தமிழ்நாடு கிராமங்களில் தொடங்கிய இணையவழி வணிகம்!

0

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் இணைய வழி வணிகம் (e-commerce) முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. எனினும் அது கிராமப்புறப் பகுதிகளைப் பெரிய அளவில் சென்று அடையவில்லை. கிராமப்புற வாடிக்கையாளர்ளை அதிகரிக்காமல் உண்மையான இணைய வழி வணிக வளர்ச்சி இல்லை என்று வணிக நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஃபிலிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் போன்று யுனிகார்ன்ஸ் (Unicorns) நிறுவனமும் கிராமப்புற சந்தையில் நுழைய முயற்சித்து வருகிறது. ஐபே(IPay), ஸ்டோர் கிங்(StoreKing), இன்த்ரீ(InThree) போன்ற நிறுவனங்கள் கிராமப்புற சந்தையை மட்டுமே குறி வைக்கின்றன.

இன்த்ரீயின் நுகர்வோருக்கான தளம் பூன்பாக்ஸ் (Boonbox). கிராமப்புறச் சந்தையில் விற்பனையாளருக்கான வாகனமாக பூன்பாக்ஸ் நுழைந்துள்ளது. நுகர்வோரின் பல்வேறு பொருட்களுக்கான தேவைகளைப் பதிவு செய்து, அந்தப் பொருட்களுக்கான ஆர்டர்களை விற்பனையாளரிடம் அது சேர்க்கிறது. இன்த்ரீயின் சகோதர நிறுவனமான பூன்பாக்ஸ், சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.

இந்த நிறுவனம், வெகு தொலைவில் உள்ள நகரங்களுக்கும் உட்கிடை கிராமங்களுக்கும் பொருட்களையும், சேவைகளையும் கொண்டு சேர்ப்பதற்கான கட்டமைப்பைப் பெற்றுள்ளது. கிராமப்புற சந்தைகளில் தேர்ச்சி மற்றும் தொலை தூரத்திற்கும் கொண்டு சேர்க்கும் பல ஆண்டு கால அனுபவத்துடன், கிராமப்புற நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது இந்த நிறுவனம்.

இந்திய பீட்டர் ட்ரக்கர் சி.பி.பிரஹ்லாத் ஏற்படுத்திய உந்துதல் - 'இன்த்ரீ'

பொதுவாக ஆரம்ப தொழில்முனைவர், ஸ்டீவ் ஜாப்ஸ், ஜாக் மா, சச்சின் பன்சல் மற்றும் குனால் பால் போன்றவர்களைத்தான் முன்மாதிரிகளாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இன்த்ரீ நிறுவனர் ஆர்.ராமநாதனுக்கு, டாக்டர் சி.கே.பிரஹ்லாத் தான் ஊக்கம் கொடுத்தவர். கிராமப்புற சந்தைக்குச் செல்ல வேண்டும் என்ற தூண்டலை அவர் ஏற்படுத்த, இன்த்ரீ உதயமானது.

பேராசிரியர் Dr.பிரஹ்லாத் பற்றிய யுவர்ஸ்டோரியின் பதிப்பை பார்க்க: http://yourstory.com/2010/04/prof-ck-prahalad-a-tribute/

பிரஹ்லாத், மிச்சியகன் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இந்தியாவின் பீட்டர் ட்ரக்கர் என அறியப்படுபவர். ராமநாதன் முதலில் ஆர்பிஜி, ஐசிஐசிஐ மற்றும் டிவிஎஸ் குழுமங்களில் எஸ்பியு, பிராஃபிட் சென்ட்டர் ஹெட் போன்ற உயர் நிர்வாகப் பதவிகளில் பணியாற்றியவர்.

இன்த்ரீயின் ஆரம்ப நாட்கள்

ஆரம்பத்தில் இன்த்ரீ, கிராமப்புற சந்தை பற்றிய ஆலோசனை உதவிகளை வழங்கும் நிறுவனமாகவே செயல்பட்டது. விநியோக கட்டமைப்புக்கான மூலதனம் அப்போது அதனிடம் இல்லை. ராமநாதன் சொல்கிறார்..

”இந்தியாவில் ஃபிலிப்ஸ் நிறுவன புகையில்லா ஸ்டவ்வை அறிமுகப்படுத்தினோம். யுரேகா ஃபோர்ப்ஸ், நோக்கியா, டைட்டன் இண்டஸ்ட்ரிஸ், ஹெயின்ஸ் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களின் ஆலோசகர்களாக செயல்பட்டோம்”

இன்த்ரீ மற்றும் பூன்பாக்ஸ் குழு
இன்த்ரீ மற்றும் பூன்பாக்ஸ் குழு

2011 இறுதியில் தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில தபால் அலுவலகங்கள் மூலம் சூரியஒளி பல்புகள் விற்பனையோடு நிறுவனம் துவங்கியது. அதன்பிறகு அந்தப் பொருளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேவை அதிகரித்தது. தமிழ்நாடு மற்றும் அப்போதைய கர்நாடகம் முழுவதும் விற்பனை விரிவு படுத்தப்பட்டது. இது பற்றி ராமநாதன் கூறுகையில்...

