபாத்யாயா

வீடியோ எடிட்டர் : ஆனந்த் பிரசாத்

ஆங்கில கட்டுரையாளர் : ஷ்ரத்தா ஷர்மா