2 ஆண்டுகளின் நிறைவில் பிரதமர் மோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளாரா?

0

கடந்த 10 நாட்களாக டெல்லியை விட்டு வெளியூர் சென்றிருந்தேன். செய்தித்தாளகளை புரட்டிக்கொண்டிருந்தபோது தான் திரு.மோடி பிரதமராகி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த செய்தியை படித்தேன். நேரத்தின் வேகம் நினைவுக்கு வந்தது. 2014 பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது போல் உள்ளது. அன்று மோடியை பற்றி இருந்த பதாதைகள் என் நினைவுக்கு வந்தது. "இனி மோடியின் ஆட்சி", "அச்சே தின்," போன்ற பிரச்சாரங்கள் பிரதானமாக அன்று இருந்தது. 

இன்று காலை மீண்டும் அதேப் போன்ற எழுத்துக்களை செய்தித்தாளில் பார்த்தேன். முதல் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில் அவை இருந்தது. இது ஒரு மாபெரும் பிரச்சாரம். மோடியை ஒரு பிம்பமாக பிரதிபலிக்க, அளவில்லாமல் செலவு செய்யப்பட்டுள்ளது. "எங்கள் நாடு மாறிவருகிறது, மேலும் இது தொடரும்" போன்ற வாசகங்கள் நம் நாடு பெரிய மாற்றத்தை நோக்கி பயணித்து அது வெற்றிகரமாக அடையப்பட்டதற்கு மோடி ஜி மட்டுமே காரணம் என மக்களுக்கு நிலைநாட்டப்படுகிறது. எல்லா அரசுக்கும் தனது வெற்றிகளை விளம்பரப்படுத்த உரிமை உண்டு. அதைப் பற்றி விவாதம் செய்ய விரும்பவில்லை நான். ஆனால் ஒரு அறிவுள்ள குடிமகனாக கேட்க விரும்புவதெல்லாம் "நம் நாடு உண்மையில் மாற்றம் அடைந்துள்ளதா?" என்றுதான்.

ஒரு அடிப்படையான கேள்வியை கேட்போம்- "நாம் எதற்காக 2014ல் மோடி அவர்களுக்கு ஓட்டு போட்டு அவரை பெரும்பான்மையுடன் வெற்றிபெற வைத்தோம்? ஊழலை போக்க, நம்பிக்கையில்லாத முடிவுகளை களைய, வளர்ச்சித்திட்டங்களை பெருக்க, நமது பொருளாதாரத்தை உயர்த்தத் தானே அவரை அரியணை ஏற்றினோம்? இப்போது கேள்வி என்னவென்றால் அவரது அரசு உண்மையில் இவற்றை செய்துள்ளதா? எனக்குத் தெரியும் ஊடகங்களின் பிரச்சாரங்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மூலம் மோடி ஒரு புரட்சிகர தலைவர் என்றும் நாடு அவரால் மாற்றத்தை கண்டுள்ளது என்றும் அங்கீகரிப்படுவார் என்று, ஆனால் அதுதான் உண்மையா?

மன்மோகன் சிங்கின் அரசு, வரலாற்றிலேயே ஊழல்மிகு அரசாக சொல்லப்படும். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தனர். மோடி அவர்களின் நம்பிக்கையாய் வந்தார். அவர் ஊழலை அடியோடு ஒழிப்பார் என மக்கள் நம்பினர். அவர் பதவியேற்ற உடன்- "நான் ஊழலில் ஈடுபடமாட்டேன். மற்றவர்களையும் ஊழல் செய்ய அனுமதிக்கமாட்டேன்," என்றார். அவருடைய அமைச்சரவை அந்த நம்பிக்கையை பொய்யாக்கியது. அதிலிருந்த பல உறுப்பினர்கள், ஊழல் குற்றச்சாட்டுடனும், கொடுமையான குற்றங்கள் புரிந்துள்ளவர்களாகவே இருந்தனர். அவர்களை அமைச்சர்களாக்கியதே குற்றங்களை அங்கீகரிப்பது போல் ஆனது. இதுவே மோடியின் கொள்கையில் விழுந்த முதல் ஓட்டை.

திரு.மோடி ஊழலை ஒழிக்க நினைத்திருந்தால் இன்னும் ஏன் லோக்பாலை நிறுவவில்லை என்று மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். லோக்பால் பில் மன்மோகன் சிங் அரசின் போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் இன்றுவரை அதை வழக்கத்தில் காண முடியவில்லை. மோடியின் அரசு அகஸ்டா வெஸ்ட்லான்ட் வழக்கில் காந்தி, நேரு குடும்பங்களை தாக்க எடுத்த நடவடிக்கையில் காட்டிய முனைப்பை இதில் காட்டவில்லை. அதேப்போல் ராபர்ட் வாத்ரா மீதான நிலபேர வழக்கில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்துள்ளதாகவே பல கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

சீனாவை விட இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பெருகி வேகமாக வளர்ந்து வருவதாக மோடியின் அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் நிதர்சனத்தில் தொழில்களையும், வணிகத்தையும் பெருக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. நாளிதழ்களின் செய்திகளின் படி, "2015-16 இல் துறைவாரியான வளர்ச்சி 2.7% குறைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4.5% அளவு குறைவு என்கிறது அரசின் கணக்கு." ஏற்றுமதி குறைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு மோசமாகவே உள்ளது. ஆர்பிஐ ஆளுனர் ரகுராமன் ராஜனின் முயற்சிகளுக்குப் பின்பும் டாலருடனான ரூபாயின் மதிப்பு குறைவாகவே உள்ளது. 

