தீபாவளி, ஹோலிக்கு விடுமுறை அளிக்க பாகிஸ்தான் முடிவு!

0

பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக தீபாவளி, ஹோலி மற்றும் ஈஸ்டர் பண்டிகைகளின் போது பொது விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதற்கான தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அன்மையில் நிறைவேற்றப்பட்டது.

டாக்டர்.ரமேஷ்குமார் வான்க்வானி (Dr. Ramesh Kumar Vankwani) எனும் எம்பி கொண்டு வந்த, சிறும்பான்மையினருக்கான முக்கிய பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அளிக்க வழி செய்யும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியதாக ஹபிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.

இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தி டிரியியூன் நாளிதழ் தெரிவிக்கிறது. சிந்த் மாகாணத்தின் தர்பார்கர் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் பிஎன்.எ.-என் எம்.என்.ஏ சார்பில் தெர்ந்தெடுக்கப்பட்ட ரமேஷ் குமார் இந்த தீர்மானத்தை கொண்டு வந்து “ஹோலி, தீபாவளி மற்றும் ஈஸ்டர் ஆகியற்றுக்கு விடுமுறை அளிக்க அரசு முன் வர வேண்டும் என இந்த அவை கருதுகிறது” என குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் இந்து கவுன்சில் புரவலர் மற்றும் தலைவராகவும் இருக்கும் ரமேஷ் குமார், இந்தியாவில் மொஹரம் மற்றும் அமெரிக்காவின் ஈத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படுவது போல பாகிஸ்தானில் இது போன்ற விடுமுறைகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மத விவகாரங்களுக்கான இணை அமைச்சர் பிர் அமினுல் ஹஸ்னத் ஷா, ஏற்கனவே உள்துறை அமைச்சகம், அரசு அமைப்புகள், துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சிறும்பான்மையினரின் மத விழாக்களுக்கு விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் பர்வேஸ் ரஷீத் பாகிஸ்தானில் மற்ற நாடுகளை விட அதிக அளவில் விடுமுறைகள் இருப்பதாக தெரிவித்தாலும் இந்த தீர்மானத்தை எதிர்க்கவில்லை. பாகிஸ்தான் மக்கள் மற்றவர்களின் மகிழ்ச்சி மற்றும் சோகங்களை சமமாக பகிர்ந்து கொள்வதாகவும், மதத்தின் அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லை என்றும் அவர் கூறினார். ” குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திரம் இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

மத விவகாரங்களுக்கான அமைச்சர் சர்தார் முகமது யூசுப் மற்றும் உள்துறை அமைச்சருக்கான நாடாளுமன்ற செயலாளர் மர்யும் அவுரங்கசீப் ஆகியோரும் இந்த தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்று டான் நாளிதழ் தெரிவிக்கிறது.

தமிழில்: சைபர் சிம்மன்