சென்னை முழுவதும் வண்ணங்கள் மற்றும் ப்ரஷுடன் வலம் வந்த திவ்யாவின் கதை!

பொது இடங்களை அழகாக மாற்றுவதோடு இளைஞர்களின் வாழ்க்கையில் கலை வாயிலாக தாக்கத்தை ஏற்படுத்துகிறார் திவ்யா ராமச்சந்திரன் 

0

கலை மற்றும் கலைப்பொருட்களை விரும்புவோருக்கு சென்னை மிகச்சரியான நகரமாகும். இது கர்நாடக சங்கீதத்திற்கும் வண்ணமயமான காஞ்சிபுரம் புடவைக்கும் பெயர் போன நகரமாகும். நவீன ஓவியத்தை ரசிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். பல ஓவியர்கள் அழகான ஓவியங்களைப் பொதுவெளியில் படைப்பதைப் பார்க்கமுடிவதே இதற்குச் சான்றாகும். சென்னையைச் சேர்ந்த ஓவியரான திவ்யா ராமச்சந்திரனும் அவ்வாறான படைப்பாளிகளில் முன்னோடியாகத் திகழும் ஒருவர்.


திவ்யா 2012-ம் ஆண்டு மிலன்ஸ் டோமஸ் அகாடமியில் டிசைனில் முதுகலைப் படிப்பை முடித்தார். பெங்களூரு திரும்பியதும் சிருஷ்டி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்ட், டிசைன் அண்ட் டெக்னாலஜியில் தனது ஆசிரியர் பணி வாழ்க்கையைத் துவங்கினார்.

அவர் நினைவுகூறுகையில்,

கற்றுக்கொடுப்பது எனக்குள் ஒரு சூறாவளியாகவே மாறியது. எண்ணங்கள், ஆற்றல், உந்துதல் ஆகியவை அடங்கிய சுழற்காற்று எனக்குப் பிடித்திருந்தது. அப்போதிருந்து கல்வித் துறை என்னை அதிகம் ஈர்த்தது.

சமூக நலனில் அக்கறை

திவ்யா ஒரு ப்ராடக்ட் டிசைன் ஆசிரியராக தனது மாணவர்கள் தங்களது யோசனைகளை உறுதியான மாதிரிகளாக உருவாக்க ஊக்குவித்தார். அவர்களிடம், “மனதின் பகுதிகளில் இருப்பதை இப்போது இந்த இடத்தில் ஒரு வடிவம் கொடுத்து கொண்டு வந்து சேர்க்கவேண்டும்.” என்பார்.

29 வயதான திவ்யா மாணவர்கள் சிறப்பாக டிசைன் செய்யவும் சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்தவும் விரும்பினார். அதற்கான முதல் அடியை எடுத்துவைக்கவேண்டும் என்பதை உணர்ந்தார். அவர் தனக்குள் சில கேள்விகளை எழுப்பிக்கொண்டார்.

என்னைச் சுற்றி நிலவும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் நான் பங்களிக்கிறேனா?

சமூகத்திற்கு ஏதேனும் நலன் அளிக்கும் விதத்தில் ஏதாவது செய்கிறேனா?

என்னுடைய டிசைன்கள் மக்களை மகிழ்விப்பதைத் தாண்டி ஏதேனும் செய்கிறதா?

பதில் ’இல்லை’ என்பதுதான்.

எனவே மாற்றத்தை ஏற்படுத்த அவரால் என்ன செய்ய இயலும் என்பதை ஆராய்வதற்காக நாட்டைச் சுற்றிலும் பயணம் மேற்கொண்டார்.

