மளிகை கடைகளை இ-காமர்ஸ் வலைப்பின்னலில் இணைக்கும் 'நம்பர்மால்'

0

கிரண் காலி(Kiran Gali) உருவாக்கிய "நம்பர்மால்" (NumberMall) செயலி நல்லெண்ணத்தால் பிறந்தது. 2011 ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது அவர் தனது கிராமத்தில் விஜயம் செய்த மளிகை கடை நண்பருக்கு உதவும் நோக்கில் இந்த செயலி உருவானது.

பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான கையிருப்பு கணக்குகளை பராமரிக்க அந்த நண்பர் திணறிக்கொண்டிருந்தார். எனவே கிரண் அவருக்கு உதவும் வகையில்,மொபைல் பணம் செலுத்தல், ரீசார்ஜ், பணம் அனுப்புதல் உள்ளிட்டவற்றை எளிதாக கையாள்வதற்கான தொழில்நுட்ப வசதியை உருவாக்கித்தர முடிவு செய்தார். பொருட்களை கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் இது உதவியாக இருக்கும் என நினைத்தார்.

இந்த எண்ணத்துடன் அவர், ஒருவருக்கு மட்டும் அல்லாமல் எல்லா சிறு வணிகர்களும் மின்வணிகத்தை நோக்கிய பாதையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நம்பர்மால் செயலியை அறிமுகம் செய்தார். 2012 பிப்ரவரியில் அவர் தனது சொந்த நிதி ரூ.10 லட்சத்தை இதில் முதலீடு செய்தார்.

ஐதராபாத்தைச்சேர்ந்த நம்பர்மால், இந்தியாவில் சிறு வணிகர்களுக்கான செயலி அடிப்படையிலான முதல் பணம் செலுத்தும் மேடை என்கிறார் கிரண். மொபைல் போன் அடிப்படையிலான ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ், டேட்டா கார்ட் ரீசார்ஜ், போஸ்ட் பேய்டு பில் செலுத்தல், பஸ் டிக்கெட் பணம் செலுத்தல் என எல்லா வசதிகளையும் ஒரே இடத்தில் இது அளிக்கிறது.

"மளிகை கடை வைத்திருப்பவர்களுக்கான முதல் பி2பி இ.காமர்ஸ் மேடையை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் உள்ளூர் வியாபாரிகள் தங்களுக்குத்தேவையான எல்லாவற்றையும் எங்கள் தளம் மூலம் கொள்முதல் செய்து கொள்ளலாம். சிறந்த விலையை தருவதற்காக 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்” என்று கூறும் கிரண் விரைவில் பி2பி யில்பெரும் மாற்றத்தை கொண்டு வருவோம் என்கிறார்.

மற்ற நிறுவனங்கள் டெர்மினல் மற்றும் எஸ்.எம்.எஸ் நுட்பங்களை நாடியுள்ளன. துவக்க புள்ளி ஒன்று தான் என்றாலும் நம்பர்மால் ரீடைலர் வலைப்பின்னலை கொண்டு ரொக்க வாடிக்கையாளர்கள் மத்தியில் இ-காம்ர்ஸ் ஏற்புத்தன்மையை அதிகமாக்க திட்டமிட்டிருப்பதாக கிரண் கூறுகிறார். இதில் ஏற்கனவே 15,000 சிறு வணிகர்கள் இணைந்திருப்பதாக தெரிவிக்கிறார்.

இந்தியாவில் 14 மில்லியன் சிறு வணிகர்கள் உள்ளனர் என்பதையும் இந்த சந்தை 600 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது என்பதையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இதன் முக்கியத்துவம் புரியும்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் ஆன் -லைனில் வாங்குவது இல்லை என்பதால் இ -காமர்ஸ் அணுகூலம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. "உள்ளூர் வணிகர்கள் மூலமான இ-காமர்ஸ் தான் புதிய போக்காக உருவாகியுள்ளது. ஸ்டோர்கிங் மற்றும் ஐபிளே போன்ற சில நிறுவனங்களே இந்த பிரிவில் உள்ளன” என்று சுட்டிக்காட்டுகிறார் கிரண்.