"வழக்கமான பாணியில் இல்லாமல் தொண்டு நிறுவனங்கள் மற்றும் விவசாய வாரியங்கள் மூலம் விற்பனையை விரிவுபடுத்தினோம். இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள சுமார் 5 லட்சம் நுகர்வோருக்கு, பல்வேறு விதமான பொருட்கள் சுமார் 7 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டது. "

கிராமப்புற வாழ்க்கை முறையை மேம்படுத்தும் இணையவழி வணிகம்

“சூரிய ஒளி பல்பு விற்பனையில் வெற்றி கிடைத்ததோடு, கிராமப்புற நுகர்வோரின் ஆர்வத்தையும் நாங்கள் புரிந்து கொண்டோம். கிராமப்புற நுகர்வோருக்கு இணையவழியில் பொருட்களை விற்பனை செய்யலாம் என்ற யோசனை பிறந்தது. எங்கள் வர்த்தகத்தை வேறு ஒரு தளத்திற்கு விரிவுபடுத்தினோம்.” என்கிறார் ராமநாதன்

வர்த்தகர்கள் பெரும்பாலும் பெருநகரங்கள் அல்லது நகரங்களிலேயே கவனம் செலுத்துகின்றனர். இந்தியாவின் பெரும்பகுதியான கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்தும் பொருட்களை அவர்களிடம் கொண்டு சேர்க்காமல் விட்டுவிடுகின்றனர். இந்த நம்பிக்கைதான் இன்த்ரீ மற்றும் பூன்பாக்ஸ் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஊக்கமளித்தது.

ராமச்சந்திரன் ராமநாதன், நிறுவனர், தலைவர், இன்த்ரீ
ராமச்சந்திரன் ராமநாதன், நிறுவனர், தலைவர், இன்த்ரீ

பூன்பாக்ஸ் விற்பனையாளர்களுக்கு எப்படி செயல்படுகிறது?

கிராமப்புற சந்தையில் விற்பனையாளர்கள் கால்வைப்பதற்கு பூன்பாக்ஸ் ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. பல்வேறு விதமான பொருட்களுக்கான தேவைகளை பதிவு செய்து, அவற்றிற்குரிய ஆர்டர்களை விற்பனையாளர்களிடம் தருகிறது இன்த்ரீ. தற்போது தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்குகிறது. சமீபத்தில் ஆந்திராவிலும் நுழைந்துள்ளது.

இன்த்ரீயால் கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் அதன் கிட்டங்கில் சேமிக்கப்படுகிறது. பின்னர் அவை பரிசோதிக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு, கிராமப்புற நுகர்வோரின் இல்லங்களில் சேர்க்கப்படுகிறது.

லாபமும் வருமானமும்

வாட்டர் பூரிஃபையர் மற்றும் சூரிய ஒளி பல்புகள் உள்ளிட்ட நீடித்து உழைக்கும் பல்வேறு விதமான பொருட்களை இதுவரையில் 7 லட்சம் யூனிட் வரையில் விற்பனை செய்துள்ளது இன்த்ரீ. பல ஆண்டுகளாக லாபத்தில் இயங்குகிறது இந்நிறுவனம். 2014 ஆகஸ்ட்டில் இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க் (Indian Angel Network – IAN) மூலம் நிதி திரட்டியது. இணைய வழி விற்பனை அளவில் (Gross merchandise volume- GMV) 50 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. லாபம் ரூ.2 கோடிக்கும் மேல் உள்ளது. சமீப காலம் வரையில் நிறுவனத்திற்குத் தேவையான நிதி அதன் உள்ளேயே எழுப்பப்பட்டுள்ளது.

சவால்களும் எதிர்காலத் திட்டங்களும்

"நியாயமான விலையில் பொருட்களை வழங்கி வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்தல், போதிய இணைய தள வசதியின்மை, போதிய கடன் அட்டை பயன்பாடின்மை, தொலை தூரத்தில் பொருட்களை சேர்ப்பதில் உள்ள சிரமம் போன்றவை இந்தத் தொழிலின் மிக முக்கியமான சவால்கள்" என்கிறார் ராமநாதன்.

இன்த்ரீ தற்போது 40 பேரைக் கொண்ட குழுவைக் கொண்டுள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் அது 100 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"கிராமப்புறத்திற்கு இணைய வழி வணிகத்தில் பூன்பாக்ஸ் முன்னோடி நிறுவனமாய் வளரும். பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வட இந்திய மாநிலங்களுக்கு விற்பனையை விரிவு படுத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார் அவர் .

யுவர்ஸ்டோரியின் கருத்து

வழக்கமான சில்லறை விற்பனையில் உள்ள வாய்ப்புக் குறைவுகளும், இணையத்தில் எளிதில் பொருட்கள் கிடைப்பதும், இந்தியாவில் இணையவழி வணிகத்தை பெரிய அளவில் வளர்த்துள்ளது. தற்போது கிராமப்புற இந்தியா வழக்கமான சில்லறை வர்த்தகத்தால் பின்தங்கியிருக்கிறது. கிராமப்புறங்களில் இணைய வழி வணிகத்தின் வெற்றி இதைத்தான் காட்டுகிறது. எனினும் பொருள் வழங்கல் தொடரில் (supply chain) உள்ள குறைபாடு, தொலை தூரத்திற்கு பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் சிரமம் போன்றவை இந்த வணிகத்தில் உள்ள மிகப்பெரும் தடைகள். தென்னிந்தியாவைப் பொருத்தவரையில் இன்த்ரீ, ஐபே, ஸ்டோர் கிங் போன்ற நிறுவனங்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டிருக்கின்றன.

ஒவ்வொரு கிராமத்திற்கும் இணையதள இணைப்பு வழங்க அரசு முயற்சித்து வருகிறது. எனவே கிராமப்புறத்திற்கு இணைய வழி வணிகத்தின் எதிர்காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது. வரும்காலத்தில் இந்தியாவின் வடக்கு மற்றும் பிற பகுதிகளில் இவர்கள் எப்படி தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தப் போகிறார்கள் என்று பார்ப்பது சுவாரஸ்யமான ஒன்றாக நிச்சயம் இருக்கும்.

இணையதள முகவரி: http://www.inthreeaccess.com/ மற்றும் https://boonbox.com/