தடகள வீரர்கள் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்!

0

25 வயதான ரஜத் ஷர்மாவிற்கு கிரிக்கெட்தான் உலகம். சண்டிகரைச் சேர்ந்த இவர் 2011-ம் ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் பங்கேற்று ஐபிஎல் போட்டியில் நுழைந்தார். இவர் பந்து வீச்சாளராக தேர்வானார். ஒரு நாள் இவருக்கு காயமேற்பட்டது. கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவர் பழைய நிலைக்குத் திரும்ப சுமார் மூன்றாண்டுகள் அனது. ஆனால் கிரிக்கெட்டை தனது வாழ்க்கைப் பாதையாகத் தொடர முடியாமல் போனது.

ரஜத் மன அழுத்தத்திற்கு ஆளானார். 2014-ம் ஆண்டு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். ஆனால் அந்த அனுபவம் சிறப்பாக அமையவில்லை. இறுதியாக தனது நண்பர்களுடன் இணைந்து வணிக முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவர் ஏமாற்றப்பட்டார். அவர் கூறுகையில்,

"நான் தொடர்ந்து எதுவும் செய்ய இயலாத நிலையை எட்டினேன். பணி இல்லை. பட்டம் இல்லை. நண்பர்களும் இல்லை..."

ரஜத் உளவியல் பட்டதாரி. அத்துடன் சான்றிதழ் பெற்ற யோகா பயிற்சியாளர். எனவே பட்டப்படிப்பையும் ஆர்வத்தையும் ஒன்றிணைத்தார். Mind Fuel துவங்கினார். இது தடகள வீரர்கள் மன உறுதி பெறவும் தங்கள் அணுகுமுறையை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும் பகுதியாகும். யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,

என்னுடைய அறிவையும் அனுபவத்தையும் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிற தீராத ஆசை என்னுள் இருந்தது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆலோசனைகளுக்காக பிறரை சார்ந்திராமல் தங்களது மனம், உணர்ச்சி, ஆரோக்கியம், வாழ்க்கை போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் திட்டத்தை உருவாக்கினேன். ஏனெனில் உணர்வு ரீதியான சார்பு அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும் என்பதை நான் அனுபவித்துள்ளேன்,” என்றார்.

யோகா மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் ஒன்றிணைக்கப்பட்ட இந்த வென்சரில் மன அழுத்தத்தினாலும் பணி மற்றும் குடும்ப வாழ்க்கை சார்ந்த பதட்டத்தாலும் பாதிக்கப்பட்ட பலர் தஞ்சமடைந்துள்ளனர். துண்டு பிரசுரங்களை விநியோகிக்க 1,200 ரூபாயுடன் துவங்கப்பட்ட நிறுவனம் இன்று ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் லாபம் ஈட்டுகிறது.

நான் பயிற்சியளிக்கும் நபர்களின் எண்ணிக்கையைச் சார்ந்து என் லாபம் மாறுபடும். சராசரியாக என்னுடைய பயிற்சி திட்டத்தின் வாயிலாக ஒரு மாதத்திற்கு சுமார் 50,000 ரூபாய் ஈட்டுகிறேன். இது புதிய முயற்சி என்பதால் வாடிக்கையாளர் எண்ணிக்கையைச் சார்ந்தே என்னுடைய லாபம் இருக்கும். இந்தத் திட்டம் வெற்றியடையும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. எனக்கு எப்போதும் பணம் இரண்டாம் பட்சம்தான். 11 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு எனக்குத் திருப்தி கிடைத்துள்ளது. மக்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ முடிவதைப் பார்க்கமுடிகிறது. இது விலைமதிப்பற்றதாகும்,” என்றார்.

அறிவியல் மற்றும் பண்டைய அறிவின் கலவையாக Mind Fuel திட்டங்கள் இருக்கும். இந்தத் திட்டத்தில் கோட்பாடு, நடைமுறை கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் உளவியல் ரீதியாகவும் யோகாவின் கண்ணோட்டம் சார்ந்தும் அமைந்திருக்கும். பயிற்சி எடுத்துக்கொள்பவர்களுக்கு எதைச் செய்யவேண்டும் என்பதையும் ஏன் செய்யவேண்டும் என்பதையும் கோட்பாடுகள் எடுத்துரைக்கும். அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதை நடைமுறை நடவடிக்கைகள் கற்றுக்கொடுக்கும் என்றார். இலவச சோதனை அமர்வுகளுடன் துவங்கப்பட்டு அடுத்தடுத்த கட்ட திட்டங்களில் மக்கள் இணைந்துகொண்டனர் என்கிறார் ரஜத்.

அதிக மக்களைச் சென்றடைய இரண்டு புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

கட்டுரை : THINK CHANGE INDIA