சுயசார்புடன் இருக்கவேண்டும் என்கிற லட்சியத்தோடு வாழும் இரு கைகள் அற்ற பின்சி!

0

மாற்றுத்திறனாளியான பின்சி கோகய் இரு கைகளும் இன்றியே பிறந்தார். ஆனால் 19 வயதாகும் இவர் கஷ்டமான சூழல்களில் தளர்ந்து போகாமல் எதிர்த்துப் போராடினார். சுயசார்புடன் இருக்கவேண்டும் என்கிற கனவுடன் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு தற்போது குவாஹத்தியில் இருக்கும் நெம்கேர் பன்நோக்கு மருத்துவமனையில் ’நான் உங்களுக்கு உதவலாமா’ என்கிற வழிகாட்டும் பணிக்குப் பொறுப்பேற்றுள்ளார்.

முறையான மருத்துவ பராமரிப்பு தகவல்களை எதிர்நோக்கும் மக்களுக்கு தகவல் சேவையளிக்கிறார் பின்சி. நோயாளியின் விவரங்களை எழுதுவது, அலுவலகம் தொடர்பான பணிக்காக தொலைபேசியில் அழைப்பது, பிற அலுவலக பணிகள் என அவர் தனது அனைத்து அன்றாட பணிகளையும் கால்களால் மேற்கொள்கிறார்.

பின்சியின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஆரம்பத்தில் அவருக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது. அவரது உறவினர் ஒருவர் மூலமாகவே அவரது சொந்த ஊரில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் அனுமதி கிடைத்தது.

அவர் சந்தித்த போராட்டங்கள் அதன் பின்னரும் தொடர்ந்தது. குவாஹத்தியில் மேற்படிப்பைத் தொடர்வதற்கும் அனுமதி கிடைப்பது கடினமாக இருந்தது. அனைத்து போராட்டங்களையும் சமாளிக்க அவரது அம்மா அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

நெம்கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஹித்தேஷ் பருவா டைம் 8-க்கு தெரிவிக்கையில்,

”அவர் மாற்றுத்திறனாளியாக உள்ளபோதும் நெம்கேர் மருத்துவமனையில் ’நான் உங்களுக்கு உதவலாமா’ என்கிற வழிகாட்டும் பணிக்கு பொறுப்பேற்று கணிவுடன் பொறுப்பை நிர்வகித்து வருகிறார்.”

மருத்துவமனையில் தனது பணியை திறம்பட செய்வதுடன் பின்சி தனது கால்களால் ஓவியம் தீட்டுகிறார்.

அதே போல் லக்னோவைச் சேர்ந்த 48 வயதான ஷீலா ஷர்மா தனது கால்களாலும் வாயினாலும் கலைப்படைப்புகளை உருவாக்குகிறார். நான்கு வயதிருக்கையில் ஒரு விபத்தில் அவர் தனது கைகளை இழந்துவிட்டார். இருப்பினும் எழுதவும் ஓவியம் தீட்டவும் கற்றுக்கொண்டார். தனது ஆர்வம் குறித்து அவர் மிட்டே-க்கு தெரிவிக்கையில்,

ஒருமுறை நான் பள்ளியில் இருந்தபோது ஒரு நபர் தனது கால்களால் ஓவியம் தீட்டுவதைப் பார்த்தேன். அப்போதுதான் நுண்கலை என்பது குறைபாடுகள் இல்லாத நபர்களுக்கானது மட்டும் அல்ல என்பதை உணர்ந்தேன்.

கட்டுரை : THINK CHANGE INDIA