தொழில்முனைவர்கள் தடைகளை முறையாக சந்தித்து தீர்வுகான 5 வழிமுறைகள்!

0

வெற்றி என்பது கூட்டத்தில் இருந்து தனித்து நின்று நமக்கென்று ஓர் தனி இடத்தை ஏற்படுத்துவது தான். இது போன்ற வெற்றிதான் தொழில்முனைவர்களையும் தனித்து காட்டும். 

ஒரு தொழில்முனைவர் அன்றாட பல சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் எப்படி வெற்றியை அடைய முடியும்? இந்த கேள்விக்கு ஓர் சிறந்த எடுத்துகாட்டாய் இருப்பது, அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா, வெற்றிகரமானா தொழில்முனைவர் ஆவதற்கு முன்பு முப்பது முறை தோல்வியை தழுவியுள்ளார் அவர்.

அதேபோல் நீங்களும் தடைகளை தகர்த்து வெற்றி அடைய சில வழிகள்:

பிரைச்சனைகளை உறுதியாக எதிர்கொள்ள வேண்டும்

வெற்றிகரமான வணிகத் தலைவர்கள் அனைத்து தடைகளிலும் ஓர் வாய்ப்பாய் எடுத்துக்கொண்டு உறுதியாக எதிர்கொள்கின்றனர். பெரும்பாலான பிரச்சனைகளை பொறுமையுடனும் பகுத்தறிவுடனும் கையாள்வதால் தீர்வு கிடைக்கிறது. பொறுமையுடன் பிரச்சனைகளை ஆராய்வது தீர்வுக்கான புதுவித கண்ணோட்டத்தை தரும். தடைகளை கண்டு மன அழுத்தம் கொண்டால் உங்களுக்கு எந்தவித ஆதாயமும் இருக்காது.

கடினமாக இல்லாமல் சூழ்நிலைக்கு இணங்குங்கள்

ஒரு சிறந்த தொழில்முனைவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இணங்க வேண்டும். கோட்பாடுகள் மற்றும் அடிப்படைகளை எப்பொழுதும் கையில் பிடித்துக்கொண்டால் தீர்வு கிடைக்காது. அதனால் சூழ்நிலை மற்றும் தடைகளுக்கு ஏற்றவாறு நம் செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அது மட்டும் இன்றி வாடிக்கையாளர்களின் கருத்துகளை கருத்தில் கொண்டு சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

உதாரணமாக முகநூல், தொடக்கத்தில் சமூக ஊடகமாக தொடங்கி நெட்வொர்கிங்கோடு  நின்றுவிடாமல் தற்பொழுது விளம்பரம் மற்றும் நாணயமாக்கல் திட்டங்கள் உட்பட பலவற்றை இணைத்து வளர்ந்துள்ளனர். பயனாளர்களை கருத்தில் கொண்டும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றத்தை ஏற்படுத்தியும் வெற்றி அடைந்துள்ளனர்.

விநியோகிக்கவும் மற்றும் பிரதிநிதித்துவமும் செய்ய வேண்டும்

எல்லா வெற்றிகரமான தொழில்முனைவர்கள் பின்னணியிலும் பிரச்சனைகளை சரி செய்து தீர்வு காணும் சிறந்த குழு இருக்கும். பெருநிறுவனமோ அல்லது ஸ்டார்ட்-அப் நிறுவனமோ, அதன் வெற்றி வேலை செய்யும் பணியாளர்களைக் கொண்டே அமையும். நல்ல குழு அமைந்தால் பெரும் தடைகளை கூட சுலபமாக தகர்த்துவிடலாம். அதற்கு வேலையை முறையாக பிரித்து பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். இது நிறுவனத்தின் பணிப்பாய்வை சீர் அமைக்கும்.

வேலைக்கு ஏற்ற தகுதி பெற்ற ஆட்களை தகுந்த வேலைக்கு நியமனம் செய்ய வேண்டும். அமேசானின் சி.இ.ஒ ஜெப் பெஜோஸின் ’இரண்டு பீஸ்ஸா ரூல்’ கேள்வி பட்டதுண்டா? உங்களால் உங்கள் குழுவிற்கு இரண்டு பீஸ்ஸா வாங்கி தர முடியவில்லை என்றால் உங்கள் குழு கையாள முடியாத அளவு பெரியதாய் இருக்கிறது என்று பொருள். அதாவது அவரை பொறுத்தவரை கையாள முடியாத பெரிய குழு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்கத் தேவைக்கு ஏற்ற தகுதி பெற்ற ஆட்களைக் கொண்டு சிறு குழு அமைத்து வேலைகளை பிரித்து கொடுப்பதே சிறந்தது.

உங்கள் இறுதி முடிவை அளவிட்டு பாருங்கள்

வெற்றிகரமான தொழில்முனைவர்கள் முக்கியமாக செய்வது இறுதி முடிவுகளை ஆராய்ந்து, செயல்களின் விளைவுகளை பார்ப்பது தான். செயல்களின் விளைவை சரிபார்ப்பது பல வழிகளில் உங்களுக்கு உதவும்; அதாவது உங்கள் தயாரிப்பு அல்லது சேவைகளில் வாடிக்கையாளர்களின் விருப்பம், உங்கள் உழைப்பு வெற்றியா அல்லது தோல்வியா என சகலத்தையும் இந்த இறுதி ஆய்வில் நாம் தெரிந்துகொள்ளலாம். 

வெர்ஜின் குழுவின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் கருத்து படி வாடிக்கையாளர்களின் திருப்தியே துல்லியமான இறுதி ஆய்வாகும். வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் கருத்து வணிகம் வளர்ச்சி அடைய பெரும் பங்கை வகிக்கிறது. எனவே உங்கள் தொழிலின் இறுதி முடிவை ஆய்வு செய்து எதிர்காலத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.

உங்கள் போர்க்களத்தை தேர்ந்தெடுங்கள்

நீங்கள் தொழில் செய்யும் பகுதி அல்லது துறையை மிக கவனமாக தேர்ந்தெடுங்கள். தெரிந்த துறையை தேர்ந்தெடுத்தால் உங்களது சுய அனுபவம், பயிற்சி மற்றும் படிப்பு சோதனைகாலத்தில் கைக்கொடுக்கும், பிறரை எதிர்பார்க்கும் தேவை இருக்காது. எந்த இடத்தில் உங்களது திறமை மற்றும் அறிவை பயன்படுத்தலாம் என ஆராய்ந்து மிக கவனமாக தேர்ந்தெடுங்கள். பல தொழில்முனைவர்கள் தோல்வி அடைய முக்கியக் காரணமாக இருப்பது முன் அனுபவம் இல்லாத பாதையை தேர்ந்தெடுப்பது தான்.

ஒவ்வொரு தொழில்முனைவர்கள் மற்றும் வணிகர்களுக்கும் பிரச்சனைகளை தீர்க்க தனி முறை இருக்கும். எல்லா முறையும் அனைவருக்கும் உதவும் என உறுதி கொடுக்க முடியாது. இருப்பினும் மேலே கூறிய இந்த வழிமுறைகள் தொடக்கக் காலத்தில் நிச்சயம் கை கொடுக்கும். அடுத்து ஏதேனும் தடைகளை சந்தித்தால் அமைதியாக, பகுத்தறிவுடன் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

ஆங்கில கட்டுரையாளர்: அமன் ஜா | தமிழ் கட்டுரையாளர்: மஹ்மூதா நெளஷின்