ஒரு பட்டயக் கணக்காளரின் காலணி மீதான காதலால் உருவான 'கனாபிஸ்'

0

குழந்தையாக இருக்கும்பொழுது நாம் காணும் கனவுகள் அனைத்தும், பிற்காலத்தில் நனவாகும் என்று கூற இயலாது. ஆனால் தேவிகா ஸ்ரீமல் சற்று மாறுபட்டவர். அவருடைய சிறுவயதிலேயே தன்னுடைய சொந்த நிறுவனத்தை, தான் நடத்தப் போவதை உணர்ந்திருந்தார். 7 வயதில் அவர் எழுதிய கட்டுரையில், சங்கிலித் தொடர் கடைகளாக "தேவிகா & ஸ்பென்சர்" என்ற நிறுவனத்தை துவங்குவேன் என்று எழுதினார்.

Devika
Devika

தனது 20வது வயதில், அமெரிக்கா சென்று வார்விக் பல்கலைகழகத்தில் பட்டம் பயின்று, சில காலம் அங்கு வேலையும் செய்து விட்டு, சென்ற ஆண்டு இந்தியா திரும்பினார் தேவிகா. இங்கு தோல் அல்லது மற்ற பொருட்களால் செய்யப்பட்ட ஸ்டைலான காலணிகளை தேடினார். அப்போதுதான், சர்வதேச நிறுவனங்கள் தோலினால் செய்யப்பட்ட காலணிகளை பிரதானமாக விற்பதையும், தோல் அல்லாத பொருட்களை கொண்டு செய்யப்படும் காலணிகள் மற்ற சில்லறை வணிகர்களாலும் விற்கப்படுவதை உணர்ந்தார்.

"அமெரிக்காவில் இருந்து, சற்று வித்தியாசமாக இருக்கும் இரண்டு ஜோடி காலணிகளை வாங்கி வந்தேன். அவற்றை டெல்லியில், கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் போது, உபயோகிக்க நேர்ந்தது. அப்போது தான், அவற்றில் காற்று போய்வரும் வண்ணம் முன்னும் பின்னும் துளைகளோ, திறப்புகளோ இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். மேலும் எனது காலணிகளில், குதிகால் பகுதி உயரமாகவும், கேன்வாஸ் செய்யப்பட்டதாகவும் இருப்பது எனக்கு பிடிக்கும். இவை அனைத்தும் என் மனதின் எண்ண ஓட்டத்தில் இருந்தது. அதன் விளைவாக 'கனாபிஸ்' பிறந்து, எனது தொழில் முனையும் கனவை நனவாக்கியது " என்கிறார் தேவிகா.

2015 ஏப்ரல் மாதம் துவங்கப்பட்ட 'கனாபிஸ்' நிறுவனம், தோல் அல்லாத பொருட்களால் செய்யப்பட்டு கால்களுக்கு ஏற்றவாறும், அதே சமயம் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும் வண்ணம் காலணிகளை பெண்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கின்றது.

'கனாபிஸ்' kanabis பெயர்க்காரணம்

கான்வாஸ் துணி சணல் வகையை சார்ந்த ஒரு செடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அந்த செடியின் பெயர் கனாபிஸ். எனவே அந்த வார்த்தையை ஆங்கிலத்தில் சிறிது எழுத்துகளை மாற்றி அமைக்க, சட்டென்று மனதில் பதியும் பெயராக அது அமைந்தது.

கனாபிஸ் காலணிகள், புதுடெல்லியில் உள்ள ஹோட்டல் அசோகாவில் நடந்த "லண்டன் மார்கெட் கண்காட்சியில்" அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விற்பனை, மற்றும் விளம்பரம் வாய்வழி பிரச்சாரம் மூலமும், சமூக வலைத்தளங்களை நம்பியுமே இருக்கின்றது. மேலும், "கனாபிஸ் ஷூ பார்ட்டீஸ்" என்ற பெயரில் பெண்கள் ஒன்று சேர்ந்து, பேசி மகிழ்ந்து, பின்னர், கனாபிஸ் காலணிகளை முயற்சித்து பார்த்து, தங்களுக்கு பிடித்தவற்றை வாங்கி செல்லும் நிகழ்சிகளையும் நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மேலும் சில நகரங்களில் அதை நடத்த தேவிகா திட்டமிட்டுள்ளார்.

கணக்காளரில் இருந்து காலணிகளுக்கு...

யுகே யில், பட்டய கணக்காளராக பணியாற்றிய ஒருவர், எப்படி காலணிகள் நிறுவனத்தை நிறுவினார்? காலணிகளை வடிவமைக்கும் அன்ஷூல் தியாகியை சந்திக்கும் வரை தேவிகா தேடாத இடமில்லை, பார்க்காத நபர் இல்லை. ஆனால் அவரை சந்தித்தப் பின்பு, அவரிடம் தனது சந்தேகங்களை முழுதும் பேசி தீர்த்து, தெளிவான ஒரு முடிவிற்கு வந்தார். பின்னர் 15 லட்சம் முதலீட்டுடன் நிறுவனம் துவங்கப்பட்டது. தற்போது அன்ஷூல், கனாபிஸ் நிறுவனத்தில் கிரியேட்டிவ் துறையின் தலைவராக உள்ளார்.