வெளிநாடுகளின் முதலீட்டு இடமாக இன்றளவும் இந்தியா இல்லை. அதைவிட முக்கியமாக வேலைவாய்ப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. 2014 இல் இளைஞர்களின் அருமையான தலைவராக இருந்த மோடி அவர்களுக்கு நிலவை தர உத்தரவாதம் தந்தார். ஆனால் செய்திகளில் குறிப்பிடுவது போல் "வேலைவாய்ப்பு 6 வருடங்களில் இல்லாத அளவு குறைவாக உள்ளது." "2015 முதல் 9 மாதங்களில் வெறும் 1.55லட்சம் புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது." அரசு தரும் வளர்ச்சிக்கான கணக்குகளை வல்லுனர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர், சந்தேகமும் படும் நிலையில் உள்ளது. மேலும் இதுவரை எந்த ஒரு பெரிய அளவு திட்டமும் தொடக்கப்படவில்லை. அரசின் திமிரான நடவடிக்கையால் ஜிஎஸ்டி வலுவிழந்து கிடக்கிறது. 

மோடி ஒருங்கிணைந்த கூட்டாட்சி தத்துவத்தைப் பற்றி பேசுகிறார், ஆனால் அருணாச்சலம், உத்தரகாண்ட், டெல்லியில் திருமதி.இந்திரா காந்தியை போல் எதிர்கட்சிகளை இரக்கமின்றி நசுக்குகிறார். சட்டத்துறையும் வருந்திக்கொண்டிருக்கிறது. இந்திய தலைமை நீதிபதி பொது இடத்தில் மோடியின் முன்பு அழுது, காலியிடங்களை நிரப்பச்சொல்லி வேண்டுக்கோள் விடுக்கும் நிலை உள்ளது. 

மோடியின் வெளிநாட்டு உறவுகளை அவரது ஆதரவாளர்கள் மட்டுமே பாராட்டுகின்றனர். இந்திய பிரதமர்களிலேயே அதிக வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட பிரதமர் என்ற சிறப்பைப் பெற்ற மோடியால் உருபடியாக எதையும் சாதிக்கமுடியவில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மண்ணில் முதலீடு செய்யத் தயாராக இல்லை. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் நல்ல உறவு இருந்தும், இந்திய-பாக் உறவு மோசமாகத்தான் உள்ளது. காஷ்மீர் மீண்டும் பிரச்சனையில் உள்ளது, எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ஐஎஸ்ஐஎஸ் கொடிகள் காஷ்மீரின் முன்பைவிட அதிகம் பறக்கின்றது. 

அதே சமயம் பாகிஸ்தான் - சீனாவின் உறவு பலப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் சீனாவை இந்திய எல்லை அருகே சாலை அமைக்க அனுமதித்துள்ளது. இந்தியாவிடம் நட்புறவாய் இருந்துவந்த நேபாளும் இன்று கோபமாக உள்ளது. நேபாளத்தின் உள்நாட்டு விவகாரத்தில் மோடி அரசு தேவையில்லாமல் தலையை நுழைத்து, இன்று அந்த சமூக இந்தியாவுக்கு எதிராக உள்ளது. இலங்கையும் சீனாவிடம் நெருங்கிவிட்டது. சீனா இந்தியாவின் எதிராளியாகப் பார்க்கப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மோடி சமரசப்படுத்த முயற்சி எடுத்தும், ஜெய்ஸ் தலைவர் அஜார் மசூத்தை தீவிரவாதியாக முத்திரை குத்த சீனா மறுத்துள்ளது. நமது அண்டை நாட்டவர்களுடனான உறவு என்றும் இல்லாத அளவு மோசமாக உள்ளது. 

வகுப்புவாத நல்லிணக்கத்தில் மோடி காண்பித்த மெளனம் பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இன்று சிறுபான்மையினர் ஒருவித பய உணர்வுடன் சக குடிமகன்களுடன் இணையாக நடத்தப்படாமல் அச்சத்தில் வாழ்கின்றனர். அக்லாக் கொலையிலும், சிறுபான்மையினர் மீதான தாக்குதலின் போதும் மோடி காண்பித்த மெளனம் அவர் மீதான நம்பிக்கையை குலைத்துள்ளது. தேசியவாதம் என்னும் சொல்லே கேள்விக்குறியாகி உள்ளது, அமீர் கான், ஷாருக் கான் போன்றோர் மீதான தாக்குதல் இதை மேலும் உறுதி படுத்தியுள்ளது. 

இன்று, நாடு மதத்தின் அடிப்படையில் பிரிந்து கிடக்கிறது. இதை மாற்ற பிரதமர் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்திய மக்கள் அவரை பெரியதொரு நம்பிக்கையோடு தேர்ந்தெடுத்தனர், ஆனால் 2 ஆண்டுகள் கழித்து நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். இந்திய மக்கள் இன்று ஏமாற்றப்ட்டுள்ளதாக எண்ணுகின்றனர், அதை பிரதமர் மறுக்கமுடியாது. இன்னும் 3 ஆண்டுகள் அவருக்கு உள்ளது, ஆனால் அவர் வரலாற்றுக் காலங்களில் நடந்தமைக்கு இன்று பழிவாங்க முற்படவில்லை என்பதை மக்களுக்கு நிரூபிக்கவேண்டும். கடந்த கால சித்தாந்தத்தில் வாழலாம், ஆனால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அவ்வாறு இருத்தல் கூடாது. 2019 இல் மீண்டும் மக்களின் ஆதரவை பெறவேண்டும் என்பதை அவர் மறக்கக்கூடாது...

கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

முந்தைய கட்டுரைகள்:

ஊழலுக்கு எதிரான மக்கள் புரட்சி தேவை!

ஆம் அத்மியின் ‘ஒற்றை-இரட்டை’ வழிமுறை டெல்லியின் சுற்றுச்சூழலை காப்பாற்றுமா?