ஃப்ளிப்கார்ட் புதிய சிஇஒ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி: இ-காமர்ஸ் சவால்களை சந்திக்கப்போவது எப்படி?

0

45 வயது பிறந்த நாளை கொண்டாடவுள்ள வேளையில் கல்யாண் கிருஷ்ணமூர்த்தியின் முன் புதிய சவால்கள் காத்திருக்கின்றன. இ-காமர்ஸ் சந்தையில் நிலவிவரும் கடுமையான போட்டியை தாக்குப்பிடிக்க இவர் என்னென்ன செய்யப்போகிறார்? ஃப்ளிப்கார்ட்டின் புதிய சிஇஒ’ ஆக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள கல்யாண் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன? 

கடந்த சில மாதங்களுக்கு முன் ஃப்ளிப்கார்ட் மேலாண்மை குழுவில் நடந்த மாறுதல்களில், கல்யான் கிருஷ்ணமூர்த்தி விற்பனை பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் வர்த்தகம், விளம்பரம், சந்தை வாய்ப்புகள் என்று அனைத்தையும் அதில் கவனித்து வந்தார். இப்போது திடீரென ஃப்ளிப்கார்ட்டின் தலைமைப் பொறுப்பான சிஇஒ பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் இதற்கு முன்பு இருந்த பின்னி பன்சல், இனி ஃப்ளிப்கார்ட் குழுமம்- ஜபாங், மிந்த்ரா, ஃப்ளிப்கார்ட், போன்பெ மற்றும் எகார்ட் ஆகியவற்றின் தலைவராகிறார்.

கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, பிலிப்பைன்சில் உள்ள ஏசியன் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ முடித்தவர். அமெரிக்காவில் உள்ள UIUC பிசினஸ் கல்லூரியில் பினான்ஸ் பிரிவில் மற்றொரு எம்பிஏ’வும் இவர் முடித்துள்ளார். பிரபல டைகர் க்ளோபல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிதிப்பிரிவின் முன்னாள் இயக்குனராக பணியாற்றியுள்ள கல்யாணை ஃப்ளிப்கார்ட் தங்களுடன் இணைத்துக்கொண்டது. மே மாதம் 2013 இல் தங்களது இடைக்கால சிஎப்ஒ’ ஆக ஃப்ளிப்கார்ட் கல்யாணை நியமித்தது. அப்போது அவர் ஒன்றரை ஆண்டு காலம் அந்த பொறுப்பில் இருந்தார். 

இ-காமர்சில் உள்ள நெளிவு சுளிவுகளை அற்புதமாக அறிந்த கல்யாண், இ-பே ஆசிய-பசிபிக் பகுதியில் நிதி திட்டமிடல் மற்றும் ஆய்வு பிரிவின் இயக்குனராகவும் இருந்துள்ளார். டைகர் க்ளோபலில் சேர்வதற்கு முன் இந்த பொறுப்பை அவர் வகித்தார். அதேப்போல் ப்ராக்டர் & காம்பிள் நிறுவனத்தில் நிதிப்பிரிவில் பணியாற்றி தனக்கான பாணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 

கல்யாண் மீடியா கண்களில் மாட்டாத ஒரு மனிதர். தன் குழு உறுப்பினர்களை மட்டுமே வெளியே பேச அவர் அனுப்புவது வழக்கம். அவரை நன்கறிந்த தொழில்முனைவர் ஒருவர் கூறுகையில்,

“தற்போது மாற்றம் வந்துள்ளது. ஃப்ளிப்கார்ட்டின் சிஇஒ ஆக இனி அவர் ஊடகங்களில் பேசவேண்டி இருக்கும். வெளிப்படையாக அவர் இனி இருக்கவேண்டும்.” என்றார். 

அவருடன் பணிபுரிந்தவர்கள் முதல் அவரை தெரிந்தவர்கள் வரை அனைவருமே கல்யாணின் பிறருடன் பழகும் குணத்தை பாராட்டியே பேசுகின்றனர். முதல் முறை ஃப்ளிப்கார்ட்டில் அவர் இருந்தபோது, அவரின் விருப்பம், ஈடுபாடு, நம்பகத்தன்மை இவையெல்லாம் அங்குள்ள அடிமட்ட ஊழியர்கள் வரை நீடித்து இருந்தது. 