நிறுவனர், சி.இ.ஓவான கிரண், இந்தியர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் மளிகை கடைகளை நம்புகின்றனர் என்றும் ரொக்கத்தில் பரிமாற்றம் செய்ய விரும்புகின்றனர். ஆனால் அவர்களில் பலர் இ-காமர்ஸ் என வரும் போது எதுவும் அறியாதவர்களாக இருக்கின்றனர். ஸ்டார்ட் அப்களும் இதில் கவனம் செலுத்துவதில்லை” என்கிறார்.

”நுகர்வோரை இழுக்க, பணம் செலுத்தும் வசதி தூண்டுதலாக இருந்தாலும் ஆன் -லைனில் பொருட்களையும் விற்பனை செய்கிறோம். இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான அடுத்த கட்ட வளர்ச்சி எல்லாம் கலந்த மாதிரியில் இருந்து உண்டாகும். விற்பனையாளர்கள், சேவையாளர்கள், வணிகர்கள், நுகர்வோர் என அனைத்து தரப்பினரையும் இணைக்கும் நம்பர்மால், இதை பயன்படுத்திக்கொள்ள சரியான இடத்தில் இருக்கிறது” என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

உலகின் எங்கிருந்தும் பில்களுக்கு பணம் செலுத்தலாம், போன் ரீசார்ஜ் செய்யலாம் என்று நம்பர்மால் இணையதளம் தெரிவிக்கிறது. ரீசார்ஜ், டிக்கெட் மற்றும் பணம் செலுத்துதலுக்கான ஒற்றை வழியான வேலட்டும் கொண்டுள்ளது.

கிரண் காலி,நிறுவனர்
கிரண் காலி,நிறுவனர்

இலக்கை நோக்கி

உள்ளூர் கடையில் பொருட்களை வாங்கும் ரொக்க பரிவர்த்தனை வாடிக்கையாளரை கிரண் குறி வைக்கிறார். இந்த முறை மூலம் இருப்பு குறைவது சில்லறை வணிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே தளம் வழியே பலவற்றை விற்க முடிவதும் சாதகமாக இருக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு பலவகையான சேவைகளை வழங்கும் வணிகர் வலைப்பின்னலை நம்பர்மால் கொண்டிருப்பதாக கிரண் விளக்குகிறார். "எங்கள் இ-காமர்ஸ் மேடையில் அனைத்து விற்பனையாளர்களிடம் இருந்தும் மார்கெட் கட்டணம் வசூலிக்கிறோம். விரைவில் முன்னணி பிராண்ட்களும் எங்களுடன் பேசி தங்கள் தயாரிப்புகளை எங்கள் வலைப்பின்னலில் இடம்பெற வைகக்லாம்” என்கிறார் அவர்.

14 மில்லியன் சிறு வணிகர்களில், பெரும்பாலானோர் இன்னமும் அணுகப்படாமல் இருப்பதால் வர்த்தக வாய்ப்பு சிறப்பாக உள்ளது. வென்ச்சர் கேபிடலிஸ்ட்களும் ஆர்வம் காட்டுகின்றனர். சிரீஸ் ஏ நிதிக்கான பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஜனவரி மாதம் கிரண் எஸ்.ஆர்.ஐ கேபிடலிடம் இருந்து ரூ.5 கோடி நிதி பெற்றார். புதிய வணிகர்களை ஈர்க்க, தொழில்முறை குழுவை உருவாக்க மற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்க இந்த நிதி உதவியுள்ளது.

ஆண்டு விற்றுமுதல் ரூ.120 கோடி என்றும் மாத அடிப்படையில் 10 சதவீத வளர்ச்சி இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். இதை 25 சதவீதமாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சவால்கள், நம்பிக்கைகள்

இதே போல பல நிறுவனங்கள் இருந்தாலும், மளிகை கடைகள் மூலம் இ-காமர்சிற்கு ஒரு சில நிறுவனங்களே முயற்சிப்பதால் அதிக போட்டி இல்லை. அடுத்த கட்ட வளர்ச்சிக்கான இந்த வழியை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் பெரிய பிராண்ட்கள் கையகப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் போட்டி அதிகரிக்கும்” என்கிறார் கிரண்.

சவால்களாக அவர் பட்டியலிடுபவை: ஒரு வலைப்பின்னலை உருவாக்குவது கடினமானது, கிராமப்புறங்களில் உள்ள இணையவசதியும் ஒரு தடைக்கல். நம்பர்மால் தற்போது 2ஜி இணைப்புகளுக்கு ஏற்றதாக இருக்கிறது.

இணையதள முகவரி: NumberMall