பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டும் படுக்கையிலிருந்தே பள்ளி முதல்வராக செயல்படும் உமா ஷர்மா!

0

64 வயதான உமா ஷர்மா உத்திரப்பிரதேசத்தின் சகாரன்பூரில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியின் முதல்வராவார். 2007-ம் ஆண்டு இவரை பக்கவாத நோய் பாதித்தது. அந்நோய் மேலும் தீவிரமடைந்து 2010-ம் ஆண்டு முழுமையாக தாக்கியது. உமா முழுவதுவாக அசைவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரால் தலையையும் கைகளையும் மட்டுமே அசைக்கமுடியும். எனினும் உமாவின் மன உறுதி கடந்த ஏழு ஆண்டுகளாக படுக்கையிலிருந்தே தனது பள்ளியை நிர்வகிக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக உள்ளது.

முற்றிலும் படுத்த படுக்கையாக இருக்கும் உமா 1991-ம் ஆண்டு தனது கணவரை இழந்தார். அதற்கடுத்த ஆண்டு உமா ஒரு பள்ளியை நிறுவினார். அந்தப் பள்ளியை இன்று வரை நிர்வகித்து வருகிறார். உமா தனது கணவரை இழந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள்ளாகவே அடுத்தடுத்த துயரச் சம்பவங்களும் அரங்கேறின. 2001-ம் ஆண்டு அவரது 21 வயதான மகன் ராஜீவ் உயிரிழந்தார். 2007-ம் ஆண்டு அவரது மகள் ரிச்சாவும் உயிரிழந்தார்.

’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ உடனான நேர்காணலில் உமா குறிப்பிடுகையில்,

”நான் பக்கவாதத்தால் முற்றிலுமாக தாக்கப்பட்ட பிறகு மனமுடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனக்கு பிடித்த விஷயங்களில் தொடர்ந்து ஈடுபட விரும்பினேன். அன்றாடம் பள்ளியை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டேன். நேரடியாக ஆடியோ மற்றும் வீடியோ வாயிலாக பள்ளியுடன் தொடர்பில் இருக்க என் வீட்டிலும் இரு பள்ளிகளிலும் டிஷ் ஆண்டனாவைப் பொருத்தினேன்.”

உமா போபாலின் நுமைஷ் கேம்ப் பகுதியில் வசிக்கிறார். இது பள்ளியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளது. வீட்டின் அனைத்து மூலைகளிலும் சிசிடிவி கேமிராக்களை பொருத்தியுள்ளார். இதன் மூலம் வெவ்வேறு திரைகளில் அனைத்தையும் கண்காணிக்கிறார். அது மட்டுமல்லாமல் தனது எலக்ட்ரானிக் டேப்ளட்டைப் பயன்படுத்தி மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களை தொடர்பு கொள்கிறார். ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கிறார். பள்ளியில் 25 ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் உமாவின் நேரடி மேற்பார்வையில் பணியாற்றுகின்றனர்.

பள்ளியின் ஒருங்கிணைப்பாளரான சிம்பிள் மகானி குறிப்பிடுகையில்,

”உமா அவர்களது வழிகாட்டுதலுடன் எங்களது பள்ளி ஒவ்வொரு நாளும் வளர்ச்சியடைந்து வருகிறது. எங்களுக்கு எப்போது வழிகாட்டுதல் தேவைப்பட்டாலும் அவரை அணுகுவோம். மோசமான சூழலை எதிர்த்து போராடுவதில் மட்டுமல்ல சமுக நலனில் அக்கறை கொள்வதற்கும் அவரை காட்டிலும் சிறந்த உதாரணம் வேறில்லை,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA