படப்பிடிப்புகளுக்கு ஏற்ற சொர்கபுரி 'கேரளா'- பாகுபலி இயக்குனர் ராஜமௌலி

0

காமிராவை எந்தப் பக்கம் திருப்பினாலும் மனதில் பசுமையாக ஒட்டிக்கொள்ளும் இயற்கை அழகு. கடவுளின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் கேரளாவில் சினிமா படப்பிடிப்பிற்கான வாய்ப்புக்கள் கொட்டிக்கிடப்பதாக சொல்கிறார், 'பாகுபலி' இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி..!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 1980- களில் ரயிலில் போகும் போதுதான் கேரளாவின் இயற்கை அழகு, ராஜமௌலியின் மனதில் ஒட்டிக்கொண்டதாம். அப்போது முதல் ஒவ்வொரு படத்தின் கதையை எழுதும் போதும் கேரளாவின் பச்சை பசேல் மலைகளையும், வழிந்தோடும் அருவிகளையும், நீர்வழிப் பாதைகளையும் கதைக்கு ஏற்ப பயன் படுத்திக் கொள்ள தவறுவதில்லை. 

அப்படித்தான் எனது இரண்டாவது படமான 'ஸிம்ஹாத்ரி' யில் திருவனந்தபுரத்தின் நகர்புற அழகையும், 'சஹி' படத்தில் மூணாரின் மலைகளின் அழகையும், 'பாகுபலி'யில் அதிரபள்ளி அருவியையும் பயன்படுத்தினேன் என்கிறார்.

பல படங்களில் அதிரப்பள்ளி அருவி இடம் பிடித்திருந்தாலும் அதன் 'ரவுத்திரமான' அழகுதான் தம்மை மிகவும் கவர்ந்ததாக கூறுகிறார், மௌலி.

விருதுகள் மீது விருப்பம் இல்லை. ஆகவே, எந்த விருது நிகழ்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அப்படியானால், சர்வதச இந்திய திரைப்பட அகாடமி விருதுக்கு பாகுபலி விண்ணப்பிக்கப்பட்டது குறித்து கேட்ட போது, தமது படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஒரு ஊக்கமாக அமையுமே என்று நினைத்ததாக தெரிவித்தார்.

திருவனந்தபுரம் அருகே உள்ள பிரபல கோவளம் கடற்கரையில் உள்ள லீலா பீச் ரிசார்ட்டில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள மௌலி வந்திருந்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ஏ.வி.குருவா ரெட்டி மகள் திருமணம் மாநிலம் தாண்டி கோவளத்தில் நடைப்பெற்றது.

உள் நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் கேரளாவை ஒரு 'வெட்டிங் டேஸ்டிநேஷன்' ஆக தேர்வு செய்யலாம் என்றார், மௌலி. இயற்கை அழகோடு அடிப்படை வசதிகளும் நிரம்பியிருப்பதால் திருமணங்களை கேரளாவில் நடத்த உகந்த இடமாக இருப்பதாக டாக்டர் ரெட்டியும் கூறுகிறார்.

கோவளம், மூணார், கொச்சி போன்ற சுற்றுலா மையங்களை தேர்வு செய்து திருமண நிகழ்சிகளை நடத்த அண்மை காலமாக பிரபலங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறர்கள். இது கேரளாவின் சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய ஊக்கமாக இருப்பதாக சொல்கிறார், சுற்றுலா வளர்ச்சி துறை செயலாளர் கமலவர்த்தனா ராவ்.

பீஜிங்கில் நடந்த சீன திரைப்பட தயாரிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோது கூட 'திரைப்பட சுற்றுலா'வுக்கு உதாரணமாக பாகுபலியில் இடம் பிடித்த அதிரப்பள்ளி அருவியின் அழகு காட்சிகளைத் தான் போட்டுக்காட்டி பேசியதாக கேரளத்தின் இயற்கை அழகை மாய்ந்து மாய்ந்து பேசுகிறார் ராஜ மௌலி..!

மளையாளத்தில்: முகேஷ் நாயர் |தமிழில்: ஜெனிட்டா.