31 வயதான தீபிகா நம்மை ‘வாழ, சிரிக்க, அன்பு செலுத்த’ கற்றுத் தருகிறார்!

0

அழகான புன்னகை, அழகிய கண்கள், பார்ப்பவர்களை வசிகரீக்கும் உடலமைப்பு என அனைத்து காலத்திற்கும் ஏற்ற கனவுக்கன்னியாகவே உயர்ந்து நிற்கிறார் தீபிகா படுகோன். தொழில்ரீதியாக வெள்ளித்திறையில் மிளிர்வது ஒரு புறம் இருக்க பல்வேறு நல்ல காரியங்களுக்கும் குரல் கொடுக்கிறார் தீபிகா. மனநல ஆரோகியத்திற்காக ’லிவ் லாஃப் லவ் ஃபவுண்டேஷன்’ 'Live Laugh Love Foundation' எனும் நிறுவனத்தை துவங்கியுள்ளார். NDTV துவங்கிய க்ரீனதான் பிரச்சாரத்தில் இணைந்துகொண்டார். மஹாராஷ்ட்ராவின் அம்பேகான் எனும் கிராமத்திற்கு முறையான மின்சார வசதி செய்து தரும் நோக்கத்துடன் இந்த பிரச்சாரத்தில் தன்னார்வலராக கலந்துகொண்டார்.

அவரது தந்தை ப்ரகாஷ் படுகோனின் ’ஒலிம்பிக் கோல்ட் க்வெஸ்ட்’ எனும்  பொதுநல நிறுவனத்திலும் தன்னை இணைத்துக்கொண்டார். மாடலிங், நடிப்பு, விளையாட்டு, மனிதநேயம் என அனைத்து துறைகளிலும் இந்த துணிச்சலான அழகிய நடிகை தன்னுடைய அடையாளத்தை பதியவைக்கிறார். இவர் தேசிய அளவில் பூப்பந்து வீரர் மற்றும் மாநில அளவில் பேஸ்பால் வீரராவார். ஜுஜுட்ஸு எனப்படும் தற்காப்புக் கலை பயின்றதால் ’சாந்தினி சவுக் டு சைனா’ திரைப்படத்தில் அனைத்து விதமான ஸ்டண்ட்களையும் செய்தார். 

வெற்றி என்ற வார்த்தைக்கு தொடர்புடையவராகவே திகழ்ந்தார். ’பிகு’ எனும் திரைப்படத்தில் அமிதாப் பச்சனின் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். ‘பாஜிராவோ மஸ்தானி’ திரைப்படத்தில் மஸ்தானி கதாப்பாத்திரத்தில் நடித்தார். டிஸ்ஸாட், வோக், மேபிலின், பெப்ஸி போன்ற பல தயாரிப்புகளுக்கு ப்ராண்ட் பிரதிநிதியாகவும் உள்ளார்.

பல பிரபல இதழ்களில் தீபிகா இடம்பெற்றிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ’ஃபோர்ப்ஸ்-ன் 100 செலிப்ரிட்டி’ பட்டியலில் 22 வது இடத்தைப் பிடித்தார். 2008-ல் இந்தியன் மேக்சிம் வெளியிட்ட ’ஹாட் 100’ பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட ’மோஸ்ட் டிசைரபிள் வுமன்’ பட்டியலில் முதலிடம் வகித்தார். 2013-ல் பீப்பிள்ஸ் மேகசின் ‘இந்தியாவின் மிகவும் அழகான பெண்’ என்று பட்டமளித்தனர்.

நாம் தீபிகா படுகோனிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்களை உள்ளன. அவர் ஒவ்வொரு பெண்ணுக்கும் மனம் திறந்து பல விஷயங்களை எடுத்துரைக்கிறார்.

1. என்னுடைய விருப்பங்கள் என் கைரேகையைப் போன்று தனித்துவமானது.

2. உன்னுடைய சொந்த முயற்சியால் அடையும் பலன் அதிக மகிழ்ச்சியளிக்கும்.

3. என்னை ஒருபோதும் பெரிய நட்சத்திரமாக நினைத்துக்கொள்வதில்லை. என் சக வயதுடைய ஒரு பெண்ணாகவே என்னைப் பார்க்கிறேன்.

4. க்ளாமர் துறையில் இருப்பதால் அழகான தோற்றத்துடன் இருக்கவேண்டியது அவசியம் என்பதை ஒப்புக்கொண்டாலும் மெலிந்த தோற்றத்துடன் இருப்பதுதான் அழகு என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.

5. நான் என்பது இந்த பிரபஞ்சத்தை குறிக்கிறது. என்னுடைய திசை எல்லையற்றது. இதுதான் என்னுடைய விருப்பம். 

6. “உங்கள் தேவையிலிருந்து எப்போதும் கவனத்தை சிதறவிடாதீர்கள். சிலர் உங்களை வீழ்த்த முயற்சிப்பார்கள். உங்களது நம்பிக்கையை குலைக்கும் விதமான நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படலாம். சில நாட்களில் நீங்கள் மனமுடைந்து போகலாம். சில நாட்களில் நீங்கள் நம்பிக்கை இழந்து காணப்படலாம். உணர்ச்சிப்பூர்வமாக வலுவாகவும் கவனத்தை சிதறவிடாமலும் இருப்பது மிகவும் அவசியமாகும். உங்களுக்கான வழியிலேயே செயல்படுங்கள். தவறு இழைத்துவிடுவோமோ என்கிற பயம் தேவையற்றது.

7. இந்திய பெண்கள் மிகவும் மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் அல்ல என்று நான் நம்புகிறேன். நான் மிகவும் மெலிந்த பெண் அல்ல. எனக்கு அதில் நம்பிக்கையும் இல்லை.  

8. என்னுடைய பெற்றோர் என்னை எப்போதும் அடித்ததில்லை. எது சரி எது தவறு என்பதை எனக்கு புரியவைத்தே நல்வழிப்படுத்தினார்கள். 

9. லட்சியத்துடன் இருப்பது சிறந்தது. அதே சமயம் அனைத்தையும் கணக்கிட்டுப் பார்க்கக்கூடாது. அசாதாரணமாக இருப்பது தவறில்லை. ஆனால் நான் எப்போதும் என் மனம் சொல்வதற்கு இணங்க நடந்துகொள்வதில்லை. என் இதயம் சொல்வதையே கேட்பேன். அதுவே எனக்கு சரியான தீர்வை அளித்துள்ளது.

10. நான் எப்போதும் நன்கு யோசித்த பிறகே பேசுவேன். மனதிற்கு தோன்றுவதை அப்படியே பேசும் ரகம் கிடையாது. நான் அதிக உணர்ச்சிகரமான பெண். ஆனாலும் அதிக வலிமையுடன் இருக்கிறேன். என் மனதை நன்கு புரிந்துவைத்திருக்கிறேன்.

21 நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பெண் குறுகிய காலத்தில் வெற்றிபெறமுடியும் என்பதை தீபிகா படுகோன் நிரூபித்துள்ளார். அவர் அண்மையில் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஆன்கில கட்டுரையாளார்: சரிகா நாயர்