ராய்ப்பூர் விஞ்ஞானிகளின் தாதுச்சத்து அரிசிவகை தயாரிப்பு!

0

பழங்குடிகள் நிரம்பிய சட்டிஷ்கர் மாநிலத்தில் பெரும்பகுதி, குழந்தைகளின் உணவில் போதிய சத்துக்கள் இன்மையால் அடிக்கடி நோய்க்குள்ளாகின்றனர். அவர்கள் நோய்க்கு எதிராகப் போராடும் சத்து மிகுந்த அரிசி வகையை ராய்ப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சட்டிஷ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்களின் குழந்தைகள் ஏழு லட்சம் பேர் சத்துப் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். ராய்ப்பூரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உயர் தரமான தாமிரச் சத்து அடங்கிய புதிய அரிசிவகை இக்குழந்தைகளின் நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

சட்டிஷ்கர் ஜிங் ரைஸ் 1 எனப்படும் இந்தியாவின் முதன்முதலான தாமிர உயிர்சத்து நிரம்பிய இந்தப்புதிய நெல்விதையை மாநில நெல்வகை வெளியீட்டு கமிட்டி அதிகாரப்பூர்வமாக கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தி உள்ளது. வரக்கூடிய அறுவடைப் பருவத்தில் இந்த வகை நெல் உற்பத்தித் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ராய்ப்பூரைச் சேர்ந்த இந்திராகாந்தி வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் கிரிஸ் சந்தர் தலைமையிலான ஆய்வுக் குழு உயர்தாமிரச் சத்து நிரம்பிய இரண்டு அரிசி வகைகளைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டு ஒன்றைத் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.

”நாட்டில் வறுமையை அகற்றுவதற்காக வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் பசுமைப்புரட்சி துவங்கி விட்டது. அம்முயற்சியில் நாம் உற்பத்தியை அதிகரித்துள்ளோம். ஆனால் நமது வேளாண் உற்பத்தியின் தரம் (சத்து) உயரவில்லை” என்று கூறினார் சந்தல் பிடிஐயிடம்.

ஆரோக்கியம் குறித்து அமைப்புகளுடன் இணைந்து 2000 ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் நமது மத்தியஅரசு பெரும்பாலான மக்கள் சத்துப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகக் கண்டறிந்துள்ளது. காரணம் நமது நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் போதிய நுண் சத்துக்கள் இருப்பதில்லை. குறிப்பாக இரும்புச் சத்து, தாமிரச் சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் நம் உணவில் இருப்பதில்லை. ஆகவே முதன்மைத் தானியங்களான அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றில் சத்து மிகுந்த வகைகளை வெவ்வேறு மாநிலங்களில் உருவாக்குவது பற்றிய ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடிவெடுத்தது நமது மத்திய அரசு.

இத்திட்டத்தின் கீழ் நாட்டின் அரிசிக் கோப்பை என்று கருதப்படும் மாநிலமான சட்டிஷ்கரில் ’சத்து அரிசி ஆய்வுத் திட்டத்தை’ முடுக்கி விடுவதென்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறுகிறது பிடிஐ.

இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 2003, 2005 ஆண்டுகளில் 200 வகையான அரிசி வகையுடன் நுண்சத்துக்கள் அடங்கிய தானிய வகைகள் அடையாளம் காணப்பட்டன. ஆனால் அவற்றின் மகசூல் குறைவாகவே இருந்தது. அதனை அடுத்து இரண்டாம் கட்டமாக 2006 – 11 ஆண்டுகளில் மரபணு வளர்ச்சியின் மூலமாகக் கண்டறியப்பட்ட ஏழுவகையான உயர் விளைச்சல் தானியங்களில் உயர் தாமிரச் சத்தும் அதிகரிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு அரிசி ஆராய்ச்சி இயக்ககத்தை (விளைச்சல் மற்றும் சத்து ஆகிய இரண்டும்) அரிசி வகை ஆராய்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈடுபடுத்துவதென மத்திய அரசு முடிவு எடுத்தது.

இந்த ஆராய்ச்சியின் முடிவில் தரமான வகைகளாக நான்கு வகைகள் இறுதிப்படுத்தப்பட்டது. அவற்றில் இரண்டு சட்டிஷ்கரில் இருந்து பெறப்பட்டுள்ளன.

"தற்போது இந்தப் புதிய வகை அரிசிக்கான விதை 100 கிலோ நம்மிடம் உள்ளது. இதனை 10 ஏக்கரில் விளைவித்து விதை அளவை மேலும் பெருக்குவதென முடிவு செய்துள்ளோம். அவ்வாறு உற்பத்தி செய்யும் விதையை வரும் நவம்பர், டிசம்பரில் மாநிலமெங்கும் 5000 விவசாயிகளுக்கு வழங்க இருக்கிறோம். அவ்வாறு விதைக்கப்படும் நெல் அடுத்த அறுவடைப் பருவத்தில் இருந்து பலன் தரத் தொடங்கும்” என்று கூறினார் சந்தல்.

பட உதவி - Shutterstock

ஆங்கிலத்தில்: சௌரவ் ராய் | தமிழாக்கம் - போப்பு