குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

0

தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த் ஒரு உன்னதமான அரசியல்வாதி என பெயரெடுத்தவர். இவர் தரப்பிலிருந்து வார்தைகளைக் காட்டிலும் செயல்கள் அதிகமாக காணப்படும். எளிமையான பின்னணியைச் சேர்ந்த 71 வயதான இவர், தமது வாழ்க்கை முழுவதும் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்ளாமல் விலகியே இருந்தார்.

பீஹார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த், 1945-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தார். ராம்நாத் சட்டம் பயின்றவர். இவர் தலித் சமூகத்தின் முக்கியத் தலைவராவர்.

கோவிந்த் ஆரம்பத்திலிருந்தே பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராவார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் 1994 – 2000 மற்றும் 2000 – 2006 என இரண்டு முறை ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தார். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ராம்நாத். எப்போதும் ஏழை மற்றும் கீழ்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டிருப்பவர்.

வணிகப் பிரிவில் இளநிலை பட்டமும் கான்பூர் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பட்டமும் பெற்றவர். 1977 முதல் 1979 வரை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராக பணியாற்றினார். 1978-ல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றினார். 1971-ல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகத் தம்மை பதிவு செய்துகொண்டு ஏழை மக்கள், பெண்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் சட்ட உதவிகள் செய்து வந்தார். 1977 முதல் 1978 வரை அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனி செயலராகவும் பணியாற்றினார்.

லக்னோவில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வாரிய உறுப்பினராக இருந்தார். கொல்கத்தா ஐஐஎம் நிறுவனத்தில் அரசு நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தார். 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக உரையாற்றினார்.

2015-ம் ஆண்டு இந்திய ஜனாதிபதி முன்னிலையில் பீஹாரின் ஆளுநராக பொறுப்பேற்றார். தற்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட மீரா குமாரை விட 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கிறார்.