இந்திய ராணுவப் படையில் சேர்ந்த முதல் பெண்மணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

0

1992 வரை பெண்கள் இந்திய ராணுவத்தில் சேர அனுமதிக்கப்படவில்லை. அப்போது ப்ரியா ஜின்கன் என்ற பெண், தலைமை ராணுவ அதிகாரி ஜென்ரல் சுனித் பிரான்சிஸ் ராட்ரிகஸ் அவர்களுக்கு ஒரு கடித்தத்தை எழுதி அதில் பெண்களை அனுமதிக்கக் கோரினார். அதன் பின் இந்திய ராணுவத்தில் சேர்ந்த முதல் ராணுவ அதிகாரி ஆனார் ப்ரியா.

பெண்கள், ஆண்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்ற நம்பிக்கை கொண்ட ப்ரியா, நாட்டிற்கு பணி செய்ய பெண்களுக்கும் வாய்ப்பளிக்கவேண்டும் என்று எண்ணினார். இந்த எண்ணம் அவருக்கு சிறுவயது முதல் இருந்து வந்தது.

ராணுவ உடை அணிந்து நாட்டிற்கு சேவை செய்வதை கனவாக கொண்டார் ப்ரியா. அதனால் ராணுவ தலைமை அதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பி அதற்கான பதிலையும் பெற்றார். அவரும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெண்களும் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள் என்று ஒப்புதல் அளித்தார். 

1992-ல் செய்தித்தாள்களில், இந்திய ராணுவத்தில் சேர பெண்களை விண்ணப்பிக்கச் சொல்லி விளம்பரம் வந்தது. தன் கடின உழைப்பால், ப்ரியா அதற்கு விண்ணப்பித்து, சென்னை ஓடிஏ-வில் பயிற்சி மேற்கொண்டு தன் ராணுவக் கனவை மெய்ப்பித்தார். 

தன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட ப்ரியா, 

25 பெண்கள் அடங்கிய எங்கள் முதல் குழு, ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட அதே பயிற்சியை மேற்கொண்டோம். ஒருமுறை ஆண்கள் இருந்த அதே நீச்சல் குளத்தில் பெண்களும் பயிற்சி எடுக்கவேண்டும்,” என்றும் கூறப்பட்டத்தை பகிர்ந்தார். 

யாருக்கும் அஞ்சாமல் செயல்பட்ட ப்ரியா, தீவிர பயிற்சிக்கு பிறகு, மார்ச் 6-ம் தேதி 1993-ல் இந்திய ராணுவப்படையில் இணைந்தார். காலாட்படையில் சேரவிரும்பியும், ப்ரியா ஒரு சட்ட பட்டதாரி என்பதால், அவர் அட்வகேட் ஜென்ரலாக நியமிக்கப்பட்டார். அப்போது போர் படையில் பெண்கள் பிரிவு இல்லை.  

ப்ரியா தன் பணியில் சந்தித்த முக்கிய நிகழ்வாக, முதல்முறை கோர்ட் மார்ட்சியல் விவாதத்தில் பங்கெடுத்தபோது கர்னல் ஒருவர் அதை தலைமை வகித்தார். அப்போது அவர் இதுபோன்று எத்தனை விசாரணையில் பங்கெடுத்து உள்ளீர்கள் என்று ப்ரியாவிடம் கேட்டபோது, தான் ஆறாவது முறை என்று பொய் சொன்னதாகவும், முதல் முறை என்றால் தன்னைப் பற்றி குறைத்து மதிப்பிடக்கூடும் என்று அஞ்சியதாகவும் கூறினார். அந்த வழக்கு விசாரணையை அவர் நன்கு கையாண்டுவிட்டப் பின் உண்மையை எல்லாரிடத்திலும் சொன்னபோது அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். 

இந்திய ராணுவப் படையில் சேர்ந்த முதல் பெண்மணி ப்ரியா என்பதால், அவருடைய சேர்க்கை எண் 001 என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பாட்ச் மேலும் பல பெண்களை ராணுவத்தில் சேர்வதற்கு உந்துதலாக இருந்துள்ளது.

கட்டுரை: Think Change India