ஷிவாலி பிரகாஷின் கேக்குகள் உங்களின் நாவில் எச்சில் ஊறவைக்கும்!

0

'பாப்ஸ் கிட்சனின்' சிறப்பு சாக்கோ லாவா பிசா. பனோஃபீ பை, சிகப்பு வெல்வெட் கேக், டெத் பை சாக்லேட் கேக் மற்றும் ப்ளூபெர்ரி சீஸ் கேக் இவை அனைத்தும் இங்குள்ள சிறந்த உணவுகள். பாப்’ஸ் கிச்சனை (Pop’z Kitchen) நடத்தும் ஷிவாலி பிரகாஷ், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான உணவை அன்போடும் தேவையான நல்ல பொருட்களைக் கொண்டும் தயாரிக்கிறார்.

பெங்களூரைச் சேர்ந்த இந்த ஹோம் பேக்கர், பாப்ஸ் கிட்சனை 2012 மே மாதத்தில் தொடங்கினார். அவருடைய மிகப்பெரிய முன்உதாரணம் அவரது தந்தை, அவர் சானிடரி விற்பனை செய்யும் சில்லறை கடையை பெங்களூருவின் புனித மதார்க்ஸ் சாலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். அவருடைய தந்தை 2012ல் காலமானதையடுத்து சிறிது காலம் அவர் தன் பணிக்கு இடைவெளி விட்டார், அதன் பின்னர் வாழ்க்கைக்கான தேடலில் தன்னுடைய நேரத்தை செலவிட்டார். "இதன் காரணமாகவே நான் என்னுடைய பணியை மாற்றும் முடிவுக்கு வந்தேன், என்னுடைய மிகப்பெரிய விசிரியான என் தந்தையின் நினைவாக சொந்தமாக ஒரு நிறுவனத்தை நிறுவ ஆசைப்பட்டேன். அப்படி தோன்றியது தான் 'பாப்‘ஸ் கிச்சன்' என்று தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்" அவர்.

தொடக்கம்

ஷிவாலி 2010ம் ஆண்டு கிரிஸ்ட் கல்லூரியில் பட்டம் பெற்றார், அதன் பின்னர் அசென்சரில் இரண்டு ஆண்டுகள் விற்பனை மற்றும் தொடர்புக் குழுவில் பணியாற்றினார். “நான் பேக்கிங்கை தீவிரமாக எடுத்து சொந்தத் தொழிலாக செய்வேன் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. பேக்கிங்கை (baking) நான் ஒரு தொழிலாக செய்யத் தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிறது, எனக்கு எப்போதுமே உணவு மீது தனி பிரியம் உண்டு.”

ஷிவாலி பேக்கிங்கை பல்வேறு தருணங்களில் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக மகிழ்வோடு செய்யத் துவங்கியதாக கூறுகிறார், “நான் இதுவரை செய்த முயற்சிகளிலேயே எனக்கு மிகப்பெரிய வெற்றியை இது தேடிக் கொடுத்தது என்பது எனக்கு ஆச்சரியமான விஷயம்.”

விவேக் ஓபராய்க்கு பிறந்த பெண் குழந்தைக்காக ஷிவாலி தயாரித்த கேக்கே அவருடைய பேக்கிங் தொழிலின் ஹைலைட்டான விஷயம். “அதோடு தான் பாப்’ஸ் கிச்சன் கப்கேக்குளை ரித்திக் ரோஷனுக்கு டெலிவரி செய்துள்ளது, என்று தன் பட்டியல் நீள்வதாக கூறுகிறார் ஷிவாலி.”

பெங்களூரு பெண்

ஷிவாலி பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர், அவர் கடந்த 27 ஆண்டுகளாக நகரத்தில் நிகழ்ந்து வரும் மாற்றத்தை பார்த்துள்ளார். “நான் கூறுவதை கேட்பதற்கு சிறுபிள்ளைத்தனமாக இருக்கும், ஆனால் என் குழந்தைப்பருவம் சிறந்தது. நான் என்னுடைய பள்ளிப் படிப்பை பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். படிப்பை தாண்டி என் பெற்றோர் என்னை குரல் பயிற்சி பள்ளியிலும், பியானோ மற்றும் கித்தார் வகுப்புகளிலும் சேர்த்தனர். என் குழந்தைப்பருவம் முதலே நான் ஒரு தடகள வீராங்கணை.”

ஷிவாலியை பொருத்த வரை பெங்களூரு புதிய முயற்சிகளுக்கும், பயிற்சிகளுக்குமான ஒரு மையம் என்கிறார், அதிலும் குறிப்பாக சமையல் முயற்சிகளை செய்துபார்ப்பதில் தனித்துவம் வாய்ந்தது.

