வீடுதேடி வரும் கார் பராமரிப்பு சேவை!

0

தினமும் காலை சுமன் ஹவ்லதரின் வீட்டு அழைப்பு மணி அடிக்கப்படும். கார் சுத்தம் செய்பவர் வந்து சாவியை வாங்கிக்கொண்டு காரை சுத்தம் செய்து செல்வார். ஆனால் அவர் சென்றபிறகு தன் காரை சோதித்து பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சரியாக சுத்தம் செய்யவில்லை என்று தோன்றியது. அப்போதுதான் கார் சுத்தம் செய்தல் துறையில் இருக்கக்கூடிய வாய்ப்பை கவனித்தார். நாம் ஏன் இதற்காகவே ஒரு நிறுவனம் துவங்கக்கூடாது என்று யோசித்தார் சுமன். அப்படி உருவானது தான் 'கார்ஜிப்பி' CarZippi. இந்நிறுவனம் ஆகஸ்ட் 2015ல் துவங்கப்பட்டது.

பெங்களூருவில் 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் பெங்களூருவை சுற்றியுள்ள 30கிமீ தொலைவில் உள்ள எல்லோருக்கும் வீடு தேடி வரும் கார் பராமரிப்பு செய்யும் சேவையை வழங்குகிறது. ஆரம்பகால முதலீடானது விநியோக சங்கிலி கட்டமைப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் தயாரிப்பு வளர்ச்சி போன்றவற்றுக்கு செலவிடப்பட்டது.

“ஆட்டோமொபைல் பராமரிப்பு துறை மற்றும் கார் பராமரிப்பு துறையில் இருக்கும் மிகப்பெரிய சவாலே கட்டணம், தர உத்தரவாதம், சேவை வழங்க எடுத்துக்கொள்ளும் நேரம் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது என்பதே. நாங்கள் கட்டணப் போட்டியில் ஈடுபட்டு சலுகைகள் கொடுப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை. வாடிக்கையாளர்கள் எங்களது சேவைகளை சந்தைக்கட்டணத்தில் பெறலாம். வண்டியின் அளவு, வண்டியின் நிலை மற்றும் என்ன மாதிரியான சேவையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை பொறுத்து சுத்தப்படுத்த எடுத்துக்கொள்ளும் நேரம் மாறுபடும். சராசரியாக 30லிருந்து 45 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்கிறோம். வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே வந்து சேவை வழங்குகிறோம்” என்கிறார் சுமன்.

இந்நிறுவனம் ஐஎஸ்ஓ 9001-2008 சான்றிதழ் பெற்றுள்ளது. கட்டண விகிதத்தை வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி வைத்திருக்கிறார்கள் என்பதால் வாடிக்கையாளர்கள் அந்த கட்டணத்தை பார்த்து தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ற சேவையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 450ரூபாயில் இருந்து 5450ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் தேதி, நேரம், இடம், கட்டண பேக்கேஜ் போன்றவற்றை தேர்ந்தெடுத்துவிட்டு கார் பராமரிப்பு சேவையை புக் செய்யலாம்.

பின்னணி

34 வயதாகும் சுமனுக்கு இது இரண்டாவது நிறுவனம். 2010ம் ஆண்டு ஃபொய்வே க்ளோபல் சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் தன் பணியைத் துவங்கினார். இது உள்ளடக்க மேம்பாடு மற்றும் ஐடி சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். 2014ம் ஆண்டு இந்நிறுவனம் 1 மில்லியன் டாலர் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் மேலாண்மை முடித்திருக்கும் இவர் ஒட்டுமொத்தமாக 14 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஐபிஎம், தாமஸ் ராய்ட்டர்ஸ் மற்றும் யுனிசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நுண்கலைத்துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இரண்டு கண்காட்சியில் பங்கேற்று ஷில்பா விசரத் மற்றும் ஷில்பா ரத்னா சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார். சிறுவர்களுக்கு இலவசமாக பெயிண்டிங் சொல்லிக்கொடுக்க்கிறார் என்பது பாராட்டத்தக்க செயல்.

வணிகம்

பி2பி மற்றும் பி2சி சேவை வழங்கும் விதத்தில் தான் 'கார்ஜிப்பி' நிறுவனம் வடிவமைக்கப்பட்டது. பின்னர் பி2சி சேவையிலேயே முழு கவனத்தையும் செலுத்தியிருக்கிறார்கள். தற்போது இந்நிறுவனத்தில் 20 பேர் பணியாற்றுகிறார்கள். கடந்த மூன்று மாதத்தில் மட்டுமே 600 வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாதம் 250லிருந்து 300 ஆர்டர்களை பெறுகிறார்கள். 5 சதவீத மார்ஜின் அடிப்படையில் இயங்குகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

தற்பொழுது பெங்களூரில் இயங்கும் இந்நிறுவனம் விரைவில் சென்னை, புனே மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் கால் பதிக்க திட்டமிட்டிருக்கிறது. கார்ஜிப்பி மொபைல் செயலியை இதுவரை 300 பேர் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த சந்தையின் 20லிருந்து 25 சதவீதத்தை கையகப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு இலக்காக 14 கோடி ரூபாயை நிர்ணயித்திருக்கிறார்கள்.

“தற்போதைய கார் பராமரிப்பு சேவை மூலம் மொத்த வருவாயில் 60 சதவீதத்தை எதிர்பார்த்திருக்கிறோம். பிறகு வேறு சேவைகள் மூலம் மீதமிருக்கும் 40 சதவீதத்தை ஈட்டுவோம். அது கார் பராமரிப்பு பொருட்கள், கார் பாகங்கள் மற்றும் துணை சேவைகளை உள்ளடக்கி இருக்கும்” என்கிறார் சுமன்.

யுவர்ஸ்டோரி ஆய்வு

இந்திய ஆட்டோத் துறை உலகின் மிகப்பெரிய ஒன்றாகும். 2014-15 ஆம் ஆண்டில் 23.37 மில்லியன் வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 8.68 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல்-அக்டோபர் 2015 இடைவெளியில், வர்த்தக வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே 14.25 மில்லியன் வாகனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஏப்ரல் - அக்டோபர் 2014ல் இது 13.83 ஆக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

பெருநகரங்களில் அதிக அளவில் விற்பனையாகும் சொகுசு கார்கள் காரணமாக கார் பராமரிப்பு துறை மிக வேகமாக வளர்ந்துவருகிறது. ஸ்பீட் கார் வாஷ், மை பிட்ஸ்டாப், மொபிகார்ஸ்பா மற்றும் செர்ரி.காம் போன்ற புதுநிறுவனங்கள் இந்தத் துறையில் இயங்குகின்றன. பெருநகரத்தை ஒப்பிடும்போது இரண்டாம்கட்ட மூன்றாம் கட்ட நகரங்களில் இந்த சேவை இன்னும் பரவலாக்கப்படவில்லை.

உலக அளவில் கார் பராமரிப்பு சந்தையானது 2017ம் ஆண்டு 27.4 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையதள முகவரி: Carzippi

ஆங்கிலத்தில் : APARAJITA CHOUDHURY | தமிழில் : Swara Vaithee