விவசாயிகளின் நலனுக்கு உதவ ’நன்செய்’ தொடங்கி களம் இறங்கிய கல்லூரி நண்பர்கள்!

4

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நாள் நண்பர்களுடன் இயல்பாக ஜல்லிக்கட்டைப் பற்றியும் மற்ற நிகழ்வுகள் பற்றியும் பேசிக்கொண்டு இருந்த பொழுது, ஜல்லிக்கட்டுக்காக ஒட்டு மொத்த தமிழ்நாடும் உணர்ச்சிகரமாக போராடிக் கொண்டு இருந்தது. அதே வேளையில் இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலை தலை ஒங்கி இருந்ததை பற்றியும் விவாதித்தனர் கல்லூரி நண்பர்கள் பிரசன்னா, சுருதிக்கா மற்றும் சிலர்.

”கடந்த ஆண்டு மட்டும் 8000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஒருபுறத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒன்று இணைந்து ஜல்லிக்கட்டுக்காக போராடிக் கொண்டு இருப்பதை நினைத்து பெருமை படுவதாக இருந்தாலும் இன்னோரு புறத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் வேதனையாக இருந்தது,”

என்று ’நன்செய்’யின் உருவாக்கம் பற்றி பிரசன்னாவும் சுருதிக்காவும் கூறத் துவங்கினார். மறுநாள் காலை பிரசன்னா சுருதிக்காவுக்கு கால் செய்து இது பற்றி யோசித்ததாகவும், “நம்ம ஒரு அமைப்பை ஆரம்பிக்கலாமா” என்றும் கேட்டு உள்ளார். அப்போது தான் நன்செய் எனும் அமைப்பிற்கான விதை போடப்பட்டது. அன்று மாலையே இருவரும் இதை பற்றி விரிவாக பேசி, ஜனவரி 20-ம் தேதி அமைப்பு ஒன்றை தொடங்கினர்.

பிரசன்னா மற்றும் சுருதிக்கா
பிரசன்னா மற்றும் சுருதிக்கா

சேம்ப்பு தொகையான 5000 ரூபாயை கொண்டு ஒரு வெப்சைட்டை உருவாக்கி, அமைப்பை தன்னார்வ தொண்டு அமைப்பாக பதிய விண்ணப்பித்தனர். இந்த அமைப்பை பற்றி இவர்கள் கூறுகையில்,

”எங்களுக்கு விவசாயத்தை பற்றி ஒன்றும் தெரியாது, ஜல்லிக்கட்டு பற்றியும் தான் ஆனால் ஜல்லிக்கட்டுக்காக போராடி வென்றோம். இளைஞர்கள் களத்தில் இறங்கினால் மாற்றம் காண முடியும் என்று இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் எங்களுக்கு உணர்த்தியது. அதற்காக இந்த அரசை எதிர்த்து போராட போவதுல்லை, கடனிலும் தண்ணிர் இல்லாமலும் தவிக்கும் விவசாயிகளுக்கு துணை நிற்க போகிறோம்.” 

அவர்களுக்குத் தேவையான பொருள்கள், தண்ணீருக்காக கிணறு வெட்டி கொடுப்பது போன்ற செயல்களை செய்ய முடிவு எடுத்தோம். மேலும் விவசாயிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பது போன்ற விஷயங்களால் அவர்களின் தற்கொலைகள் குறைய வாய்ப்பு இருக்கும் என எண்ணிணோம் என்றனர்.

இதை ஒரு குழுவாக தான் செய்ய இயலும் என்று அறிந்த இவர்கள், முதலில் குழுவை உருவாக்க, அதற்கான வேலைகளில் இறங்கினர். சமூகவலைதள நண்பர்களிடம் இந்த அமைப்பை பற்றி கூறி அவர்களின் ஆதரவை பெற்றனர். மற்றும் பள்ளி நண்பர்கள் கல்லூரி நண்பர்கள் என அனைவரிடமும் இந்த அமைப்பை பற்றி கூறி ஆதரவை பெற்றனர். 

நன்செய் மாணவர்கள் குழு
நன்செய் மாணவர்கள் குழு
”எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடந்த மிலான் விழாவில் மாணவர்கள் இடையே விவசாயத்தை பற்றி பேசி விழிப்புணர்வை அரங்கேற்றி, அவர்கள் ஆதரவையும் பெற்றோம். அவர்களிடம் விதைகளை கொடுத்து அதை தொட்டியில் போட்டு அவரவர் வீட்டில் வளர்க்குமாறு கூறினோம். இந்த விதம் அவர்களை ஈர்த்தது. இப்படி எங்கள் குழுவை வலுப்படுத்த எங்களால் முடித்த அனைத்து வழியிலும் செயல்பட்டோம்.”