“நகரத்தில் இருக்கும் மக்கள் தொகையில் அதிக அளவில் இருக்கும் இளைஞர்களுக்கு ஏராளமான திறனும், தனித்தன்மையான வியாபார எண்ணங்களும் உள்ளன. அவர்களின் கற்பனைக்கு ஏற்றவாறு, இளைஞர்கள் தொழில் முனைவராவதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். சிறிய அளவிலான வர்த்தகமாக இருந்தாலும் நல்ல திறனுடையதாக இருந்தால் அவை எளிதில் வியாபார உத்தியை அடைந்து விடும் என்பதோடு, இன்றைய அளவில் அவற்றிற்கு எளிதில் முதலீட்டாளர்கள் கிடைத்துவிடுவர். நான் இதை உறுதியாக சொல்வேன், ஏனெனில் நான் இதோடு தொடர்புடையவள். நான் வீட்டில் இருந்தே பேக்கிங் செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடிவு செய்தேன். ஏனெனில் அப்போது தான் சந்தை நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும் என்பதோடு என்னுடைய பொருட்களை மக்கள் ஏற்றுக் கொண்டு அதற்கு வரவேற்பு அளிக்கின்றனரா என்பதையும் அறிய விரும்பினேன்.”

ஷிவாலி தற்போது ஒரு விற்பனை அங்காடியை அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார்.

பாப்’ஸ் கிச்சன் Pop'z kitchen

பாப்’ஸ் கிச்சன் டெசர்ட்டுகள் மற்றும் சேவரிகளில் சிறப்பு வாய்ந்தது. அவர்கள் பிரம்மாண்ட கேக்குகள்/ பிறந்தநாளுக்கான கப்கேக்குகள், ஆண்டுவிழாக்கள், குழந்தைபிறப்புகள், நிச்சயதார்த்தம், திருமணங்கள் மற்றும் இதர சில நிகழ்வுகள் என அனைத்துக்கும் கேக் தயாரிக்கின்றனர். ஷிவாலி தன்னுடைய படைப்புகளை முகநூல் பக்கத்தில் காட்சிக்கு வைக்கிறார், அவருடைய இணையதள பக்கம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. முகநூலை அவர் தனது அடிப்படை விற்பனைக்காக பயன்படுத்திக் கொள்கிறார். மற்றபடி, வாய்வழி பிரச்சாரமாகவே அவருடைய பொருட்களுக்கு விளம்பரம் கிடைத்துவிட்டது. என்னுடைய பேக்கிங்கில் பிராண்ட் பெயர் தெரியும் படியாக பொருட்களின் மீது காட்சிப்படுத்துவேன் என்கிறார் அவர். அவர் வாரத்திற்கு 50 கேக்குகளை பேக் செய்கிறார். அவர் பணம் செலுத்துவதற்கு கேஷ் ஆன் டெலிவரி முறையை வழங்குகிறார், அதே போன்று ஒரு ஆட்டோ டெலிவரி ஆள் தினசரி கேக்குகளை டெலிவரி செய்கிறார்.

“முப்பரிமாண பிரம்மாண்ட கேக்குகளை நாங்கள் காரில் எடுத்து சென்று டெலிவரி செய்ய ஒரு நபரை நியமித்துள்ளோம். இதன் மூலம் கேக்கிற்கு கொடுக்கப்படும் அலங்காரங்கள் சிதைவதை தடுத்துவிடலாம்” என்று சொல்கிறார் அவர்.

ஷிவாலியை பொருத்த வரை தான் கையாளும் தரம் மட்டுமே வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான ரகசியம் என்கிறார்.

அவர் கேக்குகள் அனைத்தையும் தானே பேக் செய்கிறார், உதவிக்கு மட்டும் ஒரு ஆளை வைத்துக்கொள்கிறார்.

புதுமை

ஜுனி டானின் படைப்புகளையே தன்னுடைய கேக்குகளுக்கு முன்மாதிரியாக கொண்டு கேக்குகளை தயாரித்து வருகிறார் ஷிவாலி. அவர் புதிய முயற்சிகளையும், புதிய கருத்துகளையும் செய்து பார்க்க விரும்புவார், இதனாலேயே அவர் போட்டிகளுக்கு அப்பாற்பட்டு திகழ்கிறார்.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்தவற்றை அளிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவள் நான், அதே போன்று நான் தரத்தில் சமரசம் செய்து கொள்வதே இல்லை. கேக் தயாரிப்பதற்கான சில பொருட்கள் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, எங்களுடைய வாடிக்கையாளர்கள் இன்னும் அதிகம் தேவை என்று நினைக்கும் வகையில் உணவை பரிமாற வேண்டும் என்பதே எங்களது ஆத்மார்த்த குறிக்கோள்.

கட்டுரை: தன்வி துபே | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்