காக்கிச்சட்டையில் ஒரு டீச்சர்: பாராட்டுக்களை அள்ளிய ஊத்துக்கோட்டை டிஎஸ்பி!

எஃப்ஐஆர், வழக்கு, குற்றவாளி, லாக்கப் என்று குற்றப்புலனாய்வு சார்ந்தே ஓடிக்கொண்டிருக்கும் காவல்துறையினர் மத்தியில் காவல்நிலையம் எதிரே அமைந்துள்ள 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து புத்துயிர் தந்த டிஎஸ்பி சந்திரதாசனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

0

மக்களுக்காக பணியாற்றுபவர்கள், பொதுமக்களின் நண்பன் என்றெல்லாம் காவல்துறையில் பணிபுரிபவர்களை அடையாளம் காட்டுவதுண்டு. ஆனால் அதே சமயம் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளில் அதிக விமர்சனத்திற்கு ஆளாக்கப்படுபவர்களும் அவர்களே. ஆட்சிகள் மாறினாலும் காக்கிகள் மீது மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறையாது ஏனெனில் அவர்கள் மக்களுக்கு பணியாற்றாமல் ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசுகிறார்கள் என்பது பலரின் மனச்சுமை. 

இது போன்ற குமுறல்களுக்கு காவல்துறையில் பணியாற்றும் சிலர் செய்யும் நல்ல விஷயங்கள் சமுதாயத்தில் காவல்துறை அதிகாரிகள் மீது மக்கள் வைத்திருக்கும் தவறான அபிப்ராயங்களுக்கு பாஸ் பட்டன் அழுத்திவிடும்.

ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன்
ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன்

போலீஸ் அதிகாரி என்றால் மக்கள் ஒரு வித பயத்தோடு பார்த்துவிட்டு சல்யூட் செய்வது வழக்கம். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கிராமத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசனை பாராட்டியே ஊர் மக்களுக்கு வாய்வலித்துவிட்டது. 

அப்படி என்ன செய்துவிட்டார் சந்திரதாசன்?

சென்னை – திருப்பதி சாலையில் அமைந்துள்ளது திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இந்த பேரூராட்சியின் காவல்நிலையம் எதிரே அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி 120 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1898ம் ஆண்டு 2 வகுப்பறை, 2 ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பள்ளி செயல்படத் தொடங்கியுள்ளது தற்போது ஒரு தலைமை ஆசிரியர், 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் என வளர்ச்சி கண்டுள்ளது.

தொடக்கப்பள்ளியாக இருந்த 1898ம் ஆண்டிலேயே இந்தப் பள்ளியில் ஊத்துக்கோட்டை, தாசுக்குப்பம், பால்ரெட்டி கண்டிகை, அனந்தேரி, போந்தவாக்கம் என சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் படிக்க வந்துள்ளனர். இந்தப் பகுதி மாணவர்களுக்கு கல்விக் கண் திறக்கும் விடிவெள்ளியாக திகழ்ந்த பள்ளி 1949ம் ஆண்டில் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 

தரம் உயர்த்தப்பட்டதால் வகுப்பறைகளின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. 1959ம் ஆண்டில் ஊத்துக்கோட்டையில் உள்ள திருவள்ளூர் சாலையில் புதிதாக உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டதால் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இந்தப் பள்ளி மீண்டும் தொடக்கப்பள்ளியாகவே மாற்றப்பட்டது.

120 ஆண்டுகளானாலும் இந்த பள்ளிக்கான மவுசு குறையவில்லை, இன்றும் இந்த அரசு தொடக்கப்பள்ளியில் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் படித்த பலர் காவல்துறை, வருவாய் துறை, பொதுப்பணித் துறை என்று அரசுப் பணிகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் புகழ்பெற்று விளங்குவதே பள்ளியின் பெயர் நீடித்து நிலைத்திருப்பதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

பள்ளியின் புகழ் பிரபலமடைந்த அளவிற்கு பள்ளியை பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு யாருக்கும் இல்லை. பள்ளி தொடங்குவதற்காக ஆரம்பத்தில் கட்டப்பட்ட பள்ளியின் முதல் கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக விரிசல் ஏற்பட்டு மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பழுதடைந்துள்ள பழமை வாய்ந்த கட்டிடத்தை சீரமைத்துத் தர வேண்டும் அல்லது இந்தக் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று பெற்றோரும், ஆசிரியர்களும் கல்வித் துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் பள்ளிக்கு எதிரே உள்ள காவல் நிலையத்திற்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன் வந்துள்ளார். சென்னை அயன்புரம் உதவி ஆணையராக இருந்தவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பியாக பணியமர்த்தப் பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஊத்துக்கோட்டை காவல்நிலையத்தில் டிஎஸ்பியாக பொறுப்பேற்றவர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். 

அப்போது காவல் நிலையம் எதிரே பட்டைத் தீட்டப்படாமல் இருந்த வைரக்கல் போல தோற்றம் அளிக்கும் பழுதடைந்திருந்த பள்ளியை பார்த்து பொதுமக்களிடம் விவரம் கேட்டுள்ளார். 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியை பார்வையிட்டதோடு, ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் செயல்பட்ட தொடக்கப்பள்ளி கட்டிடமும் சேதமுற்று மாணவர்கள் பயன்படுத்த முடியாமல் இருப்பதை அறிந்து கொண்டார். காவல்துறை அதிகாரிக்கு பள்ளி மீது ஏன் இந்த திடீர் அக்கறை என்று யோசிக்கலாம் காவல்துறைக்கு வருவதற்கு முன்னர் சந்திரதாசன் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரப்பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றியவர் பின்னர் போலீஸ் பயிற்சி முடித்து எஸ்ஐ, இன்ஸ்பெக்டராக பணியாற்றி தற்போது டிஎஸ்பியாக பதவிஉயர்வு பெற்றுள்ளார். ஒரு ஆசிரியருக்குத் தான் தெரியும் பள்ளியும், வகுப்பறைகளும் மாணவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவர் தனது உயர் அதிகாரியின் அனுமதி பெற்று 2 அரசு தொடக்கப்பள்ளிகளையும் தத்தெடுத்துள்ளார்.

படஉதவி : நன்றி தினகரன்
படஉதவி : நன்றி தினகரன்

பள்ளியில் மழைக்காலத்தில் நீர் தேங்கி நிற்பதை மக்கள் புகாராக கூறியுள்ளனர் முதலில் அவற்றை சரிசெய்ய ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர், பெரியபாளையம் ஆய்வாளர், துணை ஆய்வாளர் என போலீஸ் அதிகாரிகளின் துணையோடு டிஎஸ்பி சந்திரதாசன் களப்பணியை தொடங்கியுள்ளார். 

பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காத வகையில் மணல் மூட்டைகளை நிரப்பி, பள்ளியில் இருந்த 20க்கும் மேற்பட்ட வகுப்பறை மற்றும் கழிவறைகளுக்கு வர்ணம் தீட்டி புதுப்பித்துள்ளனர். பழமை வாய்ந்த அரசுப் பள்ளிகளுக்கு புத்துயிர் தந்துள்ள போலீசாரின் இந்த செயல், அந்தப் பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

தொடக்கத்தில் ஒரு ஆசிரியராகப் பணியாற்றியதால் டிஎஸ்பி சந்திரதாசன் பள்ளியின் முக்கியத்துவம் கருதி அரசு தொடக்கப் பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்துள்ளார் என்று அவருக்கு பாராட்டுகளை மக்கள் குவித்து வருகின்றனர். 

Related Stories

Stories by Priyadarshini