பொருட்களை வடிவமைத்தல், அதற்கான மாதிரிகளை தயாரித்தல், பின்னர் அவற்றை பெருமளவில் தயாரித்து கொள்முதல் செய்தல், விற்பனை வழிகளை கண்டறிதல், வாடிக்கையாளர்களுக்கு, அவற்றை கொண்டு சேர்த்தல் என அனைத்து வேலைகளையும் துவக்கத்தில் இருந்து செய்ய வேண்டி இருந்தது. அவ்வேலைகளை வெற்றிகரமாக முடிப்பதே மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

Team kanabis
Team kanabis

7 வருடங்களாக கார்ப்பரேட் நிறுவனத்தில் உழைத்தபோது தனக்கு கிடைக்காத அனுபவத்தை, தனது முதல் வருட தொழில் முனைவு கற்றுக்கொடுத்ததாக தேவிகா ஒப்புக்கொள்கிறார். வடிவமைப்பு துவங்கி, விற்பனை வரை அவரது ஒவ்வொரு நாளும் தற்போது ஒரு அனுபவத்தோடு முடிகின்றது.

ஸ்டைல் என்ற கோட்பாடில் கனாபிஸ் எங்கு நிற்கின்றது என்று கேட்டபோது ?

வேடிக்கையானதாக, சாதாரணமானதாக மற்றும் அதிக தரமுள்ளதாக எங்கள் பொருளை நாங்கள் அடையாளப் படுத்துகிறோம். ஆனால் வாடிக்கையாளர் திருப்தி எங்களுக்கு மிகவும் முக்கியம். பொருளை பற்றிய சந்தேகமோ அல்லது கருத்தோ, வாடிக்கையாளருக்கு உடனடியாக பதிலளிக்க அவர்களுடன் எப்போதும் இணைப்பில் இருக்கிறோம்.

விலை தரம் மற்றும் இதர விஷயங்கள்

தற்போது கனாபிஸ் காலணிகள் 1700 முதல் 2800 வரை விலை வைத்து விற்கப்படுகின்றன. மேலும் சர்வதேச நிறுவனங்களின் காலணிகளை காட்டிலும், தங்கள் நிறுவனத்தின் காலணிகள் அதிகத் தரத்துடன் இருப்பதாக தேவிகா கூறுகிறார். அவர்கள் காலணிகள் தற்போது அவர்கள் வலைதளம் மூலமும், சென்னை, மும்பை, புனே, ஜெய்ப்பூர் மற்றும் டெல்லியில் அவர்களின் கிடங்கிலும் அவற்றை வாங்க இயலும்.

எங்கள் காலணிகளை, நொய்டாவில் உள்ள, புட்வேர் டிசைன் & டேவலப்மெண்ட் இன்ஸ்ட்டியூட்டில் கொடுத்து, தர பரிசோதனைக்கு உட்படுத்துகின்றோம். எங்கள் காலணிகளின் உட்புறங்கள் சிராய்ப்பு ஏற்படுத்தாது, வளையும் தன்மை உடையதாக இருக்கும் மேலும் வழுக்கி விடாது என சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் தயாரிப்பாளர்கள், தரப் பரிசோதனை செய்கின்றனர், மேலும் வெளியில் இருந்து பரிசோதனை செய்யவும் சில நேரங்களில் நாங்கள் ஆட்களை அமர்த்துகின்றோம். அனைத்தும் சரி என்று முடிவு எட்டிய பின்னரே, உற்பத்தி செய்யப்படுகின்றது என்கிறார் தேவிகா.

ஆரம்பித்த 7 மாதங்களுக்குள் 1500 ஜோடி காலணிகள் விற்பனையாகி உள்ளன. அது ஒரு மாதத்திற்கு 200 காலணிகள் என்ற கணக்காகும். மேலும் சமுக வலைதளங்கள் மூலமும் விளம்பரங்கள் மூலமும் நிறுவனத்திற்கு கிடைக்கும் வரவேற்பும் தற்போது நல்ல நிலையில் உள்ளது. எனவே நிஹாரிக்கா சிங்களா, ஷில்பா டாங்கி, அக்ஷய் ஸ்ரீமல், தேவிகா அன்ஷூல் என 5 பேர் குழு கொண்ட இந்த தொழில்முனைவு தற்போது மகிழ்ச்சியாக செல்கின்றது.

தூரம் அதிகம் ஆனால், கடக்க இயலும்

தற்போது தான் தனது தொழில் முனைவு துவங்கியுள்ளது. இன்னும் தான் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்பதை தேவிகா அறிந்துள்ளார். வார இறுதிகளில் கூட விடுமுறை இன்றி நாள் முழுதும் உழைப்பதுதான் வழி என்று ஆனாலும், அவரை மேலும் ஊக்குவிப்பது, வாடிக்கையாளர் கொடுக்கும் பாராட்டுக்களே. "ஏற்றமும் இறக்கமும் அனைத்து தொழிலிலும் உள்ளது. அவை அனுபவத்தின் பகுதிகளே" என்கிறார் அவர்.

எதிர்காலத் திட்டங்களை பற்றி கேட்டபோது, தற்போது ஏற்றுமதியை பற்றி நாங்கள் சிந்திக்க வில்லை ஆனால் அந்த ஆசை மனதின் ஒரு மூலையில் உள்ளது. துவங்கிய 7 மாதத்தில் எங்கள் விற்பனை மாதா மாதம் அதிகரித்துள்ளது. எனவே நீடித்து நிற்கும் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு பணியாற்றி வருகின்றோம் என பதில் அளிக்கின்றார் தேவிகா.

இணையதள முகவரி: kanabis

ஆக்கம் : அபரஜித்தா சௌத்ரி | தமிழில் : கெளதம் s/o தவமணி