’நன்செய்’ மூலம் விவசாயிகளுக்கு உதவ எங்களுடன் அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்தனர். அவர்களை நான்கு குழுவாக பிரித்தோம். புதிதாக அமைப்பில் இணைப்பவர்களை அவர்களுக்கு விருப்பமுள்ள குழுவில் இணைத்துவிடுவோம். நான்கு வகையான குழுக்கள்:

மக்கள் தொடர்பு குழு - மக்களிடம் சென்று எங்கள் அமைப்பை பற்றி கூறி அவர்கள் ஆதரவை பெறுவதற்கும் மற்றும் விவசாயம் பற்றிய விழிப்புணர்வை பரபரப்பும் குழு.

டிஜிட்டல் மார்க்கெடிங் குழு (digital marketing) - சமுக வலைதளங்களில் அமைப்பு செய்யும் விஷயங்களை கொண்டு சேர்ப்பதற்கு இந்த குழு. 

களப்பணி மற்றும் ஆராய்ச்சி குழு (field work & research): தமிழ்நாட்டில் எந்த பகுதிகளில் விவசாயிகள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களை தேடி கண்டு பிடிக்க உதவி செய்வது இந்த குழு.

உள்ளடக்க குழு (content writing) - களத்தில் சந்தித்த விவசாயிகளிடம் எடுத்த நேர்காணலை தொகுப்பாக உருவாக்கி அதை மக்கள் தொடர்பு குழு மற்றும் டிஜிட்டல் மார்க்கெடிங் குழு உதவியோடு இணையதளம் மூலம் மக்களிடமும் கொண்டு சேர்க்கும்.

மேலும் அனைத்து குழுவினரும் வாரத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி விவசாய மேம்பாட்டை பற்றி கலந்து பேசி முடிவு எடுக்கின்றனர். அதே நாளில் விவசாயிகளையோ விவசாய ஆர்வலர்களையோ அழைத்து அவர்களிடம் ஆலோசனை கேட்டு கொள்கிறார்கள். அவர்கள் கூறியதில் இருந்து தான் எங்களுக்கு விவசாயத்தில் உள்ள கஷ்டங்கள் பற்றியும் விவசாயிகள் படும் கஷ்டங்கள் பற்றியும் நிறைய தெரியவந்தது என்கின்றனர்.

விவசாய குடும்பத்துடன் நன்செய் குழு
விவசாய குடும்பத்துடன் நன்செய் குழு
”மாதாமாதம் எங்களால் முடிந்த பணத்தை விவசாயிகளுக்காக சேகரிப்போம், இது கட்டாயம் இல்லை முடிந்தவர்கள் கொடுக்கலாம். மேலும் ’சாக்ரிஃபைஸ்  எ மூவி’ (sacrifice a movie) எனும் திட்டம் உள்ளது அதாவது ஒரு மாதத்தில் நாம் திரையரங்கு சென்று பார்க்கும் படங்களில் ஒன்றை தியாகம் செய்து அந்த பணத்தை இந்த திட்டத்தில் செலுத்துவோம்,” என்றார் சுருதிக்கா.  

இவ்வாறு நாங்கள் சேகரித்த பணத்தையும் பிற நிறுவனங்களும் தனிநபர்களும் கொடுத்த நண்கொடைகளையும் சேர்த்து களப்பணிக் குழு மூலம் கண்டு அறியப்பட்ட, விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவுகிறோம். மேலும் விவசாயிகளுக்கு உதவ சில தனியார் நிறுவனங்களும் முன்வந்து உள்ளனர் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இனியும் அரசாங்கத்தை நம்பி பயனில்லை. நமக்கு உணவு அளித்த விவசாயிகளை நாமே காப்பாற்றுவோம். முன்வாருங்கள் ஒன்றிணைவோம், என்று அழைப்பு விடுக்கும் நன்செய் இளைஞர் குழுவுக்கு வாழ்த்துக்கள்!

 மேலும் விவரங்களுக்கு: ’Nansei'

கட்டுரைக்கான தகவல்கள் உதவி: தீபக் குமார்