அவரது வழிகாட்டிகள் சிலருடன் உரையாடியதில் ஓவியத்தை குழந்தைகளிடையே எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது குறித்த ஒரு சிறப்பான கண்ணோட்டத்தை வழங்கக்கூடிய ஒரு சில கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்தார். ராய்ப்பூரைச் சேர்ந்த ப்ரயாஸ் ரெசிடென்ஷியல் ஸ்கூல், குஜராத்தின் கோதன் பகுதியைச் சேர்ந்த சம்வேதனா சாரிடபிள் ட்ரஸ்ட், ஒடிசாவின் கன்கியா கிராமத்தைச் சேர்ந்த க்ராம் விகாஸ் ரெசிடென்ஷியல் ஸ்கூல், கர்நாடகாவைச் சேர்ந்த கல்கேரி சங்கீத் வித்யாலயா, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாதஷாலா போன்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களைச் சந்தித்து, கற்றுக்கொடுத்து தானும் கற்றுக்கொண்டார் திவ்யா.


இந்தப் பள்ளிகளில் கலைக்கான இடமும் சிறப்பான வசதிகளும் இருந்தது. முக்கியமாக மாணவர்கள் கற்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர். இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் நலிந்த பின்னணியைக் கொண்டவர்களாகவும் கல்வியை ஒரு வரமாக பார்ப்பவர்களாக இருந்தனர். நகர்ப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் ஒப்பிடுகையில் இது முற்றிலும் மாறுபட்ட நிலை என்பதை உணர்ந்தார்.

”அவர்களுக்காக ‘க்ரியேடிவ் திங்கிங்’ கோர்ஸ் ஒன்றை முடித்தேன். இன்னும் அதிகம் தெரிந்துகொண்டேன். ஒரு குழந்தை தனது படைப்பில் எந்தளவிற்கு படைப்புத்திறனை வெளிப்படுத்தும் என்றோ மாறுபட்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் என்றோ எனக்குத் தெரியாது. அதனால் ஒரு வகுப்பை எடுப்பதற்கு முன்பு எந்தவித முன்முடிவும் எடுக்கமாட்டேன். ஆனால் இந்தக் குழந்தைகள் அவர்களது கிராமத்தை விட்டு வெளியே செல்லவில்லையெனினும் அவர்களது எண்ண ஓட்டங்கள் நம்பமுடியாத அளவிற்கு எழுச்சியூட்டுகிறது.” என்றார் திவ்யா.

பெற்றுக்கொண்டால் மட்டுமே கொடுக்க முடியும்

பயணம் முடிந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு திவ்யா க்ராம் விகாஸ் சென்று குழந்தைகளுடன் இணைந்து சுவரோவியங்களைத் தீட்டினார். நலிந்த குழந்தைகளுக்கான பள்ளிகளில் கலைகளுக்கென தனிப்பட்ட பகுதி ஒதுக்கப்படுகிறது. NID, Srishti போன்றவற்றைச் சேர்ந்த வடிவமைப்பாளர்கள் சில இன்குபேஷன் யூனிட்களைத் துவங்குகின்றனர். ஆனால் நகரப்பகுதிகளிலுள்ள பெரும்பாலான CBSE மற்றும் ICSE பள்ளிகளில் பாடதிட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. அவற்றில் கலை அல்லது டிசைன் இடம்பெறுவதில்லை. குறிப்பாக ஆரம்ப வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இது அவசியம். ஏனெனில் படைப்புத்திறனும் சுதந்திரமாக சிந்திக்கும் திறனும் உச்சத்தில் இருக்கும் பருவத்தை சேர்ந்தவர்கள் இந்தக் குழந்தைகள்.

எனவே கிராமப்புற பள்ளிகள் மூலம் அவர் கற்றதை மெல்ல நகர்புற அமைப்புகளில் புகுத்தத் துவங்கினார் திவ்யா. அதே சமயம் கிராமப்புறங்களிலுள்ள இன்குபேஷன் யூனிட்களிலும் தொடர்ந்து பணியாற்றி அங்குள்ள நலிந்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டினார்.

