தொழில் முனைவின் தந்திரங்களை நமக்குக் கற்றுத்தரும் 'கிளாஷ் ஆஃப் கிளான்ஸ்' விளையாட்டு

2

டிஸ்க்ளைமர்

1. கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் விளையாடுவது மட்டும் தங்களை நல்ல ஒரு தொழில்முனைவோனாக மாற்றாது.

2. கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் விளையாட்டின் விசிறி நான்.

3. கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் என்றால் என்ன என்று உங்கள் எல்லாருக்கும் தெரியும் என்று யூகம் செய்து கொள்ளப்படுகின்றது.

நான்கு வருடங்களுக்கு முன்பு எனது ஐபோன் வாங்கிய போது அது துவங்கியது. அலைபேசியை புதிதாக வாங்கும் எவரும் செய்வது போன்றே நானும் அதில் விளையாடுவதற்கு நல்ல ஒரு விளையாட்டை இணையத்தில் தேடி வந்தேன். அப்போது தான் கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் என் கண்களில் தென்பட்டது. அதற்கு கொடுக்கபட்டிருந்த நல்ல விமர்சனங்களை பார்த்து விட்டு, அதனை தரவிறக்கம் செய்து விளையாடி வந்தேன். அதே நேரத்தில் தான் எனது நிறுவனத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு காணொளியும் தயாரித்து வந்தேன்.

அக்காலத்தில் இருந்து இக்காலத்திற்கு வந்து, இன்று எனது அலுவலகத்தில் எனது அலைபேசியில் கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் விளையாட்டை திறந்து பார்க்கும் பொழுது, எனது நிறுவனத்திற்கும், அந்த விளையாட்டிற்கும் எத்துனை ஒற்றுமைகள் என்பதை அறிய முடிகின்றது. மேலும் எதனால் இந்த விளையாட்டு இத்தனை நபர்களை வசீகரித்துள்ளது என்பது புரிந்தது.

எனவே அதனிடமிருந்து நான் கற்றவை...!

சிறிதாக துவங்கவும் சிறப்பாக சிந்திக்கவும்:

விளையாட்டை கைபேசியில் தரவிறக்கம் செய்து விளையாட துவங்கியவுடன், ஒரு குடில் போன்ற ஒன்று நமக்கு காட்டப்படும். அதன் மூலம் நமக்கு சில ரத்தினங்கள் கொடுக்கப்படும். அதன் பின் எவ்வாறு மற்றவற்றை கட்டமைப்பது என்பது கற்றுக்கொடுக்கப்படும். அவ்வளவே. அந்த கிளான்ஸ் உலகத்தில் நீங்கள் தனித்து விடப்படுவிர்கள். எந்த நேரமும் உங்கள் மீது தாக்குதல் துவங்கலாம்.

இத்தருணத்தில், உங்கள் கைகள் கட்டப்பட்டது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படலாம். விதவிதமாக படைகளைக் கொண்ட கிராமங்கள் உங்களை தாக்கும் பொழுது தங்கள் உத்வேகம் உடைந்து போகலாம். ஆனால் இப்படி ஒரு நிலையில் இருப்பதால் மட்டுமே நிறைய தவறிழைத்தும் மீண்டும் என்னால் விளையாட்டில் முற்றிலும் தோற்காமல் விளையாட முடிந்தது. எனவே நான் விளையாட்டை கற்றுவந்தேன். விளையாடவில்லை.

எனவே சிறிதாக துவங்குவதன் மூலம் தவறிழைக்கும் சுதந்திரம் நமக்குக் கிடைக்கின்றது. மேலும் கடினமான தோல்விகளை தாங்கிக்கொள்ளும் திறன் நமக்கு அகப்படுகின்றது.

அடுத்த கட்டம் செல்ல சரியான நேரம்:

கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் விளையாட்டில் அனைவரும் செய்யும் ஒரு தவறு, தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தாது அடுத்த கட்டத்திற்கு செல்வதே. இதை செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். பாதுகாப்பின் அவசியம் அவர்கள் உணராமல் இருப்பர் அல்லது, மிக வேகமாக வளர வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் இருக்கலாம். நானும் இதே தவறை செய்தேன். பின்னர் அடுத்த கட்டத்தில் இருந்த கிராமங்கள் எனது இருப்பிடத்தை தாக்கியபோது அதை சமாளிக்கும் திறன் இன்றி தோற்றுப்போனேன்.