இருப்பினும் சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய சூழ்நிலைகளில் சில நிர்வாகிகளை அவர் பணி நீக்கமும் செய்துள்ளார். இது ஃப்ளிப்கார்ட்டில் பணிபுரிந்த 30,000 ஊழியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும் கல்யாணிடம் காணப்பட்ட பொறுப்புக்களால் அனைவரும் அமைதியாக நடந்துகொண்டனர். 

மற்றொரு முக்கிய திட்டமான ‘பிக் பில்லியன் டேஸ்’ சேல் கல்யாண் பொறுப்பில் இருந்தபோது நடைப்பெற்ற ஒன்று. அதில் அவர் திறம்பட செயல்பட்டு வெற்றியும் கண்டார். போட்டி நிறுவனமான அமேசானின் தள்ளுபடி விற்பனையை முறியடித்த பெருமை இவரைச் சேரும். இந்த பெரிய தள்ளுபடி நிகழ்வின் போது வேறு வழியின்றி அவர் ட்விட்டரில் இணைந்து தங்களின் ‘பிக் பில்லியன் டேஸ்’ பற்றிய அறிவிப்பை 11 ட்வீட்கள் மூலம் மட்டும் வெளியிட்டார். 

”கல்யாண எண்ணிக்கையில் வலிமையான மனிதர். பிறரை சரியாக எடைப்போடுவதில் வல்லவர். ஒருவரை பார்த்தவுடன் அவர் வேலைக்கு தகுதியானவரா இல்லையா என்பதை கணிக்கக்கூடியவர்,” 

என்றார் அவரைத் நன்கறிந்த ஒருவர். தற்போது ஃப்ளிப்கார்ட் தலைமை ஏற்றிருக்கும் இவருக்கு முன் பல சவால்கள் காத்திருக்கின்றது. கடந்த ஆண்டு $15 பில்லியனிலிருந்து $5.5 பில்லியன் என்ற அளவில் சந்தையில் மதிப்பு குறைந்து போய் உள்ள நிறுவனத்தை கடும் போட்டிக்கு இடையில் எப்படி கொண்டு செல்லப்போகிறார் கல்யாண் என்று பார்க்கவேண்டும்.

இந்தியாவில் ஃப்ளிப்கார்ட்டின் சந்தை பங்கு அமேசானை விட அதிகமாக இருந்தாலும் வரவிருக்கும் போட்டியை சமாளிக்கவே கல்யாணை ஃப்ளிப்கார்ட் கொண்டு வந்துள்ளதாக வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த முடிவு ஃப்ளிப்கார்ட்டின் நிறுவனர்களின் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குறைவின் காரணமோ அல்லது நிறுவன வளர்ச்சிக்கு இவர் சரியான நபர் என்கின்ற காரணமோ எதுவாக இருப்பினும் கல்யாண் இந்த பதவிக்கு சரியானவர் என்றே கூறப்படுகிறது. 

”நான் 2013 இல் ப்ளிப்கார்ட்டில் இணைந்துவிட்டு சிறிது காலம் கழித்து சென்றுவிடுவதாக ஒப்புக்கொண்டே சேர்ந்தேன். அதற்கு பின் பெரிய காரணம் ஒன்றுமில்லை. ஆனால் இது ஒரு புதிய அத்தியாயம். நான் இங்கே இருந்து என் பணியை செய்யவே வந்துள்ளேன்,” 

என்று கடந்த டிசம்பர் மாதம் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு கொடுத்த பேட்டியில் கல்யாண் கூறி இருந்தார். அவர் சிஇஒ’ ஆக நியமிக்கப்படுவதற்கு முன்பு இதை தெரிவித்தார். தற்போது உள்ள நிலையில், ஃப்ளிப்கார்ட் மாதத்திற்கு பல மில்லியன் டாலர் வருமானத்தை இழந்து வருகிறது. இதற்கு வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் ஒரு பெரிய காரணம். கஸ்டமர் சர்விசில் உள்ள குறைபாடுகள், விற்பனைக்கு பின் உள்ள சேவை, ரிட்டர்ன் மற்றும் ரீபண்ட் சேவை இவை அனைத்திலும் உள்ள பிரச்சனைகளை களையவேண்டிய நேரம் இது. 

இந்திய மக்கள் டிஜிட்டல் வர்த்தகத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் குறைகளை சரிசெய்து அமேசான் போன்ற பெரிய தளங்களை வென்று தங்களை நிலைநாட்ட வேண்டிய நிலையில் உள்ள ஃப்ளிப்கார்ட்டின் புதிய திட்டங்களை கல்யாண் அதிகாரத்தின் கீழ் எதிர்ப்பார்க்கலாம்.