மேலும் பெங்களூருவிலுள்ள குழந்தைகளுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த கலை சார்ந்த ப்ராஜெக்ட்களிலும் ஈடுபடத் துவங்கினார். இதனால் கற்றலும் கேளிக்கையும் ஒன்று சேர்ந்தது. சில பணியிடங்களிலும் காஃபேக்களிலும் சுவரோவியங்களைத் தீட்ட அவரை அணுகினர். அத்தகைய ப்ராஜெக்டுகளை அவர் ஏற்றுக்கொண்டார். அவரது பணியைக் கண்டு ஒருவர் மற்றவருக்கு பரிந்துரைத்தனர். இதனால் பலர் தங்களது வீடுகளிலும் பணியிடங்களிலும் ஓவியங்களைத் தீட்டி அழகாக்க அவரை அணுகுகின்றனர்.


100 சுவரோவியங்கள்

2015-ம் ஆண்டில் திவ்யா 100-சுவர் ப்ராஜெக்ட்டை மேற்கொண்டார். ஏழு மாதங்களில் சென்னை மற்றும் பெங்களூருவில் 100 சுவரோவியங்களை தீட்டும் பணியில் ஈடுபட்டார். ஓவியம் மற்றும் கடல் இரண்டும் ஒன்று சேர்கையில் அதிக உற்சாகமளிக்கும் என்பதால் சுவரோவியங்களுக்கு கடற்கரைதான் அவருக்கு மிகவும் பிடித்தமான இடம். பல முறை திவ்யா ஊதியமின்றியே பணியை மேற்கொண்டார். அவர் கூறுகையில், “நீங்கள் உங்களது வீட்டிற்கோ, காஃபேவிற்கோ அல்லது பணியிடத்திற்கோ என்னை அழைத்தால் நாம் ஒரு டீ அருந்தியவாறே உந்துதலளிக்கும் விதமான உரையாடலில் ஈடுபட்டு உங்களது சுவரில் நாம் இணைந்து ஓவியம் தீட்டுவோம் என்று சொல்லுவேன்.”


கடந்த வருடம் திவ்யா சென்னைக்கு மாற்றலான பிறகு Teach for India –வைச் சேர்ந்தவர்கள் நகரில் அமைந்துள்ள தங்களது பள்ளிகளை மேம்படுத்த அவரை அணுகினார்கள். அவர் புன்னகையுடன்,

பாக்கெட்டில் பெயிண்ட் துப்பாக்கிகளுடன் சென்னை முழுவதும் ஒரு கௌகேர்ள் (Cowgirl) போலவே நான் வலம் வந்தேன்.

திவ்யா எட்டு பள்ளிகளில் பணியாற்றியுள்ளார். இது குழந்தைகளுக்கு கலை மற்றும் டிசைன் வொர்க்ஷாப்கள் நடத்த வாய்ப்பளித்து. குழந்தைகளிடையே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அஷ்விதா (Ashvita) மற்றும் அமதீஸ்ட் (Amethyst) ஆகிய ஆர்ட் காஃபேக்களுடன் சமீபத்தில் இணைந்துள்ளார் திவ்யா. இங்கு நாள் முழுவதும் ஆர்ட் வொர்க்ஷாப்கள் நடத்துகிறார். The Paint Box Collective மற்றும் Thuvakkam ஆகியோருடன் இணைந்து ஒத்த சிந்தனையுள்ளவர்களின் கூட்டுறவில் ரயில் நிலையம், பாலங்கள், மெட்ரோக்கள் போன்ற பொது இடங்களில் ஓவியம் தீட்டினார்


சிஷ்யா பள்ளி, லேடி ஆண்டாள், ஸ்ரீ முத்தா போன்ற நிறுவனங்களுக்கு கலைப் பிரிவில் பாடதிட்டத்தை உருவாக்க சமீபத்தில் ரெயின்போ ஃபிஷ் ஸ்டூடியோவுடன் பணிபுரியத் துவங்கியுள்ளார். தொடர்ந்து ஆர்ட் ப்ராஜெக்ட்களிலும் பங்கேற்கிறார். நலிந்த குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள Becoming I Foundation-உடன் இணைந்துள்ளார். இந்தியா முழுவதிலுமுள்ள இன்குபேஷன் மையங்களுடன் தொடர்புகொள்ள ஒரு வருடத்தில் ஒரு மாத காலத்தை செலவிட திட்டமிட்டுள்ளார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்