இதே தான் தொழில் முனைவிலும் நிகழும். தேவையான திறனை அடையும் முன்னரே நமது தொழிலை விரிவடைய நாம் முயற்சித்தால் அதில் இருந்து திரும்பி வரும் வழி நமக்குக் கிடையாது. அந்த வீழ்ச்சியை தாங்கும் சக்தி இருப்பது முக்கியம். எனவே புதிய கிளைகளை தேவைகள் இருந்தால் மட்டுமே நிறுவ வேண்டும்.

சரியான குழுவை தயாரித்தல்:

விளையாட்டில் ஒரு அளவு நாம் கடந்தவுடன், நம்மால் நமக்கான குழு ஒன்றை திரட்டி, அதை வைத்து பக்கத்துக்கு கிராமங்களை வீழ்த்த இயலும். இதில் வெற்றி பெற ஒரு வழி, நமது குழுவில் உள்ளவர்கள் அவர்களின் ஆயுதங்கள் மற்றும் படைகளை குழுவில் உள்ள மற்றவர்களுக்கு கொடுத்து, போரிட சரியான ஒரு திட்டம் அமைத்து, அதன்படி தாக்குதல் நடத்துவதே. குழுவிற்கு ஒரு தலைவர், துணைத்தலைவர், மற்றும் குழுவின் உறுப்பினர்கள் இருப்பார்கள். குழுவின் தலைவர் குழுவின் சட்டதிட்டங்களை இயற்றி அதனை உறுப்பினர்களுக்கு தெரிவிப்பார். அதனை மதித்து நடக்காத உறுப்பினர்கள் சில எச்சரிக்கைகளுக்கு பிறகு குழுவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். எனவே குழுவில் உள்ள அனைவரும் தாக்குதலில் பங்கேற்காமல் உங்களால் வெல்ல இயலாது. எனவே நமது படை மட்டுமல்லாது, குழுவினையும் உறுதியாக கட்டமைப்பதே சிறந்த வழியாகும்.

அதே போன்று தொழில் முனைவிலும், சரியான ஒரு அணி நமக்கு அமையாமல் நம்மால் நமது தொழிலை விரிவுபடுத்துவது குறித்து சிந்திக்க இயலாது. குழுவில் ஒத்துழைக்காதவர்களை களைஎடுத்தல் அவசியம். சரியான ஒரு குழு நமக்கு இருப்பின், அதன் மூலம் பல வெற்றிகளை நாம் பெற இயலும்.

சரியான திட்டமிடல் மற்றும் கடுமையாக உழைத்தல்:

ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒரு காரணம் உண்டு. சில எதிரியிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க வேண்டி இருக்கலாம். சில அவனிடம் உள்ள பொருட்களை கைப்பற்ற வேண்டி இருக்கலாம். சில சமயம் இரண்டும் சேர்ந்த ஒரு தாக்குதலாக இருக்கலாம். எனவே எந்த படையை எப்போது பிரயோகிப்பது என்பதை சரியாக ஆராய்ந்து பின்னர் தாக்குதலில் ஈடுபடவேண்டும்.

மற்றவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் இருந்து நாம் பாடம் கற்கவேண்டும். இந்த விளையாட்டின் முக்கிய குறிக்கோள் தாக்குதல் நிகழ்த்தி, வெற்றிகள் பெற்று அதன் மூலம் சரியாக சாம்ராஜ்யத்தை உருவாக்குவதே ஆகும்.

சில நேரங்களில் சிலவற்றை நாம் தெரிந்து கொள்வதற்காக செய்யவேண்டி இருக்கும். அதில் சில வெற்றி பெரும் சில தோல்வியுறும். இரண்டுக்கும் இடையில் சரியான ஒரு சமநிலை காண்பதே சிறந்தது. இவ்விடத்தில் தான் நமது நேரத்தையும் நமது வளங்களையும் உபயோகிக்க சரியாக திட்டமிடவேண்டும். இதில் தவறிழைத்தால் வளர்வது போன்ற ஒரு மாயையில் நாம் ஆட்பட நேரிடும். எனவே நமது செயல் அனைத்திற்கும் ஒரு மறுஆய்வு அவசியம்.

கட்டுரையாளர் அனில்குமார், கோவையைச் சேர்ந்த Mypromovidoes.com  நிறுவனத்தின் சிஇஓ. இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள்.

தமிழில் : கெளதம் s/o